சனி, 20 ஏப்ரல், 2013

ராஜ்யசபா சீட் ! லோக் சபா சீட் ! கனிமொழி, சிதம்பரம், வாசன், வைகோ, கம்யுனிஸ்டு ராஜா, ஜால்ரா பாண்டியன்

தமிழக அரசியல் வித்தியாசமான சதுரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் கனிமொழி, இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப சிதம்பரம், ம.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் வைகோ, காங்கிரஸ் கட்சிக்குள் (முன்னாள் தமிழ்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவர்) இருக்கும் இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராகவும், ராஜ்ய சபை எம்.பி.யாகவும் இருக்கும் டி.ராஜா ஆகியோரை சூடுபிடிக்கும் ‘டெல்லி அரசியல்’ கண்டபடி மிரட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த ரவுண்டில் இந்திய ராஜ்ய சபையிலோ, நாடாளுமன்றத்திலோ தாங்கள் இடம்பெறுவோமா என்ற ‘சங்கடம்’ இந்த ஐவரையும் « வருக வருக » என்று வரவேற்கிறது. இந்த ‘பஞ்சபாண்டவர்களுக்கு’ இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள சோதனை தமிழகத்தில் பரபரப்பான விவாதங்களுக்கு விதை போட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ராஜ்ய சபை எம்.பி.க்கள் பதவி காலம் முடிவடைவதும், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இந்த திடீர் சோதனையின் பின்னணி விவகாரங்கள். தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள். ஒரு ராஜ்ய சபை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், தமிழகத்திலிருந்து 6 ராஜ்ய சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
ஆறு வருடங்கள் பதவிக்காலம் உள்ள இந்த பதவிக்கு ஏற்கனவே தேர்வு பெற்ற ஆறு ராஜ்ய சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை மாதம் முடிவடைகிறது. பதவிக்காலம் முடியும் பட்டியலில் இரு நட்சத்திர எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஒருவர் கனிமொழி. இன்னொருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா. அதேபோல் விரைவில் வரும் நாடாளுமன்ற தேர்தல் என்ற பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்களாக வைகோ, ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்ட மூன்று குதிரைகள் காத்திருக்கின்றன.
டி.ராஜாவா, தா.பாண்டியனா?
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்ய சபைக்கு வருகின்ற ஜூலை மாதம் ஆறு எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க முடியும். ஆளும் அ.தி.மு.க.விற்கு 151 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதனால் அக்கட்சியின் சார்பில் நான்கு ராஜ்ய சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். ஒரு ராஜ்ய சபை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அ.தி.மு.க.விற்கு நான்கு எம்.பி.க்களை தேர்வு செய்ய 136 வாக்குகள் தேவை.
அதுபோக அ.தி.மு.க.விடம் எஞ்சியிருக்கும் வாக்குகள் 15 மட்டுமே. ஆகவே ஐந்தாவது ராஜ்ய சபை பதவிக்கு அ.தி.மு.க. போட்டியிடாது. அதற்கு பதில் தன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த ஐந்தாவது ராஜ்ய சபை பதவியை விட்டுக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தேசிய செயலாளர் டி.ராஜா (இவர் பதவிக்காலம் ஜூலையில் முடிகிறது).
ஆகவே ஐந்தாவது சீட்டிற்கு, அ.தி.மு.க.வின் வாக்கு 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு 8, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு 10, அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் வாக்கு 1- இவை அனைத்தையும் சேர்த்து 34 வாக்குகளை பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜா வெற்றி பெற்று விட முடியும்.
ஆனால் அந்தக் கட்சிக்குள் ராஜ்ய சபை வேட்பாளர் பதவி மோகத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியனும் இருக்கிறார். அவர் ராஜாவை விட தமிழக முதல்வருக்கு அரசியல் ரீதியாக நம்பிக்கைக்குரியவர். ஆகவே, தா.பாண்டியனா, டி.ராஜாவா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்தக் குழப்பம் ராஜா மீண்டும் இந்திய ராஜ்ய சபைக்கு போவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ராஜ்ய சபை தேர்தலை விஜயகாந்த் புறக்கணிப்பாரா?
ஆறாவது ராஜ்ய சபை சீட் அ.தி.மு.க.விற்கும் இல்லை. அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் அந்த பதவிக்கு தே.மு.தி.க. (விஜயகாந்த் கட்சி) போட்டியிடுமா அல்லது தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்து போட்டியிலிருந்து அக்கட்சி விலகிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தே.மு.தி.க. விற்கு தமிழக சட்டமன்றத்தில் 29 வாக்குகள் உண்டு.
அதில் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் ‘அதிருப்தி எம்.எல்.ஏ.’க்களாக மாறி, ஆளும் அ.தி.மு.க.வுடன் ஏற்கனவே ‘நட்பு’ பாராட்டி விட்டார்கள். மேலும் ஆறு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சினையில் சிக்கி ஆறு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த சஸ்பென்ஷன் காலகட்டத்திற்குள் வரும் ராஜ்ய சபை தேர்தலில் இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க முடியுமா என்ற விவாதமும் கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் தே.மு.தி.க.விற்கு இருக்கும் 18 வாக்குகளை மட்டும் நம்பி ஆறாவது ராஜ்ய சபை சீட்டிற்கு போட்டியிடாமல் தே.மு.தி.க. ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உண்டு.
கனிமொழி தலைமேல் தொங்கும் கத்தியும் ராஜ்ய சபை பதவியும்!

அது மாதிரி சூழ்நிலை ஏற்பட்டால் கனிமொழி அந்த ஆறாவது சீட்டிற்காக களம் இறங்கலாம். ஏனென்றால் அதற்கான நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது. அவர் தலை மீது « 2-ஜி அலைக்கற்றை வழக்கு » கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி ஊழல் வழக்கில் (லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம்) « குற்றவாளி » என்று நிரூபணம் ஆகி விட்டாலே போதும்.
ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ‘தகுதியிழப்பு’ வந்து விடும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திருத்தம் அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. இந்த திருத்தத்தின்படி ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பதவியிலிருக்கும் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த தடையிலிருந்து ஒரு பாதுகாப்பு இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அதாவது பதவியிலிருப்பவர்கள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டால், அவர்களின் அப்பீல் முடியும் வரை இந்த ‘தகுதியிழப்பு’ அமலுக்கு வராது. அதற்குள் தேர்தல் வந்தால் தண்டிக்கப்பட்டவர் போட்டியிட முடியும்.
‘2-ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியே வருவேன்’ என்று கனிமொழி பேட்டி கொடுத்தாலும், அந்த வழக்கு அவர் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்திதான். 2-ஜி வழக்கு விசாரணை விரைந்து நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முறைப்படி 2014ஆம் வருடம்தான் வரும் என்றால், அதற்குள் இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆகவே வருகின்ற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்ய சபை தேர்தலில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது அவரது அரசியல் எதிர்காலத்தில் முக்கிய « நிர்பந்தம் » என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அதற்கு கனிமொழி போட்டியிட விரும்பும் அந்த ஆறாவது ராஜ்ய சபை பதவிக்கு போட்டி இருக்கக் கூடாது. ஆகவே கனிமொழியின் எதிர்காலத்தை தி.மு.க.வை விட இப்போது முடிவு செய்யும் இடத்தில் தே.மு.தி.க.இருக்கிறது.
‘கலைஞரின் உயிரோட்டமுள்ள எழுத்துக்கள்’- வைகோ வியூகம்! கலைஞர்
இது எல்லாம் ராஜ்ய சபை நிலவரம் என்றால், பாராளுமன்ற தேர்தல் நிலவரமும் வைகோ, சிதம்பரம், வாசன் உள்ளிட்டோருக்கு கலவரமாகத்தான் இருக்கிறது. ‘ இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நீங்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டும். அதுவும் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்’ என்று ஏப்ரல் 13ஆம் திகதி நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான ஈரோடு கணேசமூர்த்தி பேசியிருக்கிறார்.
அக்கூட்டத்தில் பேசிய வைகோவும், ‘இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுகிறோம். அது எப்படி என்பதை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் பார்த்துக்கொள்வோம். இப்போதைக்கு தேர்தல் நிதி திரட்டும் பணியில் இறங்குங்கள்’ என்று தன் கட்சியினருக்கு வைகோ அறிவுரை செய்துள்ளார். வைகோ நடைபயணத்தின்போது அவராகவே சென்று முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்.
அதிலிருந்து அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி உருவாகும் என்று ஹேஸ்யஹ்கள் உலாவுகின்றன. இலங்கை தமிழர்களுக்காக ‘பொது வாக்கெடுப்பு’ ‘போர்குற்ற விசாரணை’ ‘பொருளாதார தடை’ போன்றவற்றை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் வைகோ. உடனே அதே மாதிரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
அடுத்து தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மார்ச் 29ஆம் திகதி போராட்டம் நடத்தினார் வைகோ. மார்ச் 30ஆம் திகதி ஆலையை மூடி உத்தரவிட்டார். இதெல்லாமே தங்களுக்கு உள்ள வாக்கு வங்கியை மனதில் வைத்து செய்த முயற்சியாகவே ம.தி.மு.க. சீனியர் தலைவர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டி’ ‘கூட்டணியுடன் போட்டி’ என்றெல்லாம் வைகோ முடிவு செய்து விட்டாலும், அவருக்கு எத்தனை சீட்டுகள் கொடுப்பார்கள் என்பதுதான் அடுத்து வைகோவின் எதிர்காலத்தை முடிவு செய்யும். ஏனென்றால் 1998, 1999 நாடாளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.விடம் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளையும், தி.மு.க.விடம் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற்றது ம.தி.மு.க. அதே நேரத்தில் 2004, 2009 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விடம் தலா நான்கு தொகுதிகளை பெற்றது.
ஆகவே ஐந்து நாடாளுமன்ற தொகுதி, அப்படியில்லையென்றால் நான்கு நாடாளுமன்ற தொகுதி- இதுதான் இப்போது வருகின்ற 2014 நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. எதிர்பார்க்கும் தொகுதியாக இருக்க முடியும். இந்த எண்ணிக்கையை தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விதத்தில்தான் வைகோவின் அணுகுமுறைகள் அமைந்திருக்கின்றன.
காங்கிரஸிலிருந்து தி.மு.க. வெளியேறி விட்டதால், வைகோவிற்கு « கூட்டணி ஆப்ஷன் » தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கியக் கட்சிகளிடமுமே இருக்கிறது என்பதுதான் உண்மை. வைகோவின் எண்ணவோட்டம் அ.தி.மு.க. கூட்டணி என்று இருந்தாலும், அதற்காக அவர் தனக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள விரும்புவார் என்று தோன்றவில்லை.
அதனால்தான் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ‘கலைஞரின் எழுத்துக்கள் எவ்வளவு உயிரோட்டம் மிகுந்தவை. அந்த உயிரோட்டம் உள்ள எழுத்துக்கள் இன்று எங்கே போயிற்று?’ என்று வேதனைப்பட்டிருக்கிறார் வைகோ. ஆகவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் தொகுதிகளின் அடிப்படையிலேயே ம.தி.மு.க. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதும், 2014இல் வைகோ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதும் முடிவுக்கு வரும்.
ப.சிதம்பரம், ஜி.கே.வாசன்- சீக்ரெட் வியூகம்?
இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப சிதம்பரத்திற்கும், அதே கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசனுக்கும் வேறு மாதிரியான பிரச்சினை. ஏனென்றால் அடுத்த 2014 ஏப்ரல் மாதம் வாக்கில் ஜி.கே.வாசனின் ராஜ்ய சபை பதவிக்காலம் முடியும். அதே காலகட்டத்தில் சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலமும் முடியும். வாசனுக்கு அடுத்த ரவுண்டில் ராஜ்ய சபை உறுப்பினர் கிடைப்பதற்கு காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்றத்தில் இல்லை.
இப்போது அந்தக் கட்சிக்கு இருப்பது 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே! அதேபோல் சிதம்பரம் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற காங்கிரஸுக்கு தமிழகத்தில் கூட்டணி இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை மனதில் வைத்து தி.மு.க. காங்கிரஸை விட்டு வெளியேறிவிட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் காங்கிரஸை கூட்டணிக்காக அரவணைத்துக் கொள்ள தயாராக இல்லை.
இந்த சூழ்நிலையில் சிதம்பரமோ, வாசனோ தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் எந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டாலும் ‘வெற்றி பெறுவது’ என்பது குதிரை கொம்புதான்! இதை நாம் சொல்லவில்லை.
கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டும் பாடம். ஆகவே காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு கரை சேர முடியாது என்பதால்தான் ‘மீண்டும் தமிழ்மாநில காங்கிரஸ் காண்போம்’ என்று ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டுகிறார்கள். அப்படியொரு கட்சி துவங்கி அ.தி.மு.க.வுடனோ, தி.மு.க.வுடனோ கூட்டணி வைத்துக் கொண்டால் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு போய் விட முடியும் என்பது ஜி.கே.வாசன் தரப்பின் எண்ணம். அதை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸின் கொள்கையிலிருந்து விலகி நின்று இப்போதே, ‘இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது’ என்று கருத்துச் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
ஆனால் நிதியமைச்சர் சிதம்பரமும் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ‘அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் மதிக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார். மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்ட மறுநாள் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த சி.பி.ஐ. ரெய்டை கண்டித்து, ‘இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன் ’ என்று முதலில் ஆவேசமாக கருத்துச் சொன்னவர் சிதம்பரம்தான்.
காங்கிரஸ் வேட்பாளராக நின்று தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டுதான் சிதம்பரமும் இப்படிப் பேசியிருக்கிறாரா என்று பரபரப்பான விவாதங்கள் தமிழக காங்கிரஸ் கட்சியின் வேறு ஒரு தளத்தில் சீரியஸாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மறைந்த மூப்பனார் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்ட போது அவரிடமிருந்து விலகி ஜனநாயக பேரவை கண்டவர் சிதம்பரம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் எடுக்கப் போகும்   முடிவுகள்தான் அவர்களின் அடுத்த கட்ட நாடாளுமன்ற பிரவேசத்தையும், அரசியல் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் சக்திகளாக அமையும். அது மட்டுமல்ல, இன்றைய தேதியில் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ‘பஞ்சபாண்டவர்களின்’ அரசியல் எதிர்காலமும் அடுத்தடுத்து ஏற்படும் அதிரடி நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதே தற்போதைய அரசியல் அரிச்சுவடியாக அமைந்திருக்கிறது.
- எம். காசிநாதன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக