ஞாயிறு, 17 மார்ச், 2013

தனியார் பள்ளிகள் குண்டர் படையை வைத்திருக்கின்றன

பல  பெரிய தனியார் பள்ளிகள், மறைமுகமாக, குண்டர் படையை வைத்திருக்கின்றன. இது போன்ற பள்ளிகளில், கடும் கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், சம்பந்தபட்ட அதிகாரிகளை தாக்குவர். இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கின்றன' என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், கடுமையான போட்டி இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும், பெரிய பள்ளிகள் வரிசையில், 100 பள்ளிகள் வரை இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்பள்ளிகளுக்கிடையே, அதிக மாணவர்களை இழுப்பதில், கடும் போட்டி நிலவுகிறது. இது போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிக்கின்றனர். இதனால், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், "சீட்' கிடைத்து விடுகிறது. இந்த விளம்பரத்தை வைத்தே, பெரிய பள்ளிகள், மாணவ, மாணவியரை இழுக்கின்றன. நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள, முன்னணி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே, பொறியியல், மருத்துவப் படிப்புகளில் இடம் பிடிப்பதால், இது போன்ற பள்ளிகளில், பிள்ளைகளைச் சேர்க்க, பெற்றோர் முட்டி மோதுகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, விடுதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, மேற்கண்ட தனியார் பள்ளிகள், கட்டணம் வசூலிக்கின்றன. பொதுத் தேர்வில், முக்கிய பாடங்களில், 200க்கு 200 பெற வேண்டும் என்பதில், தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டுகின்றன. இதனால், பள்ளிகளுக்கிடையே, பலத்த போட்டி எழுந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டையாக யாராவது நின்றால், அவர்களை, "சரி கட்டும்' வேலைகளும், ஜரூராக நடப்பதாக, கல்வித் துறையில் கூறப்படுகிறது. நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தராத பறக்கும் படை அதிகாரிகளை, தேர்வுக்குப் பின், அடியாட்கள் கும்பலை வைத்து, தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என, கல்வித் துறை அதிகாரி ஒருவர், அதிர்ச்சியுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தனியார்

பள்ளிகளுக்கிடையே, கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்வில், மாணவர்கள் மதிப்பெண் களை குவிக்க வேண்டும் என்பது மட்டுமே, நிர்வாகத்தினரின் நோக்கமாக உள்ளது. இதற்காக, எந்த நிலைக்கும் செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த எனக்கு தெரிந்த நண்பரின் மகனை, சரியாக படிக்கவில்லை எனக் கூறி, கடுமையாக தாக்கியதில், அவனது கால்கள் முறிந்தன. பறக்கும் படை அதிகாரிகள், பெரிய தனியார் பள்ளி களில், கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டால், தேர்வுக்குப் பின், தாக்குதல் நடத்துகிற சம்பவங்களும் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தேர்வு மையத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய ஒரு ஆசிரியரை, ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. சில தனியார் பள்ளிகள், மறைமுகமாக குண்டர் படைகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவை எல்லாம், வெளியில் தெரியாது. பல பள்ளிகளை, அரசியல்வாதிகளோ அல்லது அவர்களது பினாமிகளோ தான் நடத்துகின்றனர். இதுபோன்ற பள்ளிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், அதிகாரிகள் நிலைமை என்ன ஆகும் என்பதற்கும், பல சம்பவங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.

முன்னாள் மந்திரி ஒருவர், பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார். அவர் நடத்தும், ஒரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும், "காப்பி' நடக்கிறது என்று வந்த தகவலை அடுத்து, நேர்மைக்கு பெயர் பெற்ற ஒரு உயர் அதிகாரியின் மேற்பார்வையில், சிறப்பு பறக்கும் படை குழு, சம்பந்தபட்ட பள்ளியில், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. இதன் காரணமாக, பிளஸ் 2 கணிதப் பாடத்தில், அந்த பள்ளியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வி அடைந்தனர். இதனால், பறக்கும் படை குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் பலரும், தென் மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். குழுவிற்கு தலைமை ஏற்ற, அந்த அதிகாரிக்கு, ஓய்வு பெறும் வரை, நல்ல பதவி கிடைக்கவே இல்லை. இது போன்ற நிலைமையில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான், தேர்வை கண்காணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி, வேதனையுடன் தெரிவித்தார். நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக