சனி, 20 ஏப்ரல், 2013

காங்கிரஸ் / கூட்டுக்குழு அறிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம் ! கபில் சிபல்

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்கும், பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் அறிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அப்படியிருக்கும்போது, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள், யூகங்களை கிளப்பி விடுவதை கைவிட வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை விரைவில், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இக்குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கை, குழுவின் உறுப்பினர்களுக்கு நேற்று முன் தினம் வினியோகிக்கப்பட்டது. வரும், 25ம் தேதி, ஜே.பி.சி., கூட்டம் நடக்கிறது. அதில், தீர்மானம் ஏற்றுவதற்கு வசதியாக, வரைவு அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வரைவு அறிக்கை கசிந்ததைப் பார்த்து, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் கொதித்து போய், கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. "இது, ஜே.பி.சி., அறிக்கை இல்லை; காங்கிரஸ் அறிக்கை' என, பாரதிய ஜனதா கடுமையாக சாடியுள்ளது. தி.மு.க., உட்பட பிற எதிர்க்கட்சிகளும் சாடியுள்ளன.

இந்நிலையில், நேற்று டில்லியில், நிருபர்களிடம் பேசிய மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: ஜே.பி.சி., அறிக்கை இன்னும் இறுதியாக்கப்படவில்லை. ஜே.பி.சி., வரும் 25ம் தேதி கூடவிருக்கிறது. அப்போது தான் இறுதி செய்யப்படும். இதன்பின், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது, விவாதம் நடைபெறும். அதன்பின் முடிவுக்கு வருவோம்; அதற்கு முன் விமர்சிக்க வேண்டாம். இந்த விஷயத்தில், நான் எதிர்க்கட்சிகளையும், மீடியாக்களையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஊகங்களை கிளப்பி விடுவதை கைவிட வேண்டும் என்பதே. இதற்கான விவாதம் பார்லிமென்டிலும், வெளியிலும் நடைபெறும். "2ஜி' விவகாரம் குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், இதேபோல் தவறைத்தான் செய்தோம். அந்த தவறு மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக சொல்கிறேன்.மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின், வரைவு அறிக்கையை வைத்து கொண்டு, எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், அறிக்கை பற்றி முன்கூட்டியே அப்படியாக்கும், இப்படியாக்கும் என கிளப்பிவிட்டு கஷ்டமான நிலையை தோற்றுவித்தனர்.அதேபோல், இப்போதும் நடைபெறக்கூடாது என்பதில் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.இவ்வாறு, கபில்சிபல் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக