சனி, 18 மே, 2013

நாஞ்சில் சம்பத்தின் வாய் பாரீர் : காக்கை புட்டி பேர்வழி, அழுக்கு..இழுக்கு

சென்னை: தேமுதிக தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை 'பேட்டை பிஸ்தா, புட்டி பேர்வழி, காக்கை, மாயாஜால பேர்வழி' என்ற அடைமொழிகளால் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் விஜயகாந்த்தை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது: தண்ணியடிப்பவன் படம் இதுவரை விஜயகாந்த் மட்டும்தான் பிதற்றி வந்தார். இப்போது பிரேமலதாவும் தொடங்கிவிட்டார். நீதியை நிலைநாட்டும் இடங்களில் எல்லாம், மகாத்மா காந்தி படம் இருக்கும். மனிதநேயம் குடியிருக்கும் இடங்களில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் இருக்கும். தன்மானம் உள்ள இடத்தில், தந்தை பெரியார் படம் இருக்கும். தமிழ்நாட்டை நேசிப்பவர்கள் இல்லங்களில், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா படம் இருக்கும். பசித்த வயிற்றுக்கு பால் சோறுபோட்டு அன்னம் பாலிக்கும் இடத்தில் எல்லாம், எங்கள் அன்னபூரணி மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா படம்தான் இருக்கும். சரக்கு விற்கும் இடங்களில் தண்ணி அடிப்பவன் படத்தைத்தான் வைக்க வேண்டும். இதை அண்ணி (விஜயகாந்த் மனைவி பிரேமலதா) புரிந்துகொள்வது நல்லது. அவர் என்ன பேசுகிறார் என்று எதிரில் இருப்பவர்களுக்கே புரியவில்லை. அவர் பேசவில்லை. அவரை ஒரு சக்தி பேசவைக்கிறது. பேட்டை பிஸ்தா ஒரு எதிர்க்கட்சித் தலைவர் புள்ளிவிவரங்களை அள்ளிக்கொட்டி ஆதாரங்களை அடுக்கிக்காட்டி ஆளும் அரசாங்கத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுகிற ஒரு பேட்டை பிஸ்தாவைப் போல, எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார். மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சொல்வதற்கு அவருக்கு வக்கும் இல்லை. துப்பும் இல்லை. இவர் எதிர்க் கட்சித் தலைவர் ஆனதே எங்கள் அம்மா போட்ட பிச்சை. அவருக்கு ஜெயிக்கத் தெரிந்தது ஒரே ஒரு தொகுதியில்தான். அம்மாவின் கருணைப் பார்வையால் 29 இடங்களையும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றார். எனக்கு ஜெயிக்கத் தெரியும் என்று அவர் சொல்வதைக் கேட்டு, அவரது கட்சிக்காரர்களே சிரிக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்க்கிறோம். காக்கை .. புட்டி பேர்வழி,,, மாயாஜால பேர்வழி.. அழுக்கு..இழுக்கு அகலிகை மீது ராமன் கால்வைத்ததால் சாபவிமோசனம் கிடைத்தது. காக்கையின் மீது அம்மா கால் வைத்ததால் அவர் எதிர்க் கட்சித் தலைவராகிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆளும் கட்சிக்கு 95% வெற்றி கிடைத்தது கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிடைக்காத இந்த வெற்றி, அம்மா ஆட்சிக் காலத்தில் சாத்தியமானது. கட்டிய மனைவிக்காகவும் மச்சானுக்காகவும் மட்டும் கட்சி நடத்துகிற புட்டிப் பேர்வழி, விஸ்வரூபம் எடுப்பதெல்லாம் நடக்கிற காரியமல்ல. கூவம், பாவத்தைப் போக்கினாலும் போக்கும்... கள்ளிப்பால், கண் நோயை நீக்கினாலும் நீக்கும்... ஓலமிடும் கடல், ஊமை ஆனாலும் ஆகும். ஒரு நாளும் இனி தே.மு.தி.க தேறாது. அவர் அகந்தையின் உச்சியில் நின்று ஆரவாரம் செய்கிறார். இந்த மாயாஜாலப் பேர்வழி மண்ணைக் கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை. கோவை கருத்திருமன், பொன்னப்ப நாடார், அகிலமே ஆச்சரியப்படும் மாண்புமிகு அம்மா ஆகியோர் உட்கார்ந்த எதிர்க் கட்சி ஆசனத்தில் எதுவுமே தெரியாத ஒருவர் உட்கார்ந்திருப்பது தமிழகத்துக்கு இழுக்கு. இந்த அழுக்கும் இழுக்கும் எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்று வறுத்தெடுத்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக