புதன், 17 ஏப்ரல், 2013

Chennai :குடிபோதையில் மகளை எரித்துக்கொன்ற தந்தை

மீஞ்சூர் அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48). . இவருடைய மனைவி மேரி (39). இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் நித்யா (19).
ஜெய்சங்கருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்து வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்படி கூறியதால் அடிக்கடி வீடு மாறி குடியிருந்து வந்தனர்.
பொன்னேரி பாலாஜி நகரில் இருந்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்து குடியேறினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நித்யாவை பெண் பார்க்க மாப்பிளை வீட்டினர் வந்தனர். அவர்கள் சென்றபிறகு மது குடித்து விட்டு வந்து ஜெய்சங்கர் மகளிடம் தகராறு செய்தார்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து நித்யா உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் நித்யா வேதனையில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, என் மீது தந்தை ஜெய்சங்கர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நித்யாவின் தாய் மேரி மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும், நித்யாவின் வாக்குமூலம் அடிப்படையிலும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக