வெள்ளி, 17 மே, 2013

எழும்பூர் கோர்ட் வளாகத்தில் அரிவாளால் வெட்டினார்

சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில், கொலை வழக்கில் தொடர்புடையவரை, சக குற்றவாளி அரிவாளால் வெட்டினார். சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, இ-பிளாக்கை சேர்ந்தவர், சலீம், 42; கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத் தலைவர், ரபீக் ராஜாவுக்கும், 40, தண்ணீர் பந்தல் திறப்பு விழா, பேனர் வைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சலீம் உள்ளிட்டோர் சேர்ந்து கடந்த, 2010ல், ரபீக் ராஜாவை கொலை செய்தனர். இதில் சலீம், மூர்த்தி, அண்ணாதுரை, 39, அக்பர் பாஷா, உசேன், காதர் பீவி ஆகிய, ஆறு பேர் மீது, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மூர்த்தி, சேலம் மாவட்டம், தொப்பூரில் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, ரபீக் ராஜா, கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக, சலீம், அண்ணாதுரை இருவரும், எழும்பூர் கோர்ட்டிற்கு, நேற்று தனித்தனியாக வந்தனர். சலீம் தனது மனைவி ஜமீலா மற்றும் மகன்களுடன் வந்திருந்தார். "அடுத்த மாதம் குற்றப் பத்திரிக்கை வழங்கப்படும்' என, கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலை, 11:40 மணிக்கு, எழும்பூர் ஐந்தாவது கோர்ட் மாஜிஸ்திரேட் அலுவலகம் அருகே உள்ள மரத்தடியில், மனைவி மகன்களுடன், சலீம் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த, அண்ணாதுரை, அரிவாளால், சலீமின் வலது புற கழுத்து மற்றும் வலது கையில் வெட்டினார். இதையடுத்து, மனைவி, மகன்களுடன் ஓடிய சலீம், உயிர் பயத்தில் கத்தியபடியே, ஐந்தாவது மாஜிஸ்திரேட், அலுவலகத்துக்குள் புகுந்து விட்டார்.

ரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே ஒருவர் ஓடி வருவதைக் கண்ட, கோர்ட் பணியாளர்கள், கதவை தாழிட்டனர். இதையடுத்து, அண்ணாதுரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கோர்ட் ஊழியர்கள், "108' ஆம்புலன்ஸ் மூலம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, சலீமை அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன? ; சலீமும், அண்ணாதுரையும், 25 ஆண்டு கால நண்பர்கள். ரபீக் ராஜா, கொலை வழக்கில் தானும் சிக்கியதால், சலீம் மீது, அண்ணாதுரை கோபத்தில் இருந்தார். அதனால் தான், சலீமைத் தீர்த்துக்கட்ட முயற்சித்துள்ளார்.

மூன்றாவது சம்பவம் ; கடந்த, 1996ம் ஆண்டு ஜூலை மாதத்தில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி விஜயகுமார், கோர்ட் வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த, 2008ம் ஆண்டு, பிப்., 22ம் தேதி, வழக்கறிஞர் ரஜினி, கோர்ட் வாசலியே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூன்றாவது சம்பவமாக, நேற்று கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதுdinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக