வியாழன், 25 ஏப்ரல், 2013

புதிய ரக திராட்சை பயிரிட்டு கம்பம் விவசாயி மகிழ்ச்சி ! ஏற்றுமதி தரம் வாய்ந்த ரெட்குளோப்

கூடலூர்: கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி விவசாயி ரெட்குளோப் என்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த புதிய ரக திராட்சை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி உட்பட சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. இதுதவிர சின்னமனூர், ஓடைப்பட்டி பகுதிகளில் விதையில்லா பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்காட்சி கண்ணன், ரெட்குளோப் என்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த புதிய ரக திராட்சை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிரிடப்பட்டு, வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் ரெட்குளோப் என்ற புதிய ரக திராட்சையை சுருளிப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளார்.ரெட்குளோப் திராட்சையானது, சாதாரண திராட்சையை விட பெரியதாகவும், சிவப்பு கலரில் பிளம்ஸ் பழம் அளவில் சதைப் பிடிப்புடனும், பழத்தினுள் விதைகள் சிறிய அளவிலும் உள்ளன. இது குறித்து பொன்காட்சி கண்ணன் கூறுகையில், ‘ஒரு ஏக்கர் நிலத்தில் ரெட்குளோப் விவசாயம் செய்ய 1.5 லட்சம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 8 டன் வரை பலன் தருகிறது. இந்த பழம் ஏற்றுமதி தரம் வாய்ந்தது. தற்போது கிலோ 80க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக இருப்பு வைத்து ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக