ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

விவசாயக் கடன் தள்ளுபடி... 'மஞ்சள் குளித்த' கழக கனவான்கள்

'விவசாயக் கடன்கள் ரத்து... பல கோடி விவசாயிகள் பலனடைந்தனர்' என்று அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும். இப்படித்தான் கடந்த 2008-ல் மத்தியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியில் பார்த்தால், அதில் பெருமளவு தள்ளுபடி பணக்காரர்களாலேயே அனுபவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால்... விவசாயமே செய்யாதவர்கள், விவசாயி என்கிற போர்வையில் கடனையும் அதன் சலுகையையும் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. இதையெல்லாம் மத்திய கணக்கு தணிக்கை குழு சில மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்திவிட்டது!அதே ஸ்டைலில்... தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்ட லட்சணத்தை... தற்போது திமுக மற்றும் அதிமுக இரண்டு பேருமே சட்டமன்றத்திலேயே வெளிச்சம் போட்டுள்ளனர். 'நீ என்னை கால் வாரிவிடறியா... நான் உன் காலை வாரிவிடறேன்' என்பதுபோல... இரண்டு கட்சியினரும் ஆதரங்களோடு ஒருவரை ஒருவர் வாரிக்கொள்ள...விவசாயிகள் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது அம்பலமாகியிருக்கிறது!அவர்கள் பேசிக்கொண்டதை கீழே அப்படியே கொடுத்திருக்கிறேன்..பொழிப்புரை ஏதும் இல்லாமலே நீங்கள் அத்தனையையும் புரிந்து கொள்ள முடியும்1

திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி (ஆத்தூர்..''திமுக ஆட்சியில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக ரூ. 7 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. அதனால் 24 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்.''
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு< ''கடன் ரத்து செய்யப்பட்டவர்களில் பல லட்சங்கள் வரை லாபம் பெற்றவர்கள்'' என்று சொல்லி சிலர் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு பட்டியலைப் படித்தார். கூடவே, ''கடன் ரத்து காரணமாக உங்களுக்கு (திமுகவுக்கு) எவ்வளவு கிடைத்தது, அவர்களுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதை எல்லாம் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளிக்கிறேன்.''

தானும் ஒரு பட்டியலைப் படித்த பெரியசாமி, ''இதே கடன் ரத்தால் அதிமுக-வினரும் லட்சக்கணக்கில் லாபம் அடைந்தார்கள்'' என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,  ''திமுக, அதிமுக என்று குறிப்பிட்டுச் சொன்னாலும், வசதியான கோடீஸ்வரர்களே லாபம் பெற்றிருக்கின்றனர் என்பதை ஐ.பெரியசாமி ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்.''

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: ''திமுக ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக உறுப்பினர் கூறினார். ரூ.5,285 கோடி 66 லட்சம்தான் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பயன் பெற்றவர்கள் திமுகவினர்தான்.''

மு.க.ஸ்டாலின்: ''விவசாயிகள் கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எனக்குக் கிடைத்த தகவலின்படி அப்போது விவசாயக் கடன் ரத்தால் அதிமுகவினர்தான் அதிக லாபம் பெற்றனர்.''

செல்லூர் ராஜு: ''பலன் பெற்றவர்களின் பட்டியலை வெளியிட அரசு தயாராக இருக்கிறது.''

என்ன மக்களே... யார் யார் பலன் பெற்றார்கள் என்று தெரிந்துகொண்டீர்களா...? விவசாயிகள் என்கிற போர்வையில் கழகங்களைச் சேர்ந்த தனவான்களே பெரும்பாலான சலுகையை அனுபவித்துள்ளனர். ஆனால், ஐயாயிரம்... பத்தாயிரம் கடனை வாங்கி, அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான் நிஜ விவசாயி!

போங்க... போங்க... வர்ற தேர்தல்லயும் உங்க பொன்னான வாக்குகளை உதய சூரியன், இரட்டை இலை மற்றும் அவர்களுடைய தோழமை கட்சிகளின் சின்னங்களில் பதிச்சு, பெருவாரியா வெற்றி பெறச்செய்யுங்க. அப்பத்தானே நாம சீக்கிரமே 'பரதேசி' ஆக முடியும்!

-ஜூனியர் கோவணாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக