செவ்வாய், 9 ஏப்ரல், 2013

19 திமுக MLA க்கள் சஸ்பென்ட்! அவர்களின் நாவுக்கு அவ்வளவு பயம்

சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்வதில் மிக திறமையாக
செயல்படும் தமிழக சட்டமன்ற சபாநாயகர், தமது சாதனை இலக்கை எட்டிக்கொண்டு இருக்கிறார். சாதனை முயற்சியாக நேற்று, 19 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை 19 பேர், இரண்டு நாட்களுக்கு, சட்டசபை நடவடிக்கையிலிருந்து, சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
இவர்கள். சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார்கள் என்பதே ட்ரபிள். அவர்கள் ஏன் பேச வேண்டும்? அமைச்சர் பேசியதற்கு பதில் கூற முயன்றார்கள்.
சட்டமன்றத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் பேசியபோது, “காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், தி.மு.க. துரோகம் செய்துவிட்டது’” என்று ஒரு ‘பிட்’டை தூக்கி போட்டார்.
இதற்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன், “தி.மு.க. அரசு என்ன துரோகம் செய்தது என்பதை, பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் கூற வேண்டும்; அவரின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.
அமைச்சர் ராமலிங்கம் பதில் கூற ரெடியாக வரவில்லையோ, அல்லது, பதிலடி அருமையாக இருக்காதோ என்று தெரியவில்லை. அவரை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க, அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் முனைந்தனர். இறுதியில், சபை முன்னவரான அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் கூறினார்.

இடைமறித்த துரைமுருகன், “பொதுப்பணித் துறை அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
ஆனால், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுவதற்கு, சபாநாயகர் அனுமதி அளித்தார்.
பன்னீர்செல்வம், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தி.மு.க., அரசு எடுக்கவில்லை. எனவே, காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில், தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்பதையே பொதுப்பணித் துறை அமைச்சர் கூற வந்தார்” என்றார்.
என்னதான் இருந்தாலும், அம்மாவுக்கு அடுத்தபடியாக முதல்வராக வரக்கூடிய ஆளல்லவா! அவர் என்ன கூற வந்தார் என்பதை இவர் சரியாக பிடித்து விட்டார்.
இந்த அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்க, துரைமுருகன் எழுந்தார். சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
“பேச அனுமதி அளிக்கிறேன் என அமர வைத்துவிட்டு, அமைச்சரை பேச வைத்தீர்கள். அமைச்சர் பேசிய பின், எனக்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?” என, சபாநாயகரிடம் துரைமுருகன்கேட்டார்.
“உங்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது; இனி அனுமதிக்க முடியாது” என சபாநாயகர் கூறினார்.
இதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ” பேச வாய்ப்பு கொடு” என, கோஷமிட்டவாறு, சபாநாயகர் இருக்கை முன் சென்று அமர்ந்தனர். அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களை சபை காவலர்கள் வெளியேற்றியதும், ஸ்டாலின் உள்ளிட்ட சிலர், தரையில் படுத்துக் கொண்டனர். அவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி சபை காவலர்கள் வெளியேற்றினர்.
இதையடுத்து சபாநாயகர் தனபால், ‘சபைக்கு வந்திருந்த’ தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை இரு நாட்கள் சஸ்பெண்ட் செய்து சாதனை படைத்தார்.
இதில், தி.மு.க.வின் மொத்த பலமான 23 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் சிக்கியுள்ளனர்; சபைக்கு வராத, நான்கு பேர் (தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெ.அன்பழகன், சுப.தங்கவேலன், சிவசங்கர்) தப்பிவிட்டனர்.
சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது, ஒரு உறுப்பினர் இரண்டு முறை வெளியேற்றம் அல்லது மூன்று முறை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானால், அவர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. இந்த விதிப்படி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரு தண்டனைகளையும் பெற்று விட்டனர்.
எனவே, மே 16-ம் தேதி வரை நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இவர்கள் தொடர்ந்து பங்கேற்க முடியுமா? விடவே கூடாதுங்க சபாநாயகர் அவர்களே!
On Virunews:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக