ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

போட்டு உடைக்கிறார் ராஜா: பிரதமரின் ஆலோசனை படியே எல்லாம் நடந்தது

மந்திரிசபை கேபினெட் முடிவை செயல்படுத்தியதற்காக வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்ட ஒருவர் தன் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு அனுமதி கேட்பது நியாமான கோரிக்கைதானே?. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜா... அவர் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தால் ஏன் மறுக்கவேண்டும்? இது சாதாரண வழக்கல்ல. அப்படி இருக்க எப்படி ராஜா வின் சாட்சியை ஒதுக்க முடியும்... அப்படி என்றால் தீர்ப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதா? அப்படி ராஜாவிற்கு சாட்சியம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, கேபினட்டிற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்த, நிதி அமைச்சர் சிதம்பரமும், கூட்டுக்குழு முன் ஆஜராகாத நிலையில், ஜே.பி.சி யின் இந்த அறிக்கை பழி முழுவதையும் ராஜா மீது போட்டு காங்கிரஸ் கட்சியைக் காப்பற்றவே முயன்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
புதுடில்லி : 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரின் ஆலோசனைபடியே அனைத்தும் நடந்ததாகவும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அ.ராஜா பகிரங்க தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார். ராஜா குற்றச்சாட்டு : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எந்த தவறும் செய்யவில்லை என ஜெ.பி.சி., அறிக்கை சமர்பித்த சில நாட்களே ஆன நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ராஜா பிரதமர் மீது கூறி உள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது. 2ஜி வழக்கில் பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தவறான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், தொலைத்தொடர்பு உரிமம் ஒதுக்கீட்டில் பிரதமரின் கீழ் தான் நான் பணியாற்றி உள்ளேன் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது எனவும் ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமரின் ஆலோசனையின்படியே தான் செயல்பட்டதாகவும், இதை அனைவரிடமும் தான் தெரிவித்துள்ளதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்.



கருணாநிதி ஆதரவு :

பிரதமர் மீதான ராஜாவின் குற்றச்சாட்டை ஆமோதிக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதியும், பிரதமரின் வழிநடத்தல் இல்லாமல் அமைச்சர் ஒருவர் எவ்வாறு செயல்பட முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில் வழக்கில் அறிக்கை தொடர்பான ஜெ.பி.சி.,யின் முக்கிய கூட்டம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் திமுக இடையேயான பிளவு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., தலைவர்கள் ஆத்திரம் :

வாஜ்பாய் ஆட்சியின் போது புலம்பெயர்ந்த தொலைதொடர்பு வீரர்களுக்கு அனுமதி வழங்குவதில் ரூ.42,080 கோடி வருவாய் ஏய்ப்பு நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் 2ஜி விவகாரத்தில் ராஜாவின் கருத்து தொடர்பாக பேசிய பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், 2ஜி வழக்கில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு தொடர்பு இருப்பதையே ராஜாவின் கருத்து காட்டுவதாக தெரிவித்துள்ளார். ஜெ.பி.சி., தலைவராக இருக்கும் சாக்கோவே அறிக்கை தொடர்பான விவரங்கள் கசிய காரணம் என பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இது பார்லிமென்ட் நடவடிக்கைக்கு எதிரானது என பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் குற்றச்சாட்டு :

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது காங்கிரசின் அறிக்கையே தவிர ஜெ.பி.சி.,யின் அறிக்கை இல்லை எனவும், 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடைய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை காப்பாற்றவே இது போன்ற ஒரு போலியான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை விபரம் பார்லிமென்ட் குழு முன் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே காலையில் பத்திரிக்கைகளில் வெளியாகி விட்டதாக சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜா, பார்லிமென்ட் குழு முன் ஆஜராக ஏன் அனுமதி அளிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ராஜாவே முன் வந்து வாக்குமூலம் அளிக்க தயாராக இருந்த போது அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், அமைச்சராக இருந்த ஒருவருக்கு பார்லிமென்ட் குழு முன் பேச அனுமதி மறுக்கப்பட்டதும், அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக