வியாழன், 11 ஏப்ரல், 2013

பட்டினியாக வேலை பார்க்கும் Fast Food தொழிலாளிகள்

துரித உணவு பலகைமெரிக்காவில் இயங்கும் தனியார் துரித உணவகங்களின் ஆண்டு லாபம் உயர்ந்து கொண்டே போக அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசமாக உள்ளது. இதை எதிர்த்து பல்வேறு துரித உணவகங்களின் ஊழியர்கள் ஒன்று திரண்டு சங்கம் அமைத்து, ஊதிய உயர்வு கோரி அடையாள வேலை நிறுத்த போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எதிர்த்துப் போராடும் பல்வேறு துரித உணவகங்கள் இந்தியாவில் சமீப காலமாக கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.
“போதும், நான் சோர்ந்து போய் விட்டேன், கடந்த பல ஆண்டுகளாக அதே சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறேன், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது, நிறுவனத்தின் லாபம் விண்ணைத் தொடுகிறது ஆனால் என் சம்பளம் அப்படியே தான் இருகிறது. வேலை நிறுத்தம்தான் ஒரே வழி ” என்று குமுறுகிறார் பிரபல துரித உணவு விற்பனை நிறுவனமான பர்கர் கிங்ஙில் வேலை செய்யும் தபிதா.
கடந்த வியாழன் அன்று (ஏப்ரல் 4, 2013) சுமார் 60 துரித உணவகங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தமக்குள் சங்கம் ஒன்றை அமைத்து நியூயார்க் நகரில் பல்வேறு இடங்களில அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக பஙகேற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை செய்யப்பட்ட நாளில் இந்த அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
“குறைந்த பட்ச ஊதியம் ஒரு மணி நேரத்துக்கு $15 டாலராக உயர வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமெரிக்காவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் வேகமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை துரித உணவகங்கள். இன்று இந்தியாவில் கூட இவை   காளான்கள் போல் முளைத்து விட்டன. மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, டாமினோஸ், பீட்சா ஹட், பீட்சா கார்னர், டாகோ பெல் என்று துரித உணவகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களது ஆண்டு வருமானமும் பல கோடி டாலர்களை கடந்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்யும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசம்.

இந்த உணவகங்களில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு  $7.25 ( சுமார் ரூ 370 ) வரை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்று வைத்துக்கொண்டாலும், வாரத்திற்கு ஏழு நாள் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தால் மாதத்திற்கு ரூ 82,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் நியூயார்க் போன்ற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் வசிப்பதற்கு நகரத்திற்கு பல மைல் வெளியிலிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே மாத வாடகை மாத்திரம் சுமார் ரூ 1 லட்சம் முதல் ரூ 1.50 லட்சம் வரை ஆகிறது.
எட்டு மணிநேரம் இடை விடாத வேலை, மூன்று ஆள் வேலை வரை ஒருவரே பார்க்க வேண்டும், எந்நேரமும் வேலை பறி போகலாம். வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்பச் செலவு, போக்குவரத்துச் செலவு, மருத்துவக் காப்பீட்டு கட்டணம் என அனைத்தையும் ஊழியரே தன் சம்பளத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல நேரம் ஊழியர்கள் பணம் போதாமல், உணவை   தவிர்ப்பது, பல மைல்கள் நடந்தே பணிக்கு வருவது, பல நோய்களுக்கு மருத்துவமனை செல்லாமல் இருப்பது என தங்கள் செலவுகளை கட்டுப் படுத்துகிறார்கள். யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?
மாறாக நிறுவனங்களின் லாபமோ கொள்ளையாக உயர்ந்து வருகிறது. மெக்டொனல்ட்ஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் உயர்ந்து சுமார் $2.6 பில்லியனை ( ரூ 13 ஆயிரம் கோடி ) எட்டியுள்ளது. பர்கர் கிங் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிக லாபம ஈட்டியுள்ளது. கேஎஃப்சி, பிட்சா ஹட், டாகோ பெல் நிறுவனங்கள் 2011 -ம் ஆண்டு $1.3 பில்லியன் லாபம் ஈட்டின. ஆனால் டாகொ பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜோசப்பிற்கோ ஒரு மணி நேரத்திற்கு $7.25 தான் சம்பளமாக கிடைக்கிறது. இதே நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தன் 15 வயதில் சேரும் போது அவர் வாங்கிய சம்பளம் $7.10. கடந்த 6 ஆண்டுகளில் சூப்பர்வைசராக பதவி உயர்வும் பெற்றுள்ள அவரது சம்பளம் வெறும் $0.15 தான்   உயர்ந்துள்ளது.
1968 -ல் $1.60 ஆக இருந்த குறைந்த கூலியின் இன்றைய டாலர் மதிப்பு $11. ஆனால் 2013 -ல் அது $7.25 ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதாவது 45 ஆண்டுகளில் கூலி 50% வீழ்ச்சியடைந்திருக்கிறது.
பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், அகதிகளாக வரும் வெளிநாட்டினர்.  கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த உதிரி தொழிலாளர்களும் சேர்ந்துக் கொள்ள, நிறுவனங்கள் மனித வேட்டையில் திக்கு முக்காடி போயின. சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். அவருக்கு பதிலாக வேலையில் புதிதாக சேருபவர் சில ஆண்டுகள் கழித்து சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். இது தான் ஊழியர்களின் அவல நிலை.
ஊழியர் போராட்டம்இந்த நிலையை சாக்காக வைத்து நிறுவனங்கள் வேலையை மும்மடங்கு அதிகரித்து விட்டன. அதனால் இரண்டு ஆள் சம்பளம் நிறுவனத்திற்கு லாபம். இப்பொழுது புரிகிறதா கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் லாப உயர்வுக்கு காரணம் ?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊழியர்கள், சங்கம் அமைத்தனர். கடந்த வியாழன் அன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தால் பல நிறுவனங்கள்   தாமதமாக கடையை திறக்க வேணடிய நிலை ஏற்பட்டது. நேரடியாக அந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஊழியர்களே எதிர்பாரா விதமாக பல்வேறு சங்கங்கள், இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தன.
மக்கள் முன் தங்கள் நிலையையும், கோரிக்கையையும் புரிய வைக்க இவர்கள் “துரித உணவு முன்செல்க” என்ற வலைத்தளம் ஒன்று துவங்கியதுடன், பல்வேறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்னர்.
வேலை நிறுத்தம் செய்தால் வேலை போய்விடும் என்று தெரிந்தாலும், தற்போதைய தங்கள் மோசமான வாழ்கையினால் விரக்தியுற்றிருக்கும் இவர்கள் போராடி பார்த்துவிடுவது என்று முடிவுடன் இருக்கிறார்கள். அடையாள வேலை நிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் நிறுவனத்திற்கு போனால் தாங்கள் மிக மோசமாக நடத்தப்படுவோம் என்று அவர்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது ஆனால், அவர்கள் கோரிக்கையை கேட்க மறுத்து   வந்த நிறுவனங்களின் செவிகளை அதிர செய்திருக்கிறார்கள்.
1980 களில் ரீகன் காலத்தில் பணி நீக்கம் என்று பயமுறுத்தி ஊழியர்கள் மத்தியிலான போராட்டங்கள் அடக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்த விமான கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களை ரீகன் வேலை நீக்கம் செய்து ‘ வரலாறு ‘ படைத்தார். ஆனால் தொழிலாளர்களின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
சிகாகோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், வால்மார்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தம், நியூயார்க் குப்பை அள்ளும் ஊழியர்களின் வேலை நிறுத்தம், வால்வீதி ஆக்கிரமிப்பு போரட்டங்கள், இப்பொழுது துரித உணவு ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் என அனைத்து போராட்டங்களும் ஊழியர்களால் தனியார் நிறுவன்ங்களை எதிர்த்து நடத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தனியார்மயத்தையே எதிர்த்து நடக்கின்றன. தங்கள் எதிரியை கண்டுணர்ந்து அவனை எச்சரிக்கும் போராட்டங்கள் இவை. வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியவை.
நம் நாட்டிலும் வால்மார்ட் முதல் மெக்டானால்ட் வரை பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் வருகை, ‘வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வளம் பெருகும், தனிநபர் வருமானம் உயரும்’ என பல கவர்ச்சி வாசகங்களைச் சுமந்து வருகிறது. ஓரளவு ஊழியர்கள் நலச் சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்க போன்ற நாட்டிலேயே ஊழியர்களை கடுமையாக சுரண்டும் இந்நிறுவனங்கள், மிக மோசமான ஊழியர் நடை முறை சட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில் ஆடப் போகும் ருத்ர தாண்டவத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் நடந்துவரும் இந்த வேலை நிறுத்த போரடடங்கள் ஒரு நல்ல துவக்கம்.
சோவியத் புரட்சியின் 10 -ம் ஆண்டை நினைவு கூற சோவியத் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரபல திரைப்பட இயக்குனரான ஐசன்ஸ்டீன் மூன்று படங்களை இயக்கி கொடுத்தார். சோவியத் புரட்சிக்கு வித்தாக அவர் எடுத்த முதல் படம் “ ஸ்ட்ரைக் ”. ஆம், எண்ணற்ற தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் தான் புரட்சியின உந்துசக்தியாக, விதைகளாக இருந்தன.
அந்த வகையில் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் தொழிலாள்ர்களின் இந்த வேலை நிறுத்தங்கள் தனியுடமை முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கு சாவு மணியடிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக