வியாழன், 21 மார்ச், 2013

"இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நம்பலாமா? கலைஞர் கருணாநிதிக்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா

 இலங்கைநெட் :கறுப்பு முழு கைச்சட்டை அணிந்திருப்பதிலிருந்து இது சீமானின் எடுபிடிகள்தான் என்று தெளிவாக தெரிகிறது.. இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவும் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்..... ஏனெனில் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கலைஞர் கருணாநிதிக்கு போட்டியாக அவர் களமிறங்கியிருக்கும் காரணத்தால்தான்.. அவருடைய மறைமுக ஆதரவின் துணையுடன் இந்த வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட கொடுமைகளின் உச்ச கட்டத்தை அடைகிறார்கள் என்று கருத முடிகிறது...

இன்று இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறேன் பேர்வளிகளாக.. போராட்ட களத்தில் இறங்கியிருக்கும் தமிழக மாணவர்கள்.. பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒருவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு.. இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போர்க் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும்.. இலங்கை தமிழர்களின் இன அழிப்புக்கு இவர்தான் முக்கிய‌ காரணமானவர் என்று கூறிக் கொண்டு.. அவர் உருவப் பொம்மையை எரிப்பதும்.. உண்ணா விரதம் இருப்பதும்.. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்துவதும்.. இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்குமே தவிர அது எந்த‌ விதத்திலும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு விமோசனத்தையோ அல்லது ஒரு தீர்வையோ கொண்டு வரப்போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்..

தமிழகத்தில் இவர்களுடைய இந்த திடீர் ஆர்ப்பாட்டங்களால் கல்லூரிகள் யாவும் காலவரையறையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளன.. நடைபெற இருந்த‌ வருடாந்த பரீட்சைகளும் பின் போடப்பட்டுள்ளன‌.. கல்லூரி வளாகங்களில் அமைந்திருக்கும் மாணவர் தங்கு விடுதிகளும் திடீரென்று மூடப்பட்டு அங்குள்ள மாணவ மாணவிகள் அனைவரும் உடன் வெளியேற வேண்டும் என்ற அரசாங்க கட்டளையால்.. தூர பிரதேசங்களில் இருந்து அங்கு வந்து தங்கியிருந்த மாணவ மாணவிகள் இந்த திடீர் உத்தரவால் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.. ஒரு நாட்டின் வழர்ச்சியில் பெரும் பங்காற்றும் மாணவர் கல்விக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பது எத்தனை வேதனைக்குறியது என்பதை இதை ஊக்குவிக்கும் சுயந‌லவாத‌ அரசியல் அமைப்புகள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறதா!.. இல்லையே!...


ஒரு பிரச்சனையின் தூர நோக்கு சிந்தனையற்ற ஒரு மாணவர் சமூகத்தினரை.. அரசியல் சூதாட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்ட சில தமிழக அரசியல்வாதிகள் தூண்டி விடுவது கண்டிக்கப்பட வேண்டிய‌ஒரு காரியமாகும்!.... மாணவர்களுக்கே உரிய இளமைப் துடிப்புடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படம் வரைந்த பானரின் பின்னணியில் அவர்கள் உண்ணா விரதம் இருக்கும் காட்சியை பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது..

ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு.. பாலசந்திரன் என்ற அந்த‌ ஒன்றுமறியாத அப்பாவி சிறுவன் படுகொலை செய்யப்பட்டது சிரூபிக்கப்பட்டால்.. அது ஒரு பாதகச் செயல் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதே வயதையொத்த எத்தனைபோ அப்பாவிச் சிறுவர்கள் இந்த பாலச்சந்திரனின் தகப்பனாகிய பிரபாகரனால்.. அவரது சமாதானத்தை மறுதலித்த அடாவடி யுத்தத்தில் பலி கொடுக்கப்பட்ட அந்த‌ மகா பாதகச் செயல்கள் யாவும் புகைப்படங்களுடனும்.. வீடியோ காட்சிகளுடனும்.. அந்த குழந்தைகளின் பெற்றோரின் சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டிருக்கிறன‌.. அந்த அப்பாவி சிறுவர்களின் மரணத்திற்காக‌ தமிழகத்தில் கண்ணீர் வடித்தவர் யார்?.. குரல் கொடுத்தவர் யார்?.. ஒருவருமில்லையே!!.. ஆனால் இன்று மட்டும் ஏன் இந்த கண்ணீர்!.. ஏன் இந்த போராட்டம்!!..

இன்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சீமான்.. வைகோ.. பழ நெடுமாறன்.. திருமாவளவன் போன்றோர் தங்கள் சார்பில் தனித் தனியாக துடிப்புள்ள இளைஞர்களை பிரித்தெடுத்துக் கொண்டு.. தங்கள் போராட்டங்களை தனித்தனி வழிகளில் நடத்துகிறார்களே.. இவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையிருகுமேயானால் ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு.. அந்த இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் போராட்டங்களை பலம் பொருந்திய ஒன்றாக‌ நடத்தக் கூடாது என்று இந்த மாணவர்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?....

இப்படித்தானே அன்றொரு காலத்தில் தமிழர்களின் விடுதலைக்கு போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தனித் தனியாக பிரிந்து பற்பல இயக்கங்களாக உருவெடுத்தபோது.... அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு பதிலாக.. பிரபாகரன் என்ற மனிதன்.. "தலைமை" என்ற பதவி ஆசையினால்.. அவர்கள் அனைவரையும் அழித்து.. தமிழர்களின் தனிப்பெருந்த தலைவராக தன்னை உயர்த்தி.. தனது சர்வாதிகாரத்தினால் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசாண்டு.. முடிவில் ... தமிழினத்தின் விடுதலையை குழி தோண்டிப் புதைத்து விட்டு.. தானும் அழிந்து போனார் என்ற உண்மையை இந்த மாணவ இளைஞர்கள் ஏன் சிறிதேனும் சிந்தித்து பார்க்கவில்லை!.. அன்றைய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் பிரபாகரப் புலிகள் அரவணைத்து அந்த விடுதலைப் போராட்டத்திற்கு வலுவூட்டியிருந்தால் இன்று இத்தனை மனித அழிவுகள் அங்கு ஏற்பட்டிருக்குமா?.. என்றோ இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்குமே!..

ஆம்..இவைகள் யாவுமே இன்று இலங்கைத் தமிழர்களுக்காக கூக்குரலிடும் தமிழக அரசியல்வாதிகள் யாவரும் நன்கு அறிந்தவைகள்தான்!.. ஆனால் அன்று மௌனம் சாதித்த இவர்கள் இன்று மட்டும்,, நீலிக் கண்ணீர் வடித்து வீராவேசப் பேச்சுகள் பேசுவது எதற்காக? ஆம்.. இவைகள் அனைத்துமே இந்த கூழைக் கூத்தாடிகள் தங்கள் சுயநலங்களுக்காக ஆடும் அரசியல் தெருக் கூத்துகளே தவிர வேறொன்றுமில்லை!....

இன்று இலங்கை தமிழர்களின் நலன்களுக்காக என்று வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கும் இந்த அரசியல்வாதிககள் ..கடந்த‌ காலங்களில் எப்படியெல்லாம் அரசியல் குத்துக்கரணம் அடித்திருக்கிறார்கள் என்பதை தமிழகத்தில் நடைபெற்ற கடந்தகால தேர்தல்களை இந்த மாணவர்கள் ஆராய்ந்து பார்த்திருந்தால் அவர்களுக்கு அது சரியாக புரிந்திருக்கும்..

என் இரத்தத்தின் இரத்தம் என்றும்.. என் உயிரின் உயிரே என்றும் வாய் நிறைய அழைக்கப்பட்டவர்களை.. பின்னர் அதே வாயால் பச்சைத் துரோகி என்றும்.. மானம் கெட்டவன் என்றும்.. திட்டித் தீர்ப்பது தமிழக தேர்தல் மேடைகளில் பல்லாண்டு காலமாக‌.. பல தடவைகளில் பலரும் கண்டு புளித்துப்போன விடயங்கள் என்பதை.. பாவம் இந்த அரசியல் அரிச்சுவடி அறியாத‌ மாணவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள்!... இந்த பச்சோந்தி தமிழக‌அ ரசியல்வாதிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டு.. சந்தர்ப்பம் வரும்போதுமுதுகில் கத்தி பாய்ச்சும் புரூட்டஸ் தனமான அரசியல்வாதிகள் இவர்கள் என்பதை அந்த மாணவர் சமூகம் உணர்ந்து கொண்டதில்லை!.. ஆறு கடக்கும்வரைதான் இவர்கள் அண்ணன் தம்பிகள்.. ஆறு கடந்த பின்.. நீ வேறு நான் வேறு என்ற‌ ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்!....

போராட்டங்கள் தோல்வியுற்று.. பலத்த மனித அழிவுகளும் நடந்து.. அனைத்தும் முடிந்து.. சுமார் நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில்.. தற்போது ஒரு சமாதானப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் சிங்கள மக்களின் உறவை சீர்குலைக்கும் முகமாக இவர்கள் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த போராட்ட போட்டியில்.. உன்னை விட நான்தான் இலங்கை தமிழ் இனத்தின் மேல் அக்கறையுள்ளவன் என்று காட்டி இன்று எதற்காக‌ அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் முன்னின்று போராடுகிறார்கள்?.. ஆம் தங்கள் அரசியல் தளத்தை படுத்தும் முகமாக‌.. தமிழக மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் திரட்டும் ஒரு போலியான‌ அமைச்சூர் நாடகமே தவிர இவைகள் வேறொன்றுமில்லை!..

மனிதப் படுகொலை!.. மனிதப் படுகொலை!!.. என்று இந்த தமிழக அரசியல்வாதிகள் வாய்க்கு வாய் கொப்பளிக்கும் இந்த வார்த்தைகள் உண்மையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக எழுப்பப்படுகிறதா??‍‍,, அப்படியானால் இலங்கை தமிழர்களின் பிரதேசங்களில் பிரபாகரனின் நிழல் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அப்போதெல்லாம் அந்த மனித படுகொலைகளுக்கு எதிராக‌ குரல் கொடுக்க எந்த ஒரு தமிழக அரசியல்வாதிகளும் முன் வரவில்லையே!.!.. யாழ்ப்பாண‌ வீதிகளில் தெரு நாய்களை விட கேவலமாக தரதரவென்று இழுத்து வரப்பட்ட மாற்று இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான‌ இளைஞர்கள் உயிருடன் டயர் போட்டு எரிக்கப்பட்ட போதெல்லாம் எங்கே போனது இவர்கள் மனிதாபிமானம?.. அப்போதெல்லாம் வாய் மூடி மௌனம் காத்த இந்த தமிழக அரசியல் கூட்டம்.. இப்போது மட்டும் மனிதாபிமானம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது!..

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது வேதலைக்குரிய விடயம் அதற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.. தண்டிக்கப் படவேண்டும்.. என்று கூக்குரலிடும் இவர்கள்.. பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கதற.. கதற.. அவர்களை எட்டி உதைத்து.. இதே பாலச்சந்திரனின் வயதை ஒத்த ஆயிரக் கணக்கான அப்பாவி குழந்தைச் செல்வங்களை பிரபாகரனின் அடியாட்கள் பலோத்காரமாக‌ இழுத்துச் சென்று.. தங்கள் படையணியில் இணைத்து.. கையில் ஆயுதத்தை திணித்து.. அங்கே போர்க்களங்களில் அநியாயமாக பலி கொடுத்த போதெல்லாம் எங்கே போயிருந்தது இவர்கள் மனிதாபிமானம்!.. அன்று ஒரு இந்திய தமிழக‌ தெரு நாய்கூட அவர்களுக்காக தெருவில் நின்று ஊழையிட முன்வரவில்லையே!.. ஏன்?... இன்று யாருக்காக ஆடப்படுகின்றன‌ இந்த நாடகங்கள்?.. இலங்கை தமிழர்களுக்காகவா?.. அல்லது அந்த தமிழக அவரசியல்வாதிகளின் சுயநல‌ அரசியல் லாபத்திற்காகவா?..

அண்மையில் தஞ்சாவூருக்கு தொல் பொருள் ஆராச்சிக்காக வருகை தந்திருந்த‌ சிங்கள மாணவர்கள் குழுவொன்றை சேர்ந்த ஒரு பௌத்த துறவியை குறி வைத்து.. அவர் பயத்துடன் மிரண்டு.. மிரண்டு அங்குமிங்கும் ஓட .. அவரை விரட்டி.. விரட்டி தாக்கியிருக்கிறது ஒரு தமிழ் வெறியேற்றப்பட்ட இளைஞர் கூட்டம்.. "சிங்கள நாயே வெளியேறு!".. என்று கூக்குரலிட்டபடி அவரை அடித்து விரட்டி துன்புறுத்தி தங்கள் கேவலமான தமிழ் உணர்வை வெளிக்காட்டியிருக்கிறது அந்த தமிழக வெறிக் கூட்டம்.... இதுதானா வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் பண்பு?.. இதுதானா மகாத்மா காந்தி பிறந்த நாட்டிற்கு வருகை தருவோருக்கு வழங்கப்படும் மரியாதை?..

அதைவிட கேவலமாக சென்னை சென்ரல் ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய இன்னொரு பௌத்த துறவி ஒருவரையும் இதே பாணியில் தாக்கியிருக்கிறது சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று.. இவர்கள் நாம் தமிழர் கட்சியின் அடையாளமான கறுப்பு முழு கைச்சட்டை அணிந்திருப்பதிலிருந்து இது சீமானின் எடுபிடிகள்தான் என்று தெளிவாக தெரிகிறது.. இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவும் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்..... ஏனெனில் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கருணாநிதிக்கு போட்டியாக அவர் களமிறங்கியிருக்கும் காரணத்தால்தான்.. அவருடைய மறைமுக ஆதரவின் துணையுடன் இந்த வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட கொடுமைகளின் உச்ச கட்டத்தை அடைகிறார்கள் என்று கருத முடிகிறது...ilankainet.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக