செவ்வாய், 21 மே, 2013

1,400 கோடி:தலித் நினைவிடங்கள் கட்டியதில் மாயாவதியின் யானை முழுங்கியது

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி காலத்தில் யானை சிலைகளுடன் நினைவிடங்கள் கட்டியதில் ரூ.1,400 கோடி ஊழல் நடைபெற்றதாக மாநில லோக் ஆயுக்தா குற்றம்சாட்டியுள்ளது, மாயாவதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, ரூ.5 ஆயிரத்து 919 கோடி செலவில் 14 தலித் நினைவிடங்கள் நிறுவப்பட்டன. லக்னோ, நொய்டா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட இந்த நினைவிடங்களில் மாயாவதி, கன்சிராம் ஆகியோருடைய சிலைகளுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், கடந்த ஆண்டு மே மாதம், போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம், இந்த ஊழல் பற்றி லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. லோக்ஆயுக்தா என்.கே.மெக்ரோத்ரா விசாரணை நடத்தினார். லோக் ஆயுக்தா தனது அறிக்கையை உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம் அளித்தது. அதில், தலித் நினைவிடங்கள் கட்டியதில், ரூ.1,400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை 2 முன்னாள் மந்திரிகளிடமும் வசூலிக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. மேலும் லோக்ஆயுக்தா அறிக்கையில் கூறி இருப்பதாவது ... மாயாவதிக்கு நெருங்கியவர்களே குற்றவாளிகள்... அறிக்கையில், மாயாவதி மீது தவறு இல்லை என்று கூறப்பட்டுள்ள போதிலும், அவருக்கு நெருக்கமான வர்களான முன்னாள் அமைச்சர்கள் நசீமுதீன் சித்திக், பாபுசிங் குஷ்வாகா ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்றும், மேலும், அவர்களையும் சேர்த்து 199 பேருக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ-வும் உண்டு.... இந்த குற்றவாளிகள் பட்டியலில், தற்போதைய எம்.எல்.ஏ. ஒருவர், 54 என்ஜினீயர்கள், 37 கணக்காளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் 60 பேர் ஆகியோரும் அடங்குவர். முதல் தகவல் அறிக்கை... இது தொடர்பாக, 2 முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அவ்வறிக்கை சிபாரிசு செய்துள்ளது. மற்றவர்களின் சொத்துகள், வருமானத்துக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. மரம் நடுவதில் ஆரம்பித்து... தலித் நினைவிடங்களில், மரம் நடுவதில் இருந்து கட்டுமான காண்டிராக்ட் ஒதுக்கீடு செய்வதுவரை ஊழல் நடந்துள்ளது. சுரங்கப் பணி, மணற்பாறைகள் கொள்முதல் செய்தது, பனை மரங்கள் இறக்குமதி செய்தது, விளக்குகள் கொள்முதல் செய்தது போன்ற விவகாரங்களில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. மணற்பாறைகளை வாங்கியதாக குறிப்பிடப்பட்ட செலவுத்தொகை, உண்மையான செலவை விட இரண்டு மடங்கு ஆகும். யானை சிலை... யானை சிலைகளை உருவாக்க தலா ரூ.48 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் தலா ரூ.5 லட்சம்தான் செலவு ஆகியுள்ளது. மொத்தம் 200 யானைகள் உருவாக்கியதன் மூலம் பெருமளவு பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பனை மரங்களை தலா ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளனர். இந்த மரங்கள், இங்குள்ள சூழ்நிலைக்கு உயிர் வாழுமா என்று கூட ஆய்வு செய்யாமல் வாங்கினர். இதனால், 90 சதவீத மரங்கள் பட்டுப்போய் விட்டன. அழகு விளக்குகள்... அதுபோல், நினைவிடங்களில் அழகுக்காக பொருத்தப்பட்ட விளக்குகளும், பல்புகளும் பெல்ஜியம் மற்றும் டென்மார்க்கில் இருந்து வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூரில் போலி பல்புகளைத்தான் வாங்கி உள்ளனர். கமிஷன் பிரச்சினை... கற்கள் வாங்கிய வகையில் ரூ.4 ஆயிரத்து 188 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில், 35 சதவீத பணத்தை அரசியல்வாதிகள், என்ஜினீயர்கள், அதிகாரிகள், காண்டிராக்டர்கள் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். காண்டிராக்டர்கள் கொடுத்த கமிஷனை பங்கிடுவதில், 2 முன்னாள் மந்திரிகளான நசீமுதீன் சித்திக், பாபுசிங் குஷ்வாகா ஆகியோரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. சித்திக்கை விட அதிகமான பணத்தை குஷ்வாகா எடுத்துக் கொண்டு விட்டார். தனிக்குழுக்கள் வேண்டும்... இந்த ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க தனிக்குழுக்களை மாநில அரசோ, சி.பி.ஐ.யோ அல்லது அமலாக்கப்பிரிவோ அமைக்க வேண்டும். தனி கோர்ட்டும் அமைக்கப்பட வேண்டும்' என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக