வியாழன், 2 மே, 2013

120 பஸ்கள் உடைப்பு, 4 பஸ்கள் எரிப்பு - 2,137 பா.ம.க.வினர் கைது

பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
 இந்நிலையில் போராட்டம் நடத்த வந்த அந்தக் கட்சி நிறுவனத்  தலைவர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கடந்த 2012ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்குக்காக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. காடுவெட்டு ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
 இதைக் கண்டிக்கும் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அந்தக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் பஸ் உடைப்பு, பஸ் எரிப்பு போன்ற வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் தமிழக காவல்துறையின் வட மண்டல ஐ.ஜி. பெ. கண்ணப்பன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
 போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,திருத்தணி ஆகிய இடங்களில் 4 அரசு பஸ்களை அந்தக் கட்சியினர் தீ வைத்து எரித்தனர். இதேபோல மாநிலம் 120 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 வன்முறையில் ஈடுபட்டதாகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 2,137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்துவதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகியப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 163 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று புதன்கிழமையும் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக செங்குன்றம் பாடியநல்லூர் 8 பேர், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 22 பேர், புது வண்ணாரப்பேட்டையில் 20 பேர், ராயபுரத்தில் 17 பேர், கோயம்பேடு நெசப்பாக்கத்தில் 35 பேர், எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் அருகே 5 பேர் என மொத்தம் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இவர்கள் மீது போலீஸார் அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்தியது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இரவு பாட்டாளி மக்கள் கட்சியினர் திருமுல்லைவாயில்,ஆவடி,பட்டாபிராம்,கொரட்டூர் ஆகிய இடங்களில் 4 அரசு பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.
 இதில் திருமுல்லைவாயில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  இதற்கிடையே மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக