புதன், 22 மே, 2013

2 ஜி அலைக்கற்றையில் அத்தனை பெரும் பம்முகிறார்கள்

08-2g-4
08-2g-22 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, “அந்த முறைகேட்டிற்கான மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது சுமத்தியும், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரை அப்பழுக்கற்ற யோக்கியர்களாகச் சித்தரித்தும்” நகல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினர்களின் கைகளுக்கு வரும் முன்பே பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. “இது குழுத் தலைவர் பி.சி.சாக்கோவின் கைங்கர்யம்” என பா.ஜ.க., தி.மு.க., போலி கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்த வரைவு அறிக்கை, “முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல; அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்துள்ள பல்வேறு உண்மைகளை – ஆ.ராசா மட்டுமின்றி, அந்த முறைகேட்டில் யார் யாருக்கு என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து அம்பலமாகிவரும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆ.ராசாவை மட்டும் பலிகிடாவாக்கும் அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுமாகும்.

2 ஜி ஊழல் வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசா, “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட சமயத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மைய அரசின் சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த கூலம் வாகன்வாதி ஆகியோருடன் ஒதுக்கீடு தொடர்பாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டுத்தான், அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இம்முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, அவரின் ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட்டன” எனக் கூறிவருவதோடு, இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் சாட்சியம் அளிக்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுள் தி.மு.க., பா.ஜ.க., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள், ஆ.ராசாவைச் சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இக்கோரிக்கையைக் குழுவின் தலைவரான சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, ஒருவரைச் சாட்சியமாக அழைப்பதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஆ.ராசாவைச் சாட்சியாக அழைப்பதைத் தன்னிச்சையான முறையில் ஒதுக்கித் தள்ளிவருகிறார்.
கடந்த மார்ச் மாத மத்தியில் ஷாலினி சிங் என்ற பத்திரிகையாளர் இந்து நாளிதழில், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பும், அதன் பின்பும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்பொழுது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிற்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருந்த குறிப்புகளையும் வெளியிட்டு, அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமருக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என நிறுவியிருந்தார். இந்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், 2 ஜி வழக்கில் முதல் குற்றவாளியான ஆ.ராசாவின் சாட்சியம் எவ்வளவு முக்கியத்துவம் வாந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, ஆ.ராசாவை நேரடியாக அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, குழு உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே ஆ.ராசாவிற்குச் சில கேள்விகளை அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்திவிட்டதைப் போல நாடகமாடுகிறார்.

ஆ. ராசாவைச் சாட்சியம் சொல்ல அழைத்தால், அவர் மன்மோகன் சிங்கின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்திவிடுவார் என்பதாலேயே, அவரை அழைக்க மறுக்கும் சாக்கோ, ராசாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்ல தயாராக இருப்பவர்களை அல்லது அப்படிச் சொல்ல தயாரிக்கப்பட்டிருப்பவர்களை வெற்றிலை, பாக்கு வைத்து சாட்சியம் சொல்ல அழைக்கிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலும், தற்போதைய அட்வகேட் ஜெனரலுமான வாகன்வாதி; அலைக்கற்றை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்டதற்கும், ஆ. ராசாவிற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும் இந்த உள்நோக்கமும், பாரபட்சமான அணுகுமுறையும்தான் காரணம்.
அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி, முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் பெஹுரா போன்றவர்கள் ஆ.ராசாவிற்கு எதிராகச் சாட்சியம் அளித்திருக்கும்பொழுது, தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு ஆ.ராசாவிற்கு வாய்ப்பளிப்பதுதான் இயற்கையான நீதியாகும். ஆனால், மன்மோகன் சிங்கையும் ப.சிதம்பரத்தையும் அப்பழுக்கற்றவர்களாகக் காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே விசாரணையை நடத்தி, சாட்சிகளை அழைப்பதிலும், விசாரிப்பதிலும், சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதிலும் பாரபட்சமான முறையில் நடந்துகொண்டு, மோசடியான அறிக்கையைத் தயாரித்துக் கசியவிட்டிருக்கிறது, காங்கிரசு.
மன்மோகன் சிங் ஏதுமறியா அப்பாவியா?

“ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் விட மறுத்து, அவற்றை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலே விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்; அலைக்கற்றைகளை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்க முடிவு செய்த ஆ.ராசா, அதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாளைத் திடீரென மாற்றியமைத்து, சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்.” – இவைதான் ஆ.ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுள் முக்கியமானவை. இந்தக் குற்றங்களையெல்லாம் ஆ.ராசா, பிரதமருக்குத் தெரியாமலும், அவருடைய அறிவுரைகளை மீறியும், தன்னிச்சையாகவும், மனம்போன போக்கிலும், பொதுநலனுக்கு விரோதமாகவும் செய்திருப்பதாகத் தேசிய ஊடகங்கள்; அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்; சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் திரும்பத்திரும்பக் கூறி வருகின்றனர். ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மார்ச் மாத மத்தியில் இந்து நாளிதழில் வெளியாகியிருக்கும் ஆதாரங்கள், ஆ.ராசா மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கும் முக்கிய பங்கிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. “பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது” என ஆ.ராசா திரும்பத்திரும்பக் கூறிவருவதையும் நிரூபிக்கின்றன.
ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, நவ.2, 2007-க்கும் ஜூலை 2, 2010-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏழு கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் இருவருக்கு இடையேயும், அவர்கள் இருவரின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு இடையேயும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. இவற்றுள் நவ.2, 2007 அன்றும், டிச.26, 2007 அன்றும் ஆ.ராசா, பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதங்களும், அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவுகளும் முக்கியமானவை.
நவ.2, 2007 அன்று எழுதப்பட்ட கடிதத்தில், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றப் போவதாக ராசா தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைச் செய்தால் பல நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது தெரிந்திருந்த போதும் பிரதமர் அலுவலகம் இந்த மாற்றம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல், அலைக்கற்றைகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது குறித்தும் பட்டும்படாமல் பொத்தாம் பொதுவாக அறிவுரை வழங்கி, ராசாவிற்குப் பதில் கடிதம் அளித்தது.
08-2g-5
2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் அல்லாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும்தான் வழங்க வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், ராசா இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள மறுப்பார் எனத் தெரிந்துதான், பிரதமர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்பதை டிச.26, 2007-க்குப் பின் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
ஆ.ராசா டிச.26, 2007 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் முறையில் சில மாற்றங்களைச் செய்யப் போவது பற்றித் தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைக் காட்டித்தான், ஆ. ராசா சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் யோக்கியவானாக நடந்து கொண்டார் எனக் கூறப்படுவது உண்மையென்றால், அவர் இந்த மாற்றத்தைச் செய்யக்கூடாது எனத் தெளிவாக ராசாவிற்கு உத்தரவிட்டுத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.
பிரதமரின் அறிவுரைப்படி, அச்சமயம் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ. நாயரும், பிரதமர் அலுவலகத்தின் மற்றொரு செயலராக இருந்த புலோக் சட்டர்ஜியும் ராசாவின் டிச.26, 2007-ஆம் தேதியிட்ட கடிதத்தை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விவாதித்து, இம்மாற்றம் தொடர்பாக சில ஒப்பீடுகளைச் செய்து, நான்கு பக்க அளவிற்கு அட்டவணைகளைத் தயாரித்து, ஆ.ராசா எடுக்க உத்தேசித்திருந்த நான்கு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளலாம் என எழுத்துப்பூர்வமாகக் குறிப்புகளைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பினர். இது மட்டுமின்றி, ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களை அளிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, அச்சமயத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்தவரும், 2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவருமான சித்தார்த் பெஹுராவுக்கும் பிரதமர் அலுவலகச் செயலர் புலோக் சட்டர்ஜிக்கும் இடையே இம்மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
மேலும், புலோக் சட்டர்ஜி தயாரித்த குறிப்பில், “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு (6.2 மெகாஹெர்ட்ஸ்) அப்பாலுள்ள அலைக்கற்றைகளைத்தான் ஏலத்தில் விட வேண்டும்; ஆரம்பகட்ட அலைக்கற்றைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த வேண்டியதில்லை” எனப் பரிந்துரைத்துள்ளார். மேலும், “அலைக்கற்றைகளைப் பெற 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஏலமுறையைப் பின்பற்றுவதுதான் கொள்கைப்படி சரியாக இருக்கும் என்றாலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமையைத் தொடரலாம்” எனக் குறிப்பிட்டு ஆ.ராசாவின் முடிவை ஆதரித்துள்ளார். புலோக் சட்டர்ஜி தயாரித்து அளித்த இந்தக் குறிப்புகளை அங்கீகரித்து, பிரதமரின் முதன்மைச் செயலர் டி.ஏ.கே. நாயர் ஜனவரி 6, 2008 அன்று – ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களைக் கொடுப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகக் கையெழுத்திட்டார்.
08-2g-6
ஆ.ராசா ஜனவரி 10, 2008 அன்று அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்புதல் கடிதங்களைக் கொடுத்துவிட்டதை அறிந்துகொண்ட பிரதமர், “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப இது தொடர்பான குறிப்புகளை மாற்றித் தனக்கு அனுப்புமாறு” தனது செயலர்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த உத்தரவின் அடிப்படையில், “முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் செய்யப்பட்ட மாற்றங்கள்; ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் ஆரம்பநிலை அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது” ஆகிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அனுமதிக்குமாறு கோரி, ஜனவரி 15, 2008 அன்று மீண்டும் குறிப்புகளை அனுப்பினார், புலோக் சட்டர்ஜி.
08-2g-7
நியாயமாகப் பார்த்தால் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முடிவுகளுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து, அதனை எழுத்துப்பூர்வமாக ஆ.ராசாவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ மிகவும் கைதேர்ந்த கிரிமினல்களுக்கே உரிய நரித்தனத்தோடு, “இந்த முடிவுகளை சாதாரணமாகத் தெரிவித்தால் போதும். கடிதம் எழுதி முறையாகத் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், இந்த முடிவுகளோடு தன்னைச் சம்பந்தப்படுத்தாமல், சற்று எட்ட நிறுத்துமாறு” ஜனவரி 23, 2008 அன்று, தனது தனிச் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் மூலம் உத்தரவிடுகிறார். “இந்த உத்தரவிற்கேற்ப தொலைத்தொடர்புத் துறையிடம் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதாக” புலோக் சட்டர்ஜி கோப்பில் குறிப்பு எழுதி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துக் கொள்வதற்கும், ஒருவேளை அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையானால், ஆ.ராசாவைப் பலியிட்டு தான் தப்பித்துக் கொள்ளும் முன்யோசனையோடுதான், பிரதமர் மன்மோகன் சிங் இந்த முடிவுகளிலிருந்து எட்ட இருக்க விரும்பியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த எட்ட இருக்கும் விருப்பம் கிரிமினல் சட்டத்தின்படி சாட்சியங்களை அழிப்பதற்குச் சமமாகும். தொழில்முறைக் குற்றவாளிகளால் மட்டுமே இது போன்று சிந்திக்க முடியும்.
இந்த விசயத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அலைக்கற்றை ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கிற்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் அனைத்தும் இன்றும் உயிரோடு உள்ளன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, தன்வசம் தரப்பட்ட இந்த சாட்சியங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு புறக்கணித்து விட்டு, ஆ.ராசாவைப் பலிகிடா ஆக்கியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து அளித்த தீர்ப்பில், இந்த சாட்சியங்கள் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்துவிட்டது.
ப.சிதம்பரத்தின் பங்கு
08-2g-8
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில்தான் 2008-இலும் வழங்க வேண்டும் என மைய அரசிற்கு அறிவுறுத்தியிருந்தாலும், இதனை தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. இந்தத் தொலைதொடர்பு கமிஷனின் உறுப்பினர்களுள் இருவர் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொருபுறமிருக்க, 2ஜி அலைக்கற்றைகளுக்கான விலையைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது; நிதியமைச்சகத்துடன் விவாதித்து, அந்த அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று 2003-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படிருந்தது. இந்த இரண்டு நிபந்தனைகளும் 2ஜி அலைக்கற்றைக்கான விலையைத் தீர்மானிப்பதில் நிதியமைச்சருக்குள்ள பொறுப்பை எடுத்துக் காட்டுகின்றன.
2 ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த சமயத்தில் நிதியமைச்சகத்தின் செயலராக இருந்த டி. சுப்பாராவ், “2ஜிஅலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையின்படி விற்பனை செய்யக்கூடாது; இந்த விற்பனையை உடனே நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு, நவ.22, 2007-இல் தொலைத்தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதினார்.
டி. சுப்பாராவ் தனது கடிதத்தில் குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “கைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பொதுநலன் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், ஒதுக்கீட்டில் நட்டமேற்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது” எனப் பிறழ் சாட்சியமளித்தது தனிக்கதையாகும்.
“தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் விலையைத் தீர்மானிப்பதில் அமைச்சகத்தின் உரிமை” ஆகியவற்றைக் குறிப்பிட்டு, டி.சுப்பாராவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கடிதம் எழுதினார், ஆ.ராசா. இந்த இரண்டு கடிதங்களும் அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அவரோ இந்தக் கடிதங்கள் குறித்து எந்த முடிவையும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்தார்.
2 ஜி அலைக்கற்றைகளின் விலையைத் தீர்மானிப்பது குறித்து 2007-ஆம் ஆண்டு தொடங்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துவந்த போதும், அதன் விலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம், ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கடிதங்களைக் கொடுத்த நாள் (10.1.2008) வரை கூட்டப்படவேயில்லை. குறிப்பாக, 9.1.2008 அன்று கூடுவதாக இருந்த தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின், 15.1.2008 அன்று கூடிய தொலைத்தொடர்பு கமிசன் அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
08-2g-9
ஆ.ராசா 10.1.2008 அன்று அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் கடிதங்களை மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தார். அலைக்கற்றைகள் பின்னர்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொலைத்தொடர்பு கமிசனின் எதிர்ப்பை பிரதமர் அலுவலகமோ, நிதியமைச்சகமோ உண்மையாகவே மதித்திருந்தால், அந்த ஒதுக்கீட்டை உடனடியாகவே ரத்து செய்திருக்க முடியும். ஆனால், ப.சிதம்பரமோ அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து இரண்டு ஆண்டுகளாக மௌனமாக இருந்துவிட்டு, 15.1.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த காலம் முடிந்து போனதாக இருக்கட்டும்” என ஒருபுறம் பட்டும்படாமல் எழுதிவிட்டு, இன்னொருபுறம், “ஆரம்பகட்ட அலைக்கற்றைகளை சந்தை விலையில் விற்கத் தேவையில்லை” என்றும் கூறியிருந்தார்.
இதன் பிறகு, 4.7.2008 அன்று அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் ப.சிதம்பரம் ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளைக் கூடுதல் விலையில் விற்பது குறித்துத்தான் பேசியிருக்கிறார். “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளை 2001-ஆம் அண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பது தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும் ஆ.ராசாவிற்கும் இடையே ஒத்த கருத்து இருந்ததை அன்று நான் அறிந்துகொண்டதாக” பிரதமர் மன்மோகன் சிங் இந்தக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும், “அலைக்கற்றையை ஏலத்தில் விட வேண்டும் என நிதியமைச்சகம் கூறி வந்தது” என்று ப.சிதம்பரம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளெல்லாம் வெறும் பம்மாத்து என்பதை நிரூபிக்கின்றன. ப.சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங் போலவே ஆ.ராசாவை முன்னிறுத்தி, தன்னைக் காத்துக்கொள்ளும் நரித்தனத்தோடுதான் இந்தக் காலக்கட்டம் முழுவதும் நடந்துகொண்டு வந்திருக்கிறார். எனினும், அவரது கள்ள மௌனம் அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் விற்று அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்றத்தில் அவருக்குள்ள பங்கை ரத்து செய்துவிடாது. இந்தப் பங்கை ஒத்துக் கொண்ட சி.பி.ஐ. நீதிமன்றம், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அலைக்கற்றைகளை 2008-இல் விற்பனை செய்தது தம்மளவில் குற்றமாகாது எனக் கூறி, ப.சிதம்பரத்தைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. ஆனால், ஆ.ராசா விசயத்திலோ அலைக்கற்றைகளைக் குறைவான விலையில் விற்றது பொதுநலனுக்கு விரோதமான குற்றமாகிவிட்டது.
வாகன்வாதி – நரி பரியான கதை
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது விண்ணப்பித்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறையாகும். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில், நிறுவனங்கள் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பான கடிதம் (Letter of Intent) வழங்கப்படும். “அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வரும் நிறுவனங்களின் பட்டியல் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில்தான் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற மாற்றம் புகுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை ஆ.ராசா ஏதோ தன்னிச்சையாகச் செய்ததைப் போல குற்றஞ்சுமத்தப்படுகிறது. ஆனால், இம்மாற்றத்தைப் புகுத்தியதில் ஆ.ராசா, பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகிய மூவருக்குமே பங்குண்டு.
அலைக்கற்றை விற்பனை அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இம்மாற்றத்தை மட்டுமின்றி, 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றியது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார். நவம்பர் மற்றும் டிசம்பர் 2007- களில் பி08-2g-10ரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்கள் நடந்ததை யாரும் மறுக்கவில்லை என்றாலும், அக்கூட்டங்கள் குறித்த கூட்டக் குறிப்புகள் பதியப்படவில்லை. கூட்டக் குறிப்புகள் பதியப்படாதது தற்செயலானதா அல்லது இக்கூட்டங்கள் குறித்த எந்தப் பதிவுகளும் இருக்கக் கூடாது என்பது திட்டமிடப்பட்ட முறையில் நடந்த சதியா என்பது விசாரணைக்கு உரியதாகும்.
இந்த மாற்றத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக ஆதரித்துப் பேசி வந்த வாகன்வாதி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில், “ஆ.ராசா இம்மாற்றத்தைப் பத்திரிகைகளுக்கு அளித்த சமயத்தில், அவர் அதில் தன்னிச்சையாக சில திருத்தங்களைச் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக”க் குற்றஞ்சுமத்தினார். அதேசமயம், வாகன்வாதியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கூடி முடிவெடுத்த பிறகு, அம்முடிவில் ஆ.ராசா தன்னிச்சையாக என்ன திருத்தங்களைச் செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்ததே தவறு எனத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். இந்த மாற்றத்தைச் செய்தவர்களுள் ஒருவரான ஆ.ராசா மீது சதிக் குற்றச்சாட்டைப் புனைந்துள்ள சி.பி.ஐ., வாகன்வாதி நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறி, அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
வாகன்வாதி காங்கிரசிற்குச் சாதகமாக ராசாவிற்குக் குழிபறித்ததால், அவருக்கு நற்சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த அவர் அட்வகேட் ஜெனரலாகப் பதவி உயர்வினையும் பெற்றார். மற்றொரு காங்கிரசு விசுவாசியும் பார்ப்பன நரியுமான பிரணாப் முகர்ஜி, வழக்கு, வாய்தா, விசாரணை போன்றவை அணுக முடியாத இடத்தில், இந்தியாவின் அரசுத் தலைவராக உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் அரசு தயாரித்த பொய்சாட்சிகள்08-2g-11
ŽŽŽநாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சாட்சியம் அளிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்ட சதிகளும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வகுப்புகள் ஜனவரி 2011 முதல் ஜூலை 2011 வரை நடத்தப்பட்டிருப்பதும், இந்த வகுப்புகளை அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் ஒருங்கிணைத்து நடத்தியிருப்பதும் ஓர் ஆவணமாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
“அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்றால் அரசுக்கு 35,000 கோடி ரூபா நட்டமேற்படும்” என எச்சரித்த யோக்கியவானும் இதே சந்திரசேகர்தான். இவர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “அரசின் எந்தவொரு கொள்கையும் அலைக்கற்றைகளை அதிக விலையில் விற்க வேண்டும் எனக் கூறவில்லை; எனவே, இதில் வழக்குப் புனைய எந்தவொரு முகாந்திரமும் இல்லை” எனப் பிறழ் சாட்சியம் அளித்தார்.
போலீசு பொய் சாட்சிகளைத் தயார் செய்து கூண்டில் ஏற்றுவது போல, அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லுமாறு தயார்படுத்தப்பட்டுள்ளனர். “2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முழு உண்மைகளும் வெளிவந்துவிடக் கூடாது; ஆ.ராசா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் இவ்ழக்கில் பலிகிடாவாக்கி, இம்முறைகேட்டில் தொடர்புடைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற முதலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் காங்கிரசு கூட்டணி அரசு எவ்வளவு கவனமாக உள்ளது” என்பதைத்தான் இந்த பொய்சாட்சி தயாரிப்புகளும்; கே.எம்.சந்திரசேகர், டி.சுப்பாராவ் போன்ற அதிகாரிகள் அளித்துள்ள பிறழ் சாட்சியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா இந்தப் பொய் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததை, குழுவின் தலைவர் சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தனது உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இது போன்ற சாட்சியங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி அறிக்கையினைத் தயாரித்திருக்கிறார்.
“அலைக்கற்றைகளை ஏலத்தில் விடாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கியது; தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கியிருப்பது; அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றது – இவை அனைத்தும் சட்டப்படியும், 1999-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தொலைபேசித் தொடர்பு கொள்கைப்படியும், தொலைத்தொடர்புத் துறையை அடிக்கட்டுமானத் துறையாகக் கருத வேண்டும் என்ற பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவின்படியும்தான் நடந்திருப்பதால், இதில் குற்றம் காண முடியாது; எனவே, அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் நட்டமேற்பட்டுள்ளது என்ற தலைமைக் கணக்குத் துறையின் முடிவு தவறானது. மற்றபடி, முதலில் வருபவருக்கு முன்னுரிமையில் செய்யப்பட்ட மாற்றங்கள்; அதனால் விண்ணப்பித்த 575 நிறுவனங்களுள் 122 நிறுவனங்கள் மட்டுமே பலன் அடைந்திருப்பது ஆகியவை கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளேயன்றி, குற்றமல்ல” என கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி எதுவுமே தவறில்லை, குற்றமில்லை என்று ஆகிவிட்ட பிறகு, ஆ.ராசா மன்மோகன் சிங்கை ஏமாற்றிவிட்டார் என்று
பழிபோடுவதற்கு எங்கே இடமிருக்கிறது?
பிரதமர் மன்மோகன் சிங்கையும் அ08-2g-12வரது அரசையும் அப்பழுக்கற்றவராகக் காட்டுவதற்காக சாக்கோ முன்வைத்துள்ள வாதங்கள் எதுவுமே புதிதல்ல. ஆ.ராசா நீண்டகாலமாகக் கூறிவருவதுதான். மேலும், ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் பிரதமருக்குத் தெரிந்துதான் எடுக்கப்பட்டன என்றும் நீண்டகாலமாகக் கூறிவருகிறார். ஆ.ராசாவுக்கும் பிரதமருக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த கடிதப் போக்குவரத்துக்கள், ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்து நாளிதழில் வெளியான பிறகும்கூட, அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு மட்டுமல்ல, நீதிமன்றங்களும், தேசிய ஊடகங்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்திற்கும் ராசாவின் மீதே பழிபோட்டன. “கூட்டணி நிர்பந்தங்களால் இந்த முறைகேட்டினை மன்மோகன் சிங்கால் தடுக்க முடியாமல் போவிட்டது; ஆ.ராசாவால் அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார்” என மன்மோகன் சிங்கைக் காப்பாற்றும் நோக்கில்தான் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, ஜெயா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், தி.மு.க.வைத் தீய சக்தியாகக் காட்டவும், தேர்தல்களில் அதனைத் தோற்கடிக்கவும் இந்த முறைகேட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெயா கும்பலின் இந்த அரசியல் சதிராட்டத்திற்கு ஜூனியர் விகடன், தினமணி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பன ஏடுகள் துணை நின்றன. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட நட்டம் குறித்துப் பல்வேறுவிதமான மாறுபட்ட மதிப்பீடுகள் இருக்கும்பொழுது, தலைமைக் கணக்கு அதிகாரியும்கூட அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கு
புலேக் சட்டர்ஜி, டிஏகே நாயர்
புலேக் சட்டர்ஜி, டிஏகே நாயர்
றித்து நான்கு வேறுபட்ட மதிப்பீடுகளைக் கொடுத்திருந்தபொழுது, இந்த முறைகேட்டைப் பிரம்மாண்டமானதாகக் காட்டுவதற்காகவே 1.76 இலட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பதை மட்டும் ஊதிப்பெருக்கி, அந்தப் பணம் முழுவதையும் தி.மு.க. சுருட்டிக் கொண்டுவிட்டதாக அவதூறுப் பிரச்சாரம் நடத்தியது, ஜெயா கும்பல்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறைகேடு குறித்து தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில்விட வேண்டாம் என அறிவுறுத்தியது. அலைக்கற்றைகளைக் குறைந்தவிலையில் விற்பதில் ஆ.ராசாவுக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையே ஒத்தபுரிதல் இருந்தது; ஆ.ராசா எல்லாம் முறையாக நடக்கும் என வாக்குறுதி அளித்தார். இதைத்தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது” எனச் சாதித்தார்.
தற்பொழுது வெளிவந்துள்ள ஆதாரங்கள் மன்மோகன் சிங் அளித்த வாக்குமூலம் எத்துணை பெரிய இமாலயப் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன. ஆ.ராசா மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் மன்மோகன் சிங் மீதும் போடுவதற்கு முகாந்திரம் இருப்பதை நிரூபித்துவிட்டன. ஆனாலும், எதிர்த்தரப்போ,” நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும்; குழுத் தலைவரை மாற்ற வேண்டும்” என அடக்கியே வாசிக்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளில் மைய அரசோடு முரண்பட்டு மோதிக் கொண்டிருப்பதாகக் காட்டி வரும் பார்ப்பன ஜெயா கும்பலோ இப்புதிய ஆதாரங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறது.
நாட்டையும் மக்களையும் ஏமாற்றிவரும் ஒரு மோசடிப் பேர்வழி பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பதுதான் நாட்டிற்கு அவமானம். ஆனால், மன்மோகனோ ஊழல் குறித்து நடைபெறும் பிரச்சாரத்தால் உலக நாடுகளின் முன் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாக வெட்கமின்றிப் பழி போடுகிறார்!
- திப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக