புதன், 27 மார்ச், 2013

தமிழ்நாட்டில் நடக்கும் புலி நாடக அரசியல்

மீண்டும் கொம்பு சீவாதீர்கள்


தற்போது இலங்கைத் தமிழ் அரசியலை எழுதுவது மிகவும் சலிப்பான விடயமாகிறது.
 எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தொடக்கப் புள்ளியை விட்டு முன்னேறாது. இதில் ஒரு வசதி தமிழ் நாட்டு மெகா சீரியல்போல் ஒருமாதம் விடுமுறை போகையில் பார்க்காது இருந்தாலும் மீண்டு வந்து கலந்து கொள்ளமுடியும். இரசித்துக் கொள்ள முடியும்சீரியலாக இருந்துவிடுவதால். ஆனால் பல இலட்சம் மக்களது வாழ்க்கை பிரச்சனையாக இருப்பதால் மனம் கசந்து விடுகிறது. இப்படியான நிலையில் நாம் எழுதி என்ன சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தி தான் மிஞ்சும்.அதேபோல் சொல்லி என்ன பிரயோசனம் என எழுதாமல் விடவும் மனம் கேட்கவில்லை.
தற்போது தமிழ் நாட்டில் நடக்கும் நாடக அரசியல் ,அத்துடன் புலம் பெயர்ந்த
தமிழ் புலிபிரமுகர்கள் இந்த ஜெனிவா கூட்டத்தொடரை ஓட்டிய நாட்களில்
நடத்தும் சின்னமேள கூத்துகளும், ஆழமான சிந்தனையில்லாமல் பார்ப்பவர்களுக்கு
,இரசிக்கக் கூடிய விடயங்களாக இருக்கும். இரண்டு தடவைகள் ஜெனிவா கூட்டத்தொடரில் பார்வையாளராக பங்கு பற்றிய எனக்கு டைரக்டர் சீமான் புலிக் கொடியோடு நின்றதை போட்டோவில் பார்த்தபோது வடிவேலின் காமடிகளை இப்ப டைரக்டரே செய்வது போல் இருந்தது. அந்தக்காலத்து பாக்கியராஜ் ஞாபகம் வந்தது.
சில நண்பர்கள் கொண்டைக்கடலை தின்ற வயிறு மாதிரி இது கொஞ்ச நேரத்துக்குப்பின் அமைதியாகி விடும். பேசாமல் இரு என்கிறார்கள். விமானம் வைத்து வேடிக்கை காட்டி, கப்பலோட்டிய வல்வெட்டித்துறை ‘தலையே‘ இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது. இவர்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்கள்.
அதுவும் உண்மைதான்
நான் இங்கே சொல்ல வருவது சாதாரணமான சிந்தனைக்கு அப்பாற்பட்டது. வருங்காலத்து சந்ததியனருக்கும் பல வருடங்களின் பின் பின்பும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது.

இலங்கைத்தமிழர்கள் மனத்தில் எழுந்த ஆயுதத்தை பற்றிய சிந்தனையும் 83ன்
பின் ஆயுதபோராட்டமும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல மற்றையோரும்
ஆதரித்தது. இதற்காக என் போன்றவர்களும் இதில் முடிந்த பங்கை ஏற்றோம்.
அப்பொழுது இலங்கைத் தமிழன் இலங்கையின் வன்முறையான அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்து தனது வாழும் உரிமைக்காக போராடுகிறான் . ஆயுதம் இலங்கை அரசை பேச்சுவார்தைக்கு கொண்டு வரும் உத்தியாகவும் அரசியல் தீர்வில் பேரத்தில் ஈடுபடுவதற்கான முதல் நடவடிக்கை என்பது தான் பலரது எண்ணமாக இருந்தது.
இந்த போராட்டத்தில் தமிழர்களுடன் முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களில்
கணிசமானவர்கள் சேர்ந்து கொண்டார்கள் மட்டுமல்ல
சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
அக்காலத்தில் சிங்கள மக்களுக்கு எதிரான இனத்துவேசமோ முஸ்லீம்மக்கள் மீது வெறுப்போ இருக்கவில்லை இருக்கவும் முடியாது காரணம் அவர்கள் ஒன்றாக அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தினார்கள் இந்த நிலைமையை விடுதலைப்புலிகள் மாற்றினார்கள் அப்பாவி சிங்கள மக்களை அநுராதபுரத்தில் கொலை
செய்வதின் மூலம் இந்த ஆயுதப்போராட்டத்தை சிங்கள இனத்திற்கு எதிரான
போராக மாற்றினார்கள்.
இது சம்பந்தமாக நான் 2001 ல் எழுதிய கட்டுரையில் இருந்து சிறிய பகுதியைத்தருகிறேன்
84ம் ஆண்டு நடந்த அனுராதபுர படுகொலை அன்று சென்னையில் எனக்கும்
ஜேவிபியில்(JVP) இருந்து பிரிந்த ஒரு சிங்கள நண்பருக்கும் நடந்த
சம்பாசனையை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். தைபோயிட்நோய் பீடித்தவரை
சுகம் விசாரித்துக்கொண்டிருந்தபோது அங்கு TELO இயக்கத்தைச் சேர்ந்த ஒரு
இளைஞன் வந்து அனுராதபுரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள்
கொல்லப்பட்டுள்ளனர். இதை விடுதலைப்புலிகள் செய்துள்ளார்கள் எனக்கூறிச்
சென்றான். சிங்கள நண்பன் தலையில் கைவைத்துவிட்டு ‘ஒக்கம இவறாய்” (எல்லாம்
முடிந்துவிட்டது) எனக்கூறினார்.

நான் உடனடியாக இருநூறு சிங்களவர்கள்
கொல்லப்பட்டுவிட்டதற்காக கூறுகிறாயா என வினவினேன்.

இல்லை இதன்பின் இறக்கப்போகும் தமிழர்களை எண்ணி கவலைப்படுகிறேன் என பதிலளித்தார்.
தயவுசெய்து எனக்கு விளக்கமளிக்கும்படி கேட்டேன்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ்ப்போராளிகள், விடுதலைப்போராளிகள் அல்ல.
இவர்கள் பயங்கரவாதிகள் என சிங்களமக்களுக்கும், உலக நாடுகளுக்கும்
ஜே.ஆர்.ஜயவர்த்தனா கூறுகிறார். இதன்மூலம் முழுசிங்கள மக்களினதும் உலக
நாடுகளினதும் ஆதரவை பெறவிரும்புகிறார். தமிழ் மக்களுக்கு அரசாங்கம்
தீங்கு இழைப்பதாகசொல்லி ஆயுதம் ஏந்திக்கொண்டு போராடும்போது சிங்கள
பொதுமக்களை கொல்வதுமூலம் இலங்கை ராணுவத்துக்கு சமமான நிலைக்கு நீங்கள்
தாழ்ந்துவிடுகிறீர்கள். இது ஒரு விடுதலைப்போராளிகள் செய்யும் மனிதாபிமான
செயல் அல்ல. பழிவாங்கும் செயலாகும். இதனால் விடுதலைப்போராட்டத்திற்கு
இழுக்கு வந்துவிடுகிறது. இரண்டாவது அரசாங்கத்துடன் நீங்கள் போரிட்டாலும்
பல சிங்களமக்கள் தம்மை போரில் ஈடுபடுத்துவதில்லை. அதைவிட எம்மைப்போன்ற
சிறியஅளவு சிங்களவர்கள் உங்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தைப்பார்த்து
உதவிசெய்கிறார்கள். சாதாரண சிங்களமக்கள் கொலைசெய்யப்படும்போது இந்த
நிலைமாறி இரு இனங்களுக்கு இடையிலான இனப்போராட்டமாக மாறுகிறது. இப்படியான இனப்போராட்டத்தில் நீங்கள் வெல்ல வாய்ப்பு இல்லை. முழுத் தமிழர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்தினாலும் உங்களால் சிங்களவர்களை வெல்லமுடியாது.

மூன்றாவதாக சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் எப்பொழுதும் அங்கீகாரம்
பெறப்போவதில்லை. நீங்கள் குறுகிய காலத்தில் விளம்பரமும் புகழும்
பெற்றாலும் காலப்போக்கில் இதனால் ஒரு பயனும் ஏற்படாது. So this is
morally, strategically and tactically wrong operation என கூறி
முடித்தான்.

அதன் பின் நடந்த இந்தப் போராட்டம் பிரபாகள் குழுவால் தமிழ் இனத்தினர்
சிங்கள இனத்துக்கு எதிரான இனப்போராக நடந்தது. இப்படியாக இரு இனங்கள்
போராடும்போது எண்ணிக்கையில் கூடிய இனம் வெல்லும் என்பது பாலர் பாடசாலைப் பிள்ளைக்கு புரியும் சாதாரணமான விடயம்.
இலங்கையில் சமான ஒப்பந்தங்கள் வந்த போது பல புத்திமான்கள் பேச்சு
வார்ததையில் சமாதானம் வரும் என நம்பினார்கள் . அதைவிட புலிகள் நிரந்தரமாக
இருப்பார்கள் என்ற மன நிலையும் பெற்றார்கள் இந்த நம்பிக்கையில்தான்
ஆரம்பகாலத்திலேயிருந்து புலிகளை எதிர்த்த கவிஞர்கள் சேரன், ஜெயபாலன்
இன்னும் பெயர் சொல்லாத பல யாழ்பாணப் பல்கலைக்கழகத்து புத்திஜீவிகள்,
அடிசறுக்கி தமிழ் தேசியவாதம் தோலைத் தாங்களே நெய்து அந்த தோலை தங்களில் போர்த்திக் கொண்டு புலிகளுடன் உறவாடினர்.
புலம்பெயர்ந்த பன்னாடைகள் இதை எம் ஜீ ஆர் உருவாக்கிய அண்ணாயிசம் போல்
கைப்பற்றிக் கொண்டு புதிய விளக்கம் கொடுத்தார்கள். புலம் பெயர்ந்த நாடுகள்
எல்லாவற்றிலும் அரசியல் ஆய்வாளர்கள் என பலருக்கு பட்டமளிப்புகள்
நடந்தது. புலம் பெயர் வானொலிகள், இணையங்கள் தமிழ்தேசியத்தை
உருவாக்கியவர்களுக்கு மேலாக அதை முறுக்கி பெரிய கயிறாக திரித்தார்கள்.
உள்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்தேசியவாதம் பரிசோதனைக் குழாயில் உருவாகிய பிண்டம். அது அப்பனும் ஆத்தையும் இல்லாத பிண்டமாக தனது முடிவை தானே தேடிக்கொண்டது . காரணம் மேதகு பிரபாகரனுக்கு இப்படியான நுட்பமான
கருத்தியல்களிலோ, அவை உருவாக்கிய வாதங்களிலோ அக்கறையோ பொறுமையோ இருக்கவில்லை. மாவிலாற்றை மூடிவிட்டு மூதூரில் உள்ள சில முஸ்லீம்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என நினைத்து போரைத் தொடங்கினார். அது 2009 ல் தமிழர்களுக்கு சங்கூதியதாக முடிவடைந்தது.
தற்போதைய நகைச்சுவை கட்டங்களுக்கு வருவோம். மூன்று வருடம் கடந்த பிறகு
கோடன் வொய்ஸ் மற்றும் பிரன்சிஸ் ;கரிசனும் துப்பறிந்து தெரிந்து கொண்டு
புதிய விடயங்களை கூறியிருக்கிறர்கள்.
இந்த மூன்று வருடங்கள் ஏன் தேவைப்பட்டது?
பாலசந்திரனினின் படம் கூட இராணுவ இணையத்தில் உடனே வெளிவந்ததே?
சரி நான் கேட்கிறேன்
சிங்கள படைகள் குண்டு போடுவார்கள் என்று தெரியாமல்த்தான் தமிழர்களை
விடுதலைப்புலிகள் யுத்த அரங்குக்கு அழைத்து போனார்கள் என
தர்க்கத்திற்காக வைத்துக்கொள்வோம். வன்னியில் பாடசாலை நடக்கவில்லை பாடசாலைகளை நடத்திய அதிபர்களும் கத்தோலிக மதகுருமார்களும் பிள்ளைகளை புலிகளிடம் பிடித்துக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்கள். அவர்களுக்கு சிந்திக்க நேரமில்லை.
இப்பொழுதுத தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் உருத்திரகுமாரன் போன்ற
படித்தவர்களுக்கு அது ஏன் புரியாமல்போய்விட்டது?. உண்மையில் அக்கறை
இருந்தால் அப்பவெல்லோ செய்திருக்கவேண்டும்?
நீங்கள் அந்தகாலத்தில் இதைப் புரிந்து கொள்ள முடியாத படுமுட்டள்களாக
இருந்திருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் பிணங்களில் வருமானம் தேடும் புத்திசாலிகளா?
உங்களை பற்றி எழுதுவது எனது வேலை இல்லை
அக்காலத்தில் பிரபாகரன் ஒன்றரைக் கோடி சிங்களவரை எதிரியாக்கியதும் பின்பு
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை கொன்று இந்திய மக்களை எங்களுக்கு
எதிரிகளாக்கிய படுமுட்டாள்தனமான வேலையிலும் பார்க்க மிகமோசமான வேலையை இலங்கைத்தமிழருக்கு எதிராக இப்பொழுது செய்கிறர்கள் . தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில் வைத்து புத்த பிக்குகளை அடிப்பது துன்புறுத்துவதின்
மூலம் இலங்கைத் தமிழருக்கு எதிராக உலகத்தில் உள்ள அறுபது கோடி புத்த மக்களையும் அவர்கள் அரசாங்கத்தையும் தூண்டுகிறீர்கள். நான் எழுதுவதில் ஏதாவது
சந்தேகம் இருந்தால் ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், நடுநிலைமை கடைப்பிடித்த நாடுகளையும் பாருங்கள். இலங்கை அரசாங்கம் உங்களின் செயல்களில் இருந்தே தனது பலத்தை பெறுகிறது. இராமாயணத்தில் வாலி பெறுவது போல்.
தமிழகத்தின் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கோ, அல்லது திராவிட முன்னேற்றகழக அரசில் உள்ள வன்மத்தை தீர்த்துக் கொள்ளவோ, மொத்த இந்தியாவுக்கு எதிரான உங்கள் நோக்கத்தில் பகடைக்காய்களாக்க இலங்கைத் தமிழர்களை பாவிக்கும் நோக்கம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால்
தமிழக அரசியல்வாதிகள் , கத்தோலிக்க மதகுருமார்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் , இலங்கை தமிழ்த் தலைவர்கள் தயவு செய்து ஏதாவது விடயத்தை செய்ய முதல் அதன் விளைவுகளை தொலை நோக்கத்தில் சிந்தியுங்கள். இலங்கைத்தமிழர்கள் இலங்கையில்த்தான் வாழமுடியும். வேறு வழி அவர்களுக்கு இல்லை. சிங்கள இனவாதத்தின் கொம்பை சீவாதீர்கள். நாங்கள் தான் மீண்டும் இரத்தம் சிந்த வேண்டும் noelnadesan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக