ஞாயிறு, 19 மே, 2013

கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்

புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நடந்துள்ள கிரிக்கெட் சூதாட்டத்தையடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் தொடர்புகளை அலசும் போது, அவற்றின் கரங்கள் அனைத்தும் தாவூத் கும்பலை நோக்கியே திரும்புவதால் இப்பிரச்னையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட புகார்கள் எழுந்த போது, இதுகுறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், இந்த சூதாட்டங்களுக்கான மூளை வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்தார். அவரின் அந்த வார்த்தை இப்பிரச்னையில் மும்பை நிழலுலக தாதாக்களின் கைவரிசையும், அதன் பின்னணியில் தாவூத் இப்ராகிமின் கூட்டமும் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. நீரஜ் குமார் தனது பேட்டியின் போது, கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக தாங்கள் விசாரணையை துவக்கிய போது, தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மும்பை நிழலுலக தாதாக்கள் இந்திய புக்கிகளுடன் இணைந்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தில் மூளையாக தாங்கள் கருதுபவர் துபாய் எண்ணை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

நீரஜ்குமாரின் இந்த பேச்சு, இந்த விவகாரத்தின் பின்னணியில் தாவூத் இருப்பதை உறுதி செய்வது போல் இருந்தது. எனினும் இவ்விவகாரத்தில் தாவூத் இல்லை என நீரஜ்குமார் மறுப்பு தெரிவித்தார். ஆனால் தற்போது நடந்து வரும் விசாரணையின் தகவல்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்துபவையாகவே உள்ளன. ஏனெனில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 10 புக்கிகளில் 3 பேர் தாவூத் கும்பல் அதிகம் செயல்படும் பாகிஸ்தான் மற்றும் துபாய்க்கு போன் செய்திருப்பது, இதில் தாவூத் கும்பல் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்வது போல் உள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஜித் சண்டிலாவின் வக்கீல், தனக்கு தாவூத் கும்பலிடமிருந்து மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.


இந்த சந்தேகங்களுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் கிரிக்கெட் சூதாட்டங்களில் தாவூத் கும்பல் மிகப்பெரிய அளவில் நடத்தி வந்துள்ளன. சூதாட்ட கும்பலை முழுமையாக மேற்பார்வையிடுவது தாவூத்தின் சகோதரர் அனீஸ் தாவூத் என கூறப்படுகிறது. தாவூத் கும்பலைச் சேர்ந்த சோட்டா சகீல் உதவியுடன் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த சூதாட்ட வலை பரவியிருந்தது. இவர்களின் முக்கிய கூட்டாளிகளாக சுனில் துபாய் மற்றும் டாக்டர் கராச்சிவாலா ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தான் இந்திய புக்கிகளுக்கும், அனீஸ் தாவூதுக்கும் இடையே மீடியேட்டராக செயல்பட்டவர்கள். சுனில் துபாய்க்கு கீழே, டிக்கு, ஜூபிடர், ஜூனியர் கோல்கட்டா மற்றும் ரமேஷ் வியாஸ் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களில் டிக்கு டில்லி போலீசாராலும், ரமேஷ் வியாஸ் மும்பை போலீசாராலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களது பின்னணியையும் பார்க்கும் போது, இதில் நிச்சயம் தாவூத் கும்பலின் கைவரிசை இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்பதே உண்மை. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக