திங்கள், 15 ஏப்ரல், 2013

மறைந்த ராஜசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு

ஐதராபாத் :ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், இப்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜெகனுக்கு எதிராக, அமைச்சர்கள் பலர் திரும்பியுள்ளனர். ஜெகனையும், அவரின் தந்தையையும், "திருடன், கொலைகாரன்' என, கூறி வருகின்றனர்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் அலை வீசிய போது, மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, விவசாயிகளின் ஆதரவை பெற்று, 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தவர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.ஐந்தாண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்த அவர், 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி, சில மாதங்களிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
ராஜசேகர ரெட்டிக்குப் பதிலாக, அவர் மகன், ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதல்வர் பதவி வழங்க முன் வந்த காங்கிரஸ் மேலிடம், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டதால், கட்சி மேலிடத் தலைவர்களான, சோனியா, ராகுல் பற்றி, ஜெகன் மோகன் நடத்தும், "சாக்ஷி டிவி' அவதூறு செய்திகள் வெளியிட்டது.இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி, கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதற்கு அஞ்சாத அவர், "ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கி, எம்.பி.,யானார். இன்னொரு எம்.பி., மற்றும், 17 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டுள்ள அக்கட்சிக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.இதற்கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதாகி, 11 மாதங்களாக, ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டி, ஜெகனின் தாய், விஜயா, சகோதரி ஷர்மிளா ஆகியோர், பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை:


ஜெகன் மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், கடந்த ஆண்டு, மாநில அமைச்சர், தர்மன பிரசாத் ராவ் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது போல், கடந்த சில நாட்களுக்கு முன், உள்துறை அமைச்சர், சபிதா ரெட்டி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இதனால், ஜெகனுக்கு எதிராக, ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மாநில நிதியமைச்சர், ஆனம் ராமநாராயண ரெட்டி கூறியதாவது:முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, கை காட்டிய இடத்தில் நாங்கள் கையெழுத்து போட்டோம்; எங்களுக்கு எதுவுமே தெரியாது; எல்லாவற்றையும் ராஜசேகர ரெட்டி தான் செய்தார்; அவர் பின்னணியில், ஜெகன் இருந்தார். இப்போது எங்களை சி.பி.ஐ., பிடித்து வருகிறது.நடந்த முறைகேடுகள் அனைத்திற்கும், ஜெகன் மோகன் ரெட்டியும், அவரின் மச்சான், மதபோதகர், அனில்குமாரும் தான் காரணம். ஒன்றுமே தெரியாத அமைச்சர்கள், அவர்களால் இப்போது சிக்கலில் சிக்கியுள்ளனர்.ஜெகன் அடைக்கப்பட்டுள்ள, ஐதராபாத், சஞ்சலகுடா சிறையில், அவருக்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது; ஆடம்பரமாக உள்ளே வாழ்ந்து வருகிறார்; அங்கிருந்தவாறு, மாநில அரசியலை ஜெகன் ஆட்டிப் படைக்கிறார்; திருடன், கொலைகாரரான, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில காங்கிரஸ் தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான, போட்சா சத்யநாராயணா கூறும் போது, ""அடுத்த தேர்தலில், ஜெகன் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது; அவரை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

மற்றொரு அமைச்சரான, பார்த்தசாரதி, ""ஒய்.எஸ்.ஆர்., என்ன செய்தாலும், அதை எங்களால் தட்டிக்கேட்க முடியாத நிலையில் தான் இருந்தோம். அதற்கான தண்டனையை, எங்கள் அமைச்சர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்'' என்றார்.


பதிலடி:
இவர்களைப் போலவே, விவசாய அமைச்சர், கண்ணா லட்சுமி நாராயணா போன்ற பலரும், ஜெகனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளதால், ஜெகனில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்."இவர்கள் என்ன சின்னக் குழந்தையா... காட்டும் இடத்தில் கையெழுத்து போட? மறைந்த தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்; ஏராளமான பணத்தை சுருட்டி, கொழுத்துப் போயுள்ள இவர்கள், குறை சொல்வதா?' என, ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறி வருவதால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக