வியாழன், 25 ஏப்ரல், 2013

அத்வானி ஆவேசம்! காங்., பழி வாங்கும் நடவடிக்கை

பெங்களூரு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த
முறைகேடுகளை விசாரித்த, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில், உள்நோக்கத்துடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, காங்கிரசின் பழி வாங்கும் நடவடிக்கை' என, பாரதிய ஜனதா மூத்த தலைவர், அத்வானி கூறினார். கர்நாடகாவில், மே, 5ல் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநிலத்தின் பெல்காம் மற்றும் பீஜப்பூர் மாவட்டத்தில், அத்வானி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசியல் பழி வாங்கும் நோக்கிலேயே, முன்னாள் பிரதமர், வாஜ்பாயின் பெயரை, பார்லிமென்ட் கூட்டுக் குழு தலைவர், சாக்கோ, "2ஜி' முறைகேடுகள் தொடர்பான, தன் வரைவு அறிக்கையில் சேர்த்துள்ளார். இதன் மூலம், இந்த விசாரணையை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இந்த விவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.


ஜவகர்லால் நேரு முதல், மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களில், வாஜ்பாயை போன்ற சிறந்த பிரதமரை, இந்த நாடு கண்டதில்லை. பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இமாலய ஊழல்கள் நடைபெறவில்லை; மாறாக, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லஞ்சம் மற்றும் ஊழல்களுடன், ஒருபோதும் பா.ஜ., சமரசம் செய்து கொள்ளாது.

மத்தியில், மன்மோகன் பிரதமராக இருந்தாலும், அவர் தன் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த முடியாதவராக இருக்கிறார். அதே நேரத்தில், தேவ கவுடா, குஜ்ரால், சந்திரசேகர் ஆகியோர் சில நாட்களே பிரதமராக இருந்தாலும், அவர்களிடம் முழு அதிகாரம் இருந்தது. இவ்வாறு அத்வானி பேசினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக