வியாழன், 14 மார்ச், 2013

Manmohan Sing:வாக்குறுதியை காப்பாற்றா விட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

கொடுத்த வாக்கை காப்பாற்றா விட்டால், அதற்குரிய விளைவுகளை, இத்தாலி அரசு சந்தித்ததே தீர வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் எச்சரிக்கை விடுத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரியில், கேரளாவைச் சேர்ந்த, இரு மீனவர்களை, இத்தாலி நாட்டுக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் இருவர், சுட்டுக் கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து, மீனவர்களை தவறுதலாக சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது.கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், "இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், அவர்கள் இத்தாலி சென்று வர, நான்கு வாரங்களுக்கு அனுமதி வழங்கியது.அவர்களை திரும்ப இந்தியா கொண்டு வந்து ஒப்படைப்பதாக, இத்தாலி நாட்டு தூதரகம், சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தது.
இந்நிலையில், "கடற்படை வீரர்களை, திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்பும் திட்டம் இல்லை' என்று இத்தாலி அரசு, இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அறிவித்தது.


"இ-மெயில்' செய்திருக்கலாமே?இந்த விவகாரம், சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நேற்று ராஜ்ய சபாவில், இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:இந்தியாவின் மீது, தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை ஏவி விடும் நாடுகள் உள்ளன. இத்தாலியோ, ஏமாற்றத்தை ஏவி விடும் நாடாக உள்ளது. எந்த அடிப்படையில், இந்த மாலுமிகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர் என்பது புரியவே இல்லை.ஓட்டு போட்டு, திரும்பவும் வந்து விடுவதாக கூறி, இத்தாலிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டை, "இ-மெயில்' மூலம் கூட செலுத்தலாம் என, இத்தாலி நாட்டு உள்துறை அமைச்சரே, கூறியிருக்கிறார். அப்படியிருக்க, கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபர்களை, இத்தாலிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, இந்தியாவை விட்டு வெளியேற வைத்திருப்பது, இது முதல் முறை அல்ல. போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சி கூட, இதேபோல அனுப்பி வைக்கப்பட்டவர் தான்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், ""ஓட்டு போடுவதற்கு, நான்கு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், இதை ஏன், அரசு வக்கீல் எதிர்க்கவில்லை என்பதும், புரியவில்லை,'' என்றார்.

அ.தி.மு.க.,வின் மைத்ரேயன்,""இத்தாலி நாட்டு தூதரை, உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போதுதான் அந்நாட்டுக்கு புத்தி வரும்,'' என்றார்.

தி.மு.க.,வின் சிவா, ""இதை, இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருத வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை, அரசு அனுப்பி வைத்தது எதற்காக என்பது தெரிந்தாக வேண்டும்,'' என்றார்.

விவாதம் நடத்தலாம்:பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத், ""இந்த விவகாரம் குறித்து, முழு அளவில் விவாதம் நடத்த, அரசு தயாராக உள்ளது,'' என்றார். இந்த பதிலால், அதிருப்தி அடைந்த, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். இதனால், சபை, மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவிலும்...:லோக்சபாவிலும், இந்த விவகாரம், நேற்று புயலை கிளப்பியது.

பா.ஜ., மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில், ""வியன்னா விதிமுறைகளை விட, இந்திய அரசியல் அமைப்பு சட்டம், உயர்வானது. அதையும், சுப்ரீம் கோர்ட்டிற்கு அளித்த உறுதிமொழியையும் மீறிய, இத்தாலி தூதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, இரு சபைகளிலும், நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: இத்தாலி அரசின் செயலை, ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா - இத்தாலி நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை, முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில், இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி, இத்தாலி அரசை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.சுப்ரீம் கோர்ட்டில் அளித்த நம்பிக்கை வாக்குறுதியை, அந்நாடு காப்பாற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதியை மீறினால், அதற்குரிய பின் விளைவுகளை, அந்நாடு சந்தித்தே தீர வேண்டும்இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக