வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி

ஷாபாக் ஆர்ப்பாட்டம்முஸ்லிம்கள் என்றால் ஜனநாயக உணர்வற்ற பழைமைவாதிகள், இஸ்லாமிய மதவெறியிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிக் கிடப்பவர்கள் என்று இந்துத்துவ ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் தவறான கருத்துதான் நமது நாட்டில் நிலவுகிறது. ஆனால், இது எவ்வளவு பச்சைப்பொய் என்பதை அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் இஸ்லாமிய மதவெறிக் கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இஸ்லாமிய மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் குண்டர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போராடும் மக்களை அச்சுறுத்திய போதிலும், அவற்றைத் துச்சமாக மதித்து வங்கதேச மக்கள் நீதிக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர்.

வங்கதேசத்தில் – அதாவது, பாகிஸ்தானின் மாநிலமாக இருந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி 99 சதவீத அளவுக்கு மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு,மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. இதை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பரவின. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர். வங்கதேச மதவெறிக் கட்சியான ஜமாத் -இ-இஸ்லாமி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொண்டு போராடும் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது. தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக்குழுக்களைக் கட்டியமைத்து முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தது.
“போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சியைத் தடை செய்!” – டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் நடந்த மக்களின் பேரெழுச்சி.
இராணுவ அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகப் போராடிய வங்கதேச மக்கள், முக்தி பாஹினி எனும் இயக்கத்தின் மூலம் பாகிஸ்தானிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர். வங்கதேச விடுதலைப் போரின்போது, ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, ஒரு கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இந்த அவலத்தைச் சாதகமாக்கிக் கொண் டு, பிராந்திய விரிவாக்க நோக்கத்துடன் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் வங்கதேச விடுதலைப் போரை ஆதரித்து, முக்திபாஹினி இயக்கத்தின் பெயரால் 1971, டிசம்பர் 3 அன்று இந்திய இராணுவத்தைக் கொண்டு வங்கதேசத்தில் வெளிப்படையாகத் தலையிட்டார். பாகிஸ்தான் இப்போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 16 அன்று முஜிபுர் ரஹ்மானை அதிபராகக் கொண்ட வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. போர் முடிவுக்கு வரும் முன்னரே, வங்கதேச இடைக்கால அரசாங்கம் மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்தது.
புதிய நாடு உருவான பின்னர், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை நடத்தித் தண்டிக்கக் கோரி மக்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. இருப்பினும் கொலைகள், பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு 1973-இல் முஜிபுர் அரசு பொது மன்னிப்பு அளித்ததேயன்றி, குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை. முஜிபுர் ரஹ்மானின் ஆட்சியானது, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாமல், ஒரு கட்சி சர்வாதிகாரத்தைக் கொண்டு மக்களின் போராட்டங்களை ஒடுக்கியது.
ரஜீப் ஹைதர்பின்னர், 1975-இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் முஜிபுர் கொல்லப்பட்டு, இராணுவத் தளபதியான ஜியா உர் ரஹ்மான் நாட்டின் அதிபரானார். இந்த இராணுவ ஆட்சியாலும் நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததோடு, மதவாதக் கட்சிகளின் மீதான தடையையும் ஜியா நீக்கினார்.
ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து இணையத்தின் மூலம் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திக இளைஞர் ரஜீப் ஹைதர்.
இருப்பினும், விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்று போர்க்குற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் ஜமாத் கட்சிக்கு தேர்தலில் நிற்க அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்கள் பின்பற்றிய உத்தியுடன், வங்கதேச ஜமாத் கட்சியானது, இஸ்லாமிய ஜனநாயக லீக் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. அதன் இளைஞர்-மாணவர் அமைப்புகள் இஸ்லாமி சத்ர ஷிபிர் என்ற பெயரில் மறுஅவதாரம் பெற்றன. பின்னர் 1982-இல் மீண்டும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஹுசைன் முகம்மது எர்ஷாத் அதிபரான பின்னரே, ஜமாத் கட்சி தனது சோந்தப் பெயரிலேயே செயல்படத் தொடங்கியது.
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான இந்த ஆட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாமல், 1991-இல் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் அடிப்படையில் வங்கதேசத்தில் தேர்தல்கள் நடந்தன. முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையிலான அவாமி லீக் கட்சியும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செதன. ஆண்டுகள் பல கடந்த போதிலும், போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்ற வங்கதேச மக்களின் நீதிக்கான உணர்வு மங்கிவிடாமல் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வந்தது.
இந்நிலையில், 1971 விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தித் தண்டிப்பதாகக் கடந்த 2008 தேர்தலின் போது வாக்களித்து ஆட்சிக்கு வந்தார், அவாமி லீக் கட்சியின் தலைவியான ஹசீனா பேகம். அதன்படி, 2009-ஆம் ஆண்டு 3 உறுப்பினர் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம், 7 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்களைக் கொண்ட வழக்குரைஞர்கள் குழு – ஆகியன உருவாக்கப்பட்டன. இப்போர்க்குற்ற விசாரணை மன்றம், பாகிஸ்தானுக்குத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு கடந்த ஜனவரி 2013-இல் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
ரஜீப் இறுதி ஊர்வலம்
ஜமாத் கட்சியின் குண்டர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ரஜீப் ஹைதரின் இறுதி ஊர்வலம்.
ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவரும், மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் என்று மக்களால் காறி உமிழப்படும் போர்க்குற்றவாளியுமான அப்துல் காதர் மொல்லாவுக்கு கடந்த பிப்ரவரி 5 அன்று இந்த விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதைத் துச்சமாக மதித்து, அப்துல் காதர் மொல்லாவும் ஜமாத் கட்சியின் குண்டர்களும் இரண்டு விரல்களைக் காட்டி வெற்றிப் பெருமிதத்துடன் ஆரவாரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள், அவனுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகரான டாக்காவிலுள்ள ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிப்ரவரி 5-ஆம் தேதியன்று ஷாபாக் சதுக்கத்தில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், “போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முழக்கத் தட்டிகள், கருத்தோவியங்கள், கேலிச்சித்திரங்கள், கொடும்பாவி எரிப்பு – எனப் பல்வேறு வடிவங்களுடன் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. 1971-இல் ஒவ்வொரு வங்காளிக் குடும்பமும் தமது உறவினர்களைப் பறிகொடுத்துள்ளதால், எத்தனை ஆண்டுகளானாலும் இக்கொடிய வன்கொடுமையை மக்கள் மறக்கத் தயாராக இல்லை.
போர்க்குற்றவாளிகள்இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஜமாத் கட்சியின் குண்டர்கள் போராடும் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி எதிர்ப்போராட்டங்களை நடத்தினர். இணையத்தின் மூலம் ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திகரான அகமது ரஜீப் ஹைதர் என்ற இளைஞர், ஜமாத் கட்சியின் சத்ர ஷிபிர் எனும் மாணவர் அமைப்பின் குண்டர்களால் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஜமாத்தின் மாணவர் அமைப்பானது, போலீசையும் பத்திரிகையாளர்களையும் கொடூரமாகத் தாக்கியதோடு, பொதுச்சோத்துக்களையும் நாசமாக்கிக் கையெறி குண்டுகளை வீசி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தியது. இந்தத் தாக்குதலில் ஜமாத் குண்டர்களும் போலீசாரும் உள்ளிட்டு ஏறத்தாழ 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தண்டிக்கப்பட்ட போர்க்குற்றவாளிகள்: “மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன்” என்று மக்களால் காறி உமிழப்படும் ஜமாத் கட்சியின் முக்கியத் தலைவரான அப்துல் காதல் மொல்லா (இடது). மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் துணைத்தலைவர் தெல்வார் ஹூசைன் சயீதி.
இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களால் மக்களின் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை. ஜமாத் கட்சியின் வர்த்தக அமைப்புகளான இஸ்லாமி வங்கி, ஐ.பி.என். சினா உள்ளிட்ட இதர நிறுவனங்களையும், டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, சோனார் பங்களா வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும், ஜமாத் கட்சியின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களையும் தடை செய்யுமாறும், ராசாக்கர்கள் – அல் பதார் குண்டர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களைத் தண்டிக்கக் கோரியும் வங்கதேச மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். பிப்ரவரி 28 அன்று போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் ஜமாத் இ இஸ்லாமியின் துணைத் தலைவரான தெல்வார் ஹுசைன் சயீதிக்கு மரண தண்டனை விதித்ததும், போராடும் மக்கள் இதனை நாடெங்கும் திருவிழா போலக் கொண்டாடினர். போர்க்குற்றவாளிகளுக்கும் மதவெறியர்களுக்கும் எதிராக மாபெரும் எழுச்சியை வங்கதேச மக்கள் நடத்தியுள்ள போதிலும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டுள்ள ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் இப்போராட்டம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.
முன்னணியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான கலீடா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியின் ஆதரவோடு ஜமாத் கட்சியின் ஒரு சிறுகும்பல் வன்முறை வெறியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. வங்கதேச சிறுபான்மை இந்துக்களைத் தாக்கியும் இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தியும் பிரச்சினையைத் திசை திருப்ப இக்கும்பல் முயற்சிக்கிறது. இந்தியாவின் சதி, நாத்திக சதி, காஃபிர்களின் சதி என்றெல்லாம் அவர்கள் கூச்சலிட்டாலும், வங்கதேச மக்கள் இஸ்லாமிய மத வெறியர்களைத் தண்டிப்பதில் ஓரணியில் நின்று உறுதியாகப் போராடி வருகின்றனர்.
“நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்!” என்ற முழக்கத்தோடு போராடும் வங்கதேச மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய மதவெறியையும் விட வங்காள தேசியத்தையே பெருமிதமாகக் கருதுகின்றனர். இத்தகைய மக்கள்திரள் போராட்டங்களின் மூலம்தான் எந்த நாட்டிலும் மதவெறியர்களையும் போர்க்குற்றவாளிகளையும் தண்டிக்க முடியுமே தவிர, கடுமையான காகிதச் சட்டங்களாலோ, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் தயவினாலோ அல்ல என்பதை வங்கதேச மக்கள் போராட்டம் படிப்பினையாக உணர்த்துகிறது. இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராக நம்நாட்டிலும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் பெருகும்போது, இந்துவெறி பாசிசப் பரிவாரங்கள் தண்டிக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுவார்கள்.
- குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக