திங்கள், 4 மார்ச், 2013

கல்யாணத்துக்காக பெண்களை வளர்ப்பதா? : ரீமா கல்லிங்கல் ஆவேசம்

 ‘கல்யாணம் பண்ணித்தர மட்டுமே பெண்ணை வளர்க்கக்கூடாது’ என்று ஆவேசப்பட்டார் ரீமா கல்லிங்கல். ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ‘டேம்’ படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் இவர் நடித்த ‘22 பிமேல் கோட்டயம்’, ‘நித்ரா’ ஆகிய 2 படங்களுக்காக கேரளா அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களாகவே 22 பிமேல் கோட்டயம், நித்ரா பட வாய்ப்புகள் அமைந்தது. இதில் நடித்தபோது என்னைவிட படத்திற்கும் அதில் நடித்தவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய கவுரவமாக கருதுகிறேன். தற்போது வரும் படங்கள் புதிய தலைமுறையினருக்கான படங்கள் என்கிறார்கள்.
நான் அப்படி கருதவில்லை. அவை எல்லாமே சமகாலத்துக்கான கதைகள்தான். பெண்கள் இன்றைக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்ணை பெற்ற பெற்றோர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால்போதும் என்ற எண்ணத்துடன்தான் வளர்க்கிறார்கள். இது பெண்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். அவர்கள் வெறும் வீட்டு பறவைகளாக அடங்கிவிடாமல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் அக்கறை கொண்டு முன்னேற வேண்டும். அடுத்து ‘ஆகஸ்ட் கிளப்’ என்றபடத்தில் நடிக்கிறேன். இது மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. சாவித்ரி என்ற கதாபாத்திரத்தில் 2 குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறேன். இதற்குமுன் இதுபோல் வேடம் ஏற்கவில்லை. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக