செவ்வாய், 19 மார்ச், 2013

லெட்டர் பேடு கட்சிகளால் தமிழகத்துக்கு கரும்புள்ளி

சென்னை: தஞ்சையில் புத்த பிட்சு தாக்கப்பட்ட சம்பவத்தால், பவுத்த மதத்தை கடைபிடிக்கும் நாடுகளில் தொழில் செய்யும் தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கைகளில் இறங்காவிட்டால், சர்வதேச அளவில் தமிழகத்துக்கு கரும்புள்ளி ஏற்படுவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகி விடும தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர், திருச்சியை மையமாகக் கொண்டு, தஞ்சை, திருவாரூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பழங்கால கட்டடங்களை ஆர்வமாக சென்று பார்க்கின்றனர். கடந்தாண்டு மட்டும், அனைத்து நாடுகளையும் சேர்ந்த, 76 ஆயிரம் பேர் திருச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இலங்கையிலிருந்து வந்து சென்றுள்ளனர். அவர்கள் மூலம் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில், 20 கோடி ரூபாய், அன்னிய செலாவணி கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்னை, "லெட்டர் பேடு' கட்சிகளால் பெரிதாக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர் பிரச்னையை மையமாக வைத்து, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இக்கட்சிகள், இலங்கை நாட்டினர், தமிழகம் வந்தால் தாக்குவது, மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, திடீர் சாலை மறியல், ரயில் மறியல் என, பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை, அனைவரும் அறிவர். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையிலும், மற்ற நாடுகள் மத்தியில், இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும், இவை நிகழ்வதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.


கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், இலங்கையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கனலேகா, 46, என்பவர், தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வுக்கு வந்தபோது, தமிழ் தேச பொதுவுடமை மற்றும் நாம் தமிழர் இயக்கம் என்ற பெயருடைய கட்சிகளைச் சேர்ந்த ஒரு கும்பலால், கடுமையாக தாக்கப்பட்டார். அந்த கும்பலிடமிருந்து, கனலேகாவை, போலீசார் மீட்டு, திருச்சி விமான நிலையத்துக்கு, பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் விமானத்தில் சென்னை சென்றார். புத்த மதத்தை தழுவியவரான அவர், தஞ்சை வரும் தகவல் எப்படி, அடாவடி கட்சியினருக்கு தெரிந்தது? திட்டமிட்டே அவர்கள், புத்த பிட்சு மீது தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதல் சம்பவம் அனைத்தும், "மீடியா'க்களிலும் ஒளிபரப்பாகும் படி ஏற்பாடு செய்து, தங்களை உச்சகட்ட தமிழ் உணர்வாளர்கள் போல், சில, "லெட்டர் பேடு' கட்சிகளின் நிர்வாகிகள், வெளியுலகுக்கு பாறைசாற்றியுள்ளனர்.

இப்படி நடந்து கொள்வோர், இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த, 2009ம் ஆண்டு மே மாதம், என்ன செய்து கொண்டிருந்தனர்? அப்போதெல்லாம் இலங்கையிலிருந்து வந்தவர்கள், இவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நேரத்தில் போரை நிறுத்த வலியுறுத்தினரே ஒழிய, மக்களையோ, தங்கள் கட்சி ஆதரவாளர்களையோ, பெரிய அளவில் திரட்டி, போரை நிறுத்த, ஆக்கப்பூர்வமாக, எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
இப்படி போர் நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு, இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்துவிட்ட பின், இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவதை, இச்செயல்களால் பாதிக்கப்படும் மக்கள், கேள்வி எழுப்புகின்றனர். தஞ்சையில் புத்த பிட்சுவை தாக்கியதால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை நடந்து விடப் போகிறது? புத்த பிட்சுவை தாக்கியதன் விளைவாக, தற்போது, பவுத்த மதத்தை கடைபிடிக்கும் நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. >குறிப்பாக, நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில், அதிகளவில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். புத்தபிட்சுகளின் ஆதிக்கம் நிறைந்த அந்நாட்டில் வசிக்கும், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால், இங்கே தாக்குதலில் ஈடுபட்டவர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து இஸ்லாமியப் பெருமக்கள் தற்போது கருத்து கூற முன்வரவில்லை. அதேபோல், இலங்கையில், புத்த பிட்சுகளின் ஆதரவின்றி யாரும் ஆட்சியில் அமர முடியாது. அப்படிப்பட்ட புத்த பிட்சு ஒருவரை தமிழகத்தில் தாக்கியதால், அது அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எதிராகத்தான் முடியும் என்று, அடாவடி போராட்டங்களை நடத்தி வரும், "லெட்டர் பேடு' கட்சியினர் நினைத்து பார்க்க வேண்டும் என, கொழும்பில் உறவினர்கள் உள்ள தமிழர் பலர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். சட்டத்தை தங்கள் கையில் எடுத்து செயல்படும் அமைப்பினர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தால், தானாகவே இம்மாதிரியான எதிர்ப்புகள் குறையும் எனவும், அவர்கள் கூறுகின்றனர்.>நீல சட்டைக்காரர் யார்? தஞ்சை மாவட்டம், பர்மா காலனியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் கரிகாலன். இவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் தேச பொதுவுடமை என்ற கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், மூன்று நாட்களுக்கு முன், தஞ்சையில், இலங்கை புத்த பிட்சு, கனலேகாவை கொடூரமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள தஞ்சை போலீசார், அவரை பிடிப்பதில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அவர், வழக்கறிஞர் என்பதால், கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.தமிழகத்தின் பெருமைக்கு கெட்ட பெயர்: அடாவடி போராட்டக்காரர்கள் நடத்தும் தாக்குதலால், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. காலப் போக்கில், திருச்சி முதல், தஞ்சை வரும் சுற்றுலாத் துறை வர்த்தகம் முடங்கி விடும்; அதில் ஈடுபட்டவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடையும். நம்நாட்டுக்கு வரும் விருந்தினரை, இப்படி காட்டுமிராண்டித்தனமாக தாக்கினால், உலக நாடுகள் மத்தியில், இந்தியாவுக்கு தலைகுனிவு தான் ஏற்படும். அந்தந்த நாடுகள், தங்கள் குடிமக்கள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டிய நாடுகள் பட்டியலில், நம் நாட்டின் பெயரைச் சேர்க்கவும் வாய்ப்புண்டு. ஏற்கனவே, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையால், தமிழகம் என்றாலே ஒரு மோசமான பார்வை உள்ளது. இனிமேலாவது, தமிழக அரசு, இலங்கை தமிழர் பிரச்னையை மையமாக வைத்து, போராட்டம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் அடாவடி, "லெட்டர் பேடு' கட்சிகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
மற்றொரு அபாயமும் இருக்கிறது... கலாசாரப் பெருமை படைத்த பகுதிகளில், இம்மாதிரி போராட்டம் நடத்துபவர்களில் சிலரை, பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டால், நமது கலைச் சின்னங்கள் சேதமுறும் அபாயமும் இருக்கிறது. அடாவடி பேர்வழிகளை அடக்கும் அதேநேரம், இலங்கை தமிழர் பிரச்னைக்காக நிரந்தர தீர்வுகாண, அவர்களின் நலவாழ்வுக்காக, தமிழக அரசு ஆக்கப்பூர்வமான வழிகளை, துரிதமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும், நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக