வெள்ளி, 29 மார்ச், 2013

S. ஜானகியின் சுயமரியாதை அவர் பாடல்களைப் போல் உயர்ந்து நிற்கிறது

janaki-various-artists-எஸ். ஜானகி பத்மபூஷன் விருதை வாங்க மறுத்ததை பற்றி?
-சின்னவர், பாண்டிச்சேரி.
கொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழர்களின் இனிமைகளில் ஒன்று.
அந்தப் பாடல் பெண் குரலுக்கும் நாதஸ்வரத்திற்குமான டூயட்.
முதலில் பெண் குரலும் அதைத் தொடர்ந்து அதையே நாதஸ்வரத்தில்
வாசிப்பதுமாக, நாம் இப்போது கேட்பதுபோல் அந்தப் பாடல் பதிவு செய்யப்படவில்லை.
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடுவின் உன்னத இசையமைப்பில் நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்தின் அமர்க்களமான வாசிப்பில், முதலில் நாதஸ்வர இசைதான் பதிவு செய்யப்பட்டது.
நாதஸ்வரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரலைத் தேடி பல முன்னணி பாடகிகளை பாட வைத்து பார்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.
மும்பை சென்று லதா மங்கேஷ்கர் வரை முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் காருக்குறிச்சியின் நாதஸ்வர வாசிப்பிற்கு முன் எந்தக் குரலும் எடுபடவில்லை.
பிறகுதான் எஸ். ஜானகியை பாட வைத்திருக்கிறார்.
பாட்டை கேட்டவர்களுக்குத் தெரியும். காருக்குறிச்சி அருணாசலத்துனுடன் ‘பாக்கலாம், உன் நாதஸ்வரமா? என் குரலா?’ என்று சவால் விடுவது போல் பாடியிருப்பார் ஜானகி.
இது நடந்தது 1962 ஆம் ஆண்டு. அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது 2013 ஆம் ஆண்டு. என்ன நியாயம் இது?

ஜானிகியிடம் இருந்த உன்னதமான பாவங்களையும்; குழைந்து, வளைந்து, எதிர்பாராத இனிய திருப்பங்ளோடு அமைந்த அவரின் சங்கதிகளையும் முழுமையாக பயன்படுத்தியவர் அல்லது வெளி கொண்டுவந்தவர் இசைஞானி இளையராஜா.
செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் அவர் காட்டிய பாவம் உலக உன்னதம்.
‘சின்னத் தாய் அவள் தந்த ராசாவே’ பாடல் இதற்கு மேல் ஒரு பாடகர் இவ்வளவு உருக்கும் பாவங்களோடு பாட முடியுமா?
காலதாமத பத்மபூசனை திருப்பி ‘அடித்த’ திருமதி ஜானகி அவர்களின் சுயமரியாதை அவர் பாடல்களைப் போல் உயர்ந்து நிற்கிறது.
தங்கம் 2013 மார்ச்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக