வெள்ளி, 8 மார்ச், 2013

நான் ஹரியானாவின் மகாராஜா.பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?

பூபிந்தர் சிங் ஹூடாமாருதி நிர்வாகத்தாலும் மாநில அரசாலும் பழிவாங்கப்படும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா அவர்களை ஒரு ரவுடியை போல மிரட்டி திட்டியிருக்கிறார். 2,500 தொழிலாளர்கள் வேலை நீக்கத்தையும் 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதையும் எதிர்த்து நடத்தப்படும் அவர்களது போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டியிருக்கிறார்.
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!” என்று முழங்கினாராம் ஹூடா.
மானேசர் தொழிலாளர்கள்
சென்ற ஆண்டு ஜூலை 18 அன்று முதலாளிகளின் அடக்குமுறைகளின் விளைவாக மாருதி மானேசர் தொழிற்சாலைக்குள் மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து நிர்வாகம் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் 150 தொழிலாளர்களை ஹரியானா போலீஸ் கைது செய்து பொய் வழக்குகளை சுமத்தியது. 546 நிரந்தர தொழிலாளர்களையும் சுமார் 2,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் மாருதி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.
மாருதி மானேசர் தொழிற்சாலையில் காலை 5 மணிக்கு புறப்பட்டு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் 7 மணி முதல் 8 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இடையில் டீ குடிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் சேர்த்து 7 நிமிடங்கள் இடைவேளையும், 0.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கான்டீனுக்குப் போய் சாப்பிட்டு வருவதற்கு அரை மணி நேர உணவு இடைவேளையும் வழங்கப்படும். ஒரு நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தாலும் அரை நாள் சம்பளம் வெட்டப்படும். பக்கத்து தொழிலாளர்களுடன் பேசக் கூடாது. குற்றம் குறைகளை எடுத்து சொல்லக் கூடாது.

இத்தகைய வியர்வைக் கூட பணி நிலைமைகளை எதிர்த்தும் நிர்வாகத்தின் கைப்பாவை யூனியனை நிராகரித்து தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்த யூனியனை அங்கீகரிக்க கோரியும்  தொழிலாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்கு தொழிற்சாலை நிர்வாகமும் மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசும் தொடர்ந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளின் விளைவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வன்முறையும் அதைத் தொடர்ந்து சுமார் 2,500 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதும்.
யூனியன் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தற்காலிக கமிட்டி ஒன்றை தேர்ந்தெடுத்து  போராடுகிறார்கள். கடந்த ஜனவரி 27ம் தேதி முதலமைச்சர் ஹூடாவின் ஊரான ரோஹ்தக்கில் பேரணி ஒன்றை நடத்தினார்கள். பிப்ரவரி 5ம் தேதி 15 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தினார்கள்.
பிப்ரவரி 20,21ம் தேதிகளில் நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட மாருதி குர்கான் தொழிற்சாலை ஊழியர்கள் மானேசர் தொழிலாளர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார்கள்.
மாருதி சுசுகி ஊழியர்கள் யூனியன் பிரதிநிதிகளை சந்திப்பதை பல முறை தவிர்த்து வந்த ஹரியானா முதல்வர் ஹூடா இறுதியில் பிப்ரவரி 23ம் தேதி சந்திக்க நாள் கொடுத்தார். ஆனால், சந்திப்பின் போது ‘வேலை நீக்கங்களையும், கைதுகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று அவர் மிரட்டியிருக்கிறார். அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, ‘உங்களை இதே இடத்தில் கைது செய்து உள்ளே வைக்க முடியும்’ என்று அதிகார திமிருடன் கத்தியிருக்கிறார்.
“முதலமைச்சர் ஒரு ரவுடியை போல தொழிலாளர்களை மிரட்டினார். என்னிடம் மறுபடியும் வராதீர்கள், சட்டம் தன் கடமையைச் செய்யும். அதிகமாக பேசினால் இந்த இடத்தை விட்டு வெளியே போக முடியாது. இங்கேயே கைது செய்ய உத்தரவிடுவேன் என்று மிரட்டினார்” என்கிறார் மாருதி தொழிலாளர்களின் வழக்கறிஞர் ராஜேஷ் பதக்.
ஹூடாவின் காங்கிரசு மாநில அரசு மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மாருதி முதலாளிகளுக்கு ஆதரவாக 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்த யூனியனை அங்கீகரிக்க மறுத்தது; தொழிற்சாலை நிர்வாகத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு போலீஸ் படையை அனுப்பி வைத்தது; ‘நன்னடத்தை’ கடிதம் எழுதி தமது உரிமைகள் அனைத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் மிரட்டலை ஆதரித்தது; தொழிலாளர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது; மாருதி நிர்வாகம் சுமார் 2,500 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியதை ஆதரித்தது; மாருதி நிர்வாகத்தின் உத்தரவுப்படி 150 தொழிலாளர்களை சிறைப்படுத்தி, பொய் வழக்குகள் போடுவதையும் சிரமேற்கொண்டு செய்திருக்கிறது.
சிறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், சிறையில் எலக்ட்ரிக் ஷாக், கால்களை இழுத்து சித்திரவதை செய்யப்படுவது, தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைப்பது என்று கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். மானேசர் தொழிலாளர்களை ஒடுக்குவதன் மூலம் நாட்டின் தொழிலாளர்கள் இயக்கத்தை ஒடுக்கி, ‘குறைந்த கூலி, மோசமான பணிச்சூழல் இவற்றை எதிர்த்து யாரும் போராட மாட்டார்கள்’ என்று உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்க முயற்சிக்கின்றன ஹரியானா மாநில அரசும், காங்கிரசு தலைமையிலான மத்திய அரசும்.
புதிதாக சேர்க்கப்பட்ட தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கும் மானேசர் தொழிற்சாலை, 200 ஹரியானா போலீஸ் கான்ஸ்டபிள்களும் கருப்பு கோட்டு அணிந்த தனியார் செக்யூரிட்டிகளும் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  செயல்படுகிறது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட மாருதி மானேசர் தொழிலாளர்களின் போராட்டம் குர்கான்-மானேசர் தொழில் நகரங்களிலும் இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவை பெற்றிருக்கிறது.
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான மாருதி சுசுகி தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தின் மீது பூபிந்தர் சிங் ஹூடா வசை மாரி பொழிந்திருக்கிறார். ஹூடா போன்ற அரசியல்வாதிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவரே அன்றி தொழிலாளர்களின் போராட்டம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக