செவ்வாய், 12 மார்ச், 2013

ஜக்கி வாசுதேவை ஆதரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு!

ஈஷாவுக்கு விருதுvinavu.com  ஜக்கி வாசுதேவை ஆதரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு!"
ஜக்கி வாசுதேவ் மோசடியாக எப்படி ஒரு ஆன்மீக தொழிலதிபரானார் என்பதை, அரசு ஆணைகள், புகைப்படங்கள் என விரிவான ஆதாரங்களுடன் சவுக்கு வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரையை படிப்பதோடு பரப்புமாறும் பரிந்துரைக்கிறோம். ஒரு கேடி கிரிமினல் ஆன்மீகம் எனும் பெயரில் ஊரை ஏமாற்றி வளைத்துப் போட்டுக் கொண்டதோடு, இருக்கும் சட்ட நடைமுறைகளை மயிரளவுக்கும் மதிக்காமல் திமிர்த்தனமாக நடந்து வருவதை விரிவான ஆதாரங்களோடு சவுக்கு கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

படம் : சவுக்கு
ஜக்கியின் மோசடிகள் மற்றும் திருட்டுத்தனங்கள் எனும் அளவில் சவுக்கின் கட்டுரை சரியான முறையில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தொகுப்பான புரிதலுக்காக மேலும் சில விவரங்களையும் இணைத்துப் புரிந்து கொள்வதே சரியானதாக இருக்கும் என்று இந்த சிறு குறிப்பையும் சேர்த்து வினவு வாசகர்கள் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.
ஜக்கி வாசுதேவை ஆனந்த விகடன் வளர்த்து விட்டதும், கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியோடு ஜக்கிக்கு ஏற்பட்ட நெருக்கமும் அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும், இவை மாத்திரமே அவரது இமாலய வளர்ச்சிக்குக் காரணமில்லை. மகரிஷி மகேஷ் யோகியின் வழிவந்தவரான ஸ்ரீ ரிஷி பிரபாகர் என்பவரிடமிருந்து ‘யோக’ (தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனம் இன்னபிற) முறைகளைக் கற்றுக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ், மைசூரிலிருந்து தமிழகம் வந்து தனது கடையைத் திறந்த ஊர் திருப்பூர். ரிஷி பிரபாகரிடமிருந்து பிரிந்து வந்து தனி கம்பேனி ஆரம்பிக்கும் ஜக்கி, அங்கே தான் முதன் முதலாக தனது அறக்கட்டளையை பதிவு செய்தார்.
திருப்பூர் பனியன் முதலாளிகளைப் புரவலர்களாக கொண்டு தொண்ணூறுகளின் துவக்கத்திலேயே தனது “சகஜஸ்திதி யோகா” வகுப்புகளைத் துவங்குகிறார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் கோவையில் ஆலந்துறையை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இடங்களை வளைக்கிறார். 1999-ம் ஆண்டு அங்கே தியான லிங்கத்தை நிறுவியதில் இருந்து அவரது அசுர(தேவ) வளர்ச்சி துவங்குகிறது. இரண்டாயிரங்களின் துவக்கத்திலேயே இவர் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு (கார்ப்பரேட் மார்கெட் உத்திகளால்) லட்சக்கணக்கானவர்கள் வரத் துவங்கினர். நல்ல பிரபலம் அடைந்த பின் தான் “அத்தனைக்கும் ஆசைப்படு” தொடர் விகடனில் வெளியாகத் துவங்கியது.

ஜக்கி வாசுதேவை வியாபாரத்துக்காக விகடன் பயன்படுத்திக் கொண்டது

காடு அழிப்பு
சவுக்கு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் ஜக்கி சட்ட நடைமுறைகளை வளைத்துக் கொள்ள அரசு தொடர்புகளை அவரது துவக்க காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளார். . தொண்ணூறுகளில் ஜக்கி வளைத்துக் கொண்ட வனப் பகுதிகளை இரண்டாயிரத்தில் வந்த ஜெயலலிதா அரசும் கூட கைப்பற்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

காடு அழிப்பு – படம் : சவுக்கு
போலவே, ஜக்கி வாசுதேவுக்கு சற்றும் குறையாத கிரிமினல் வேலைகளை பால் தினகரனின் காருண்யாவும் அதே சிறுவாணி பகுதியில் அதே காலகட்டத்தில் நடத்தி வந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லூர்பதி என்கிற ஆதிவாசி கிராமத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்து கொண்ட ‘ஏசு வருகிறார்’ கும்பல், அந்த ஊரின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றிக் கொண்டதோடு அப்பகுதியில் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பினர். அதே பகுதியில் இயங்கி வரும் சின்மயா மிஷன், ஏசு கும்பலான காருண்யா மற்றும்  ஈஷா ஜக்கி கும்பலிடையே அந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துவது என்கிற போட்டி இரண்டாயிரங்களின் துவக்கத்தில் ஏற்பட்டது.
ஒருபக்கம் காருண்யா தனது ‘நற்செய்திப் பட்டாளத்தை’ களமிறக்கி விட – ஆங்காங்கே சுவிசேஷ மையங்கள் முளைக்கத் துவங்கின. இன்னொரு பக்கம் ஈஷாவின் சார்பாக நடத்தப்பட்டு வந்த கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் சார்பில் நடமாடும் சுகாதார நிலையங்கள் ஆதிவாசி கிராமங்களை வட்டமிடத் துவங்கின. இவர்களுக்குள் நிலவிய தொழில் போட்டியை சாதகமாக்கி அந்தப் பகுதியில் ஒரு இந்துத்துவ வோட்டு வங்கியை அறுவடை செய்ய நினைத்த சங்க பரிவாரங்கள் தமது பரிவார அமைப்பான வனவாசி கல்யாண் ஆஷ்ரமை இறக்கினர். நல்லூர்பதி ஆதிவாசி கிராம தலைவரின் மகனான கணேஷ், பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (ஏ.பி.வி.பி), ஆலாந்துரை சுப்பிரமணி (பி.ஜெ.பி) போன்றோர் முன்னின்று இந்துத்துவ அடிப்படை ஒன்றை உருவாக்க முயன்றனர்.
வனவாசி கல்யாண் ஆஷ்ரம் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்துவது  என்பதைத் தொடர்ந்து உச்சகட்டமாக கடந்த அ.தி.மு.க ஆட்சி சமயத்தில் இந்து முன்னணியின் ஏற்பாட்டில் ‘வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு’ மாநாடு ஒன்றும் நடந்தது. கோவையைச் சுற்றியுள்ள சிவலிங்கேஷ்வரர், சிவக்குடில் சித்தர், பேரூர் ஆதீனம் உள்ளிட்ட மடச் சாமியார்கள் பலரும், ஜெயேந்திரனும் கலந்து கொண்ட இம்மாநாட்டின் ஏற்பாடுகளில் ஈஷாவும் சின்மயா மடமும் முக்கிய பங்காற்றின. ஈஷாவும் சின்மயா மடமும் நேரடியாக இந்துத்துவ இயக்கங்களுக்கும் ஆதிவாசி மக்களுக்குமான இணைப்புப் புள்ளியாக இந்த காலகட்டத்தில் செயல்பட்டு வந்தது.
மற்ற எல்லா கார்ப்பரேட் சாமியார்களின் வளர்ச்சிக் கதைகளுக்கும் ஜக்கியின் வளர்ச்சிக் கதைக்கும் பெருமளவில் ஒற்றுமை இருப்பதைக் காணமுடியும். ஏமாந்த சோணகிரிகளின் மண்டையில் மிளகாய் அரைத்தார் என்றோ கருணாநிதியும் விகடனும் வளர்த்து விட்டனர் என்றோ எளிமையாகப் பார்க்க முடியாது. நவ தாராள பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் அதிகரித்து வரும் மக்களின் உளவியல் சிக்கல்கள் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் என்பவற்றின் பின்புலத்தில் புற்று நோய் போல் கார்ப்பரேட் சாமியார்கள் பல்கிப் பெருகுவதை புதிய கலாச்சாரத்தின் இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.  இந்தப் பின்னணியில் வைத்து சவுக்கு அம்பலப்படுத்தியுள்ள விவரங்களைப் புரிந்து கொள்வது சரியானதாக இருக்கும்.
ஜக்கி வாசுதேவ் மோசடியாக எப்படி ஒரு ஆன்மீக தொழிலதிபரானார் என்பதை, அரசு ஆணைகள், புகைப்படங்கள் என விரிவான ஆதாரங்களுடன் சவுக்கு வெளியிட்டிருக்கும் இந்தக் கட்டுரையை படிப்பதோடு பரப்புமாறும் பரிந்துரைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக