புதன், 17 ஏப்ரல், 2013

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

self-immolation-2மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.
குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.
35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.
காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி  ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.

நேபாளத்தை சேர்ந்த மான்சிங் என்பவர் ராஜ்கோட்டிலுள்ள ரையாதர் பகுதியில் உள்ள சோட்டுநகர் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். தங்கியிருந்து வேலை பார்ப்பதற்காக, குடியிருப்பு சங்கத்தினால் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 900 சதுரஅடி இடம் வழங்கப்பட்டுள்ளது. மான்சிங் அந்த இடத்தில் சிறிய வீடு கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் 35 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது; அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.
2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.
மான்சிங் குடும்பத்தினர் இடத்தை விட்டு உடனே வெளியேறவில்லை என்றால், அவர்களது வீடு ஏழு நாட்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்று மேலும் ஒரு நோட்டீஸில் ஆகஸ்ட் மாதம் பீதியூட்டப்பட்டது. ’1978-ல் மான் சிங்கிற்கு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் வழங்கி கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடம் தங்களுக்கே உரிமையானது’ என்று மான்சிங்கின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 2 ஆம் தேதி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை அறிந்த குடும்பத்தினர், இதற்கு மேலும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்ற விரக்தியோடு ராஜ்கோட் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணைய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மான் சிங்கின் மகன் பரத் (40), அவரது மனைவி ஆஷா (35), மான் சிங்கின் இளைய மகன் கிரீஷ் (27) ஆகிய மூவரும் சம்பவத்தன்றே உயிரிழந்தனர். மான்சிங்கின் மனைவி வசுமதி (60), மகன் மகேந்திராவின் மனைவி ரேகா (35) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டனர்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய கிரீஷின் மனைவி கௌரி, ‘வீட்டு வசதி சங்கத்தினரும் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளும், மான் சிங்கின் குடும்பத்தை தொல்லைகளுக்கும், வேதனைக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கி வந்தனர்’ என்றும். ‘குடியிருக்கும் இடத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி உயிரை விடத் துணிந்தோம்’ என்று கூறினார்.
இந்த குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு வீட்டு வசதி சங்கத்துடன் சேர்ந்து தொல்லை தந்த ஆளும் பி.ஜே.பி. கட்சி பிரமுகர்கள், தற்கொலை சாவுகளுக்கு பிறகு முதலை கண்ணீர் விட்டு, மாநகராட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பொய் வேடமிட்டு வருகின்றனர். கிரீஷின் மரண வாக்குமூலத்தில் அவரது குடும்பத்தை, பி.ஜே.பி. கவுன்சிலர்கள் ராஜ்பா ஜாலாவும், கமலேஷ் மிரானியும் சோட்டு நகர் கூட்டுறவு வீட்டு வாரிய சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.
தீக்குளிப்புகாங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினருமான ராஜு பர்மர், மான் சிங் குடும்பத்தினருக்கு, நஷ்டஈடு தந்து அனுதாபங்கள் தெரிவிக்க சென்றிருக்கிறார். இறந்துபோன பரத்தின் மூத்த மகள் மது அவர் கொடுக்க வந்த காசோலையை ஏற்க மறுத்து, “எங்களுக்கு முன்பே உதவ ஏன் முன்வரவில்லை?” என்று விரட்டியிருக்கிறார். போலீசையும், மாநகராட்சியையும் பலமுறை அணுகியும் யாரும் உதவவில்லை என்றும், தந்தையும், தாயும், உறவினர்களும் நெருப்பில் எரியும் போதும் அவர்களை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை என்றும் புலம்பி அழுது இருக்கிறாள் அந்தப் பெண்.
‘சோட்டு நகர் கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினர், அவர்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை தடை செய்து, குழந்தைகள் தெரு விளக்கின் ஒளியில் படிக்க வேண்டியது ஏற்பட்டது’ என்றும், ‘தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர்’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம் சிங் குடும்பத்தினர் நியாயம் கிடைக்கும் வரையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு நீதிகிடைக்க உதவுவதாக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கிய பின்னரே சடலங்களை பெற்று சென்றுள்ளனர்.
வழக்கம் போல போலீஸார் குற்றச்சாட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றவாளிகளை கைவசம் வைத்துகொண்டே, குடும்பத்தினரை இந்நிலைக்கு ஆளாக்கிய அயோக்கியர்களை பிடித்தே தீருவோம் என்று முழங்கிவருகிறார் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் பி. சிங். குடியிருப்பில் வசிக்கும் துஷ்யந்த் தனக், ஹரேஷ் வஜா, மற்றும் ஜெயந்தி டோலாக்கியா ஆகிய மூவரை பெயருக்கு கைது செய்துள்ளனர்.
சோட்டுநகர் போன்ற குடியிருப்புகள் பணம் சேர்க்க முடிகின்ற நடுத்தர வர்க்கத்தினரை தனித் தீவுகளாக வாழ வைப்பதற்காக அமைக்கப்பட்டவை. மான் சிங்கின் மறைவிற்கு பின், அவருடைய செக்யூரிட்டி வேலையை அவர் குடும்பத்தினர் யாரும் செய்யவில்லை எனினும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியின் அங்கத்தினராகவே வாழ்ந்து வந்துள்ளனர். பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இறுதியாக சட்டரீதியாக தாக்குதல் நடத்தி வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பணம் படைத்தவர்களுக்குத்தான் வாழும் உரிமை என்ற இந்த சமூக அமைப்பில் உழைத்து வாழும் ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மோடியின் குஜராத் இதற்கு விதிவிலக்கு அல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக