திங்கள், 15 ஏப்ரல், 2013

லஞ்சம்: புள்ளத்தாச்சியை ரோட்டில் வீசிய அரசு மருத்துவமனை! பிரசவம் பார்த்த பொது மக்கள்!

ஆதரவு தரவேண்டிய அரசு மருத்துவமனை இலஞ்சமெனும் பேய் பிடித்து புறக்கணிக்க, வீதியில் விழுந்த ஏழை  பெண்ணுக்கு அன்போடு பிரசவம் பார்த்து பரவசமூட்டியுள்ளனர் அன்னாடம் காச்சிகளான பாமர சனங்கள்.
சாமுவேல் என்பவரை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க தமிழகம் வந்தவர் 27 வயது லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ ஏழ்மையில் வாடியது...வறுமை எனும் கோர பசிக்கு வயிற்றை தருவதை தவிர வேறொன்றும் இல்லாத எளியவர்கள்.கிடைக்கும் கூலி வேலை செய்து வரும் இவர்களின் இருப்பிடம் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட் பார்ம் தான். அருகேயே உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதானத்தில்தான் மதிய உணவு. ஐந்து வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் இருக்க தற்போது வயிற்றில் ஒரு குழந்தையும் இருக்க திடீரென வயிற்று வலியில் துடிக்கிறார். அதன் பின் நடந்ததை விவரிக்கிறார் அக்கம் பக்கத்தில் இருந்த பண்ணாரி என்ற பெண்மணி,

'நானும் இங்க பிளாட்பார்ம்வாசி தான். காலையில நாலு மணி இருக்கும் கண்ணு, புள்ளை வலியில துடிக்க என்னடா ஆச்சுன்னு பார்த்தா பிரசவ வலி. என்ன பன்றதுனே தெரியலை சரி பக்கத்துல எட்டுன தூரத்துல தான் அரசாங்க ஆஸ்பத்திரி இருக்குன்னு அங்க கூட்டி போனேன் பாவம் புள்ளையால நடக்க முடியல ஆனா என்ன பண்றது எங்ககிட்ட காசில்லை அதனால கால் மைல் தூரத்தையே ரெண்டு மணி நேரமா நடந்தோம். அங்க போனா அதவிட கொடுமை... பொண்ண உள்ள சேத்திகிட்ட நர்சம்மா கொஞ்ச நேரத்துல 1000 ரூபா பணம் கொடுங்கன்னு சொன்னாங்க வெள்ளை தொப்பி போட்டு ரெண்டு நர்சம்மாக்கள்... அவ்ளோ காசுக்கு எங்கம்மா போறதுன்னேன் காசில்லைனா பிரசவம் பார்க்க மாட்டோம்னாங்க என்ன பன்றதுனே தெரியாம லட்சுமிய கூட்டிகிட்டு திரும்ப இங்க பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகதுக்கிட்டயே வந்தோம்... அந்த மாரியாயி தான் ஏதாவது வழி காட்டுவான்னு இருந்தப்போ தான் மறுபடியும் புள்ளைக்கு வலி வந்தது ரொம்ப முடியலைன்னு கத்துனா... என்ன செய்ரதுனெ தெரியல கடசியா கடவுள் மேல பாரத்த போட்டுக்கிட்டு நானே பிரசவம் பார்த்தேன் விஷயம் தெரிஞ்சு பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொம்பளைங்களும் ஒத்தாசை பண்ண கொஞ்ச நேரத்துல அழகா செவ செவன்னு ஆம்பளை புள்ளை பொறந்தான்' என்றார் உருகி...அப்புறம் பக்கத்துலையே பொது கக்கூஸ் இருக்கு அங்க போயி ஒரு ப்ளேடு வாங்கிட்டு வந்து தொப்புள் கொடி அறுத்தோம்... ஆஸ்பத்திரிகாரங்க மனசாட்சியே இல்லாம இருக்காங்களே' என்றார் வேதனையோடு... >பின் பத்திரிக்கையாளர்கள் விஷயமறிந்து அங்கு சென்று பின் 108க்கு கால் செய்ய 200 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு வெகு விரைவாக  அரை மணி நேரத்தில் வந்தனர்... அதற்குள் லட்சுமிக்கு ரத்த போக்கு கடுமையானது... பின் அவரை பத்திரிக்கையாளர்கள் முயற்சியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட மேல் சிகிச்சை ஆரம்பித்தனர் மருத்துவர்கள்...'லட்சுமி என்ற இந்த பொண்ணு இங்க வரவேயில்லை' என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகம்... ஆனால் இப்பெண் காலையில் இங்கு வந்ததை அங்கே பிரசவ வார்டில் இருந்த மற்ற பெண்கள் உறுதி செய்தனர்...


கடவுளை விட உயர்வாக மக்கள் மதிக்கும் மருத்துவத்துறை இது போன்ற மோசமான செயல்களால் மலட்டுத்துறையாகி விட்டது என்கின்றனர் பொது மக்கள்...

செய்தி, படங்கள்: இளங்கோவன்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக