வெள்ளி, 29 மார்ச், 2013

இன்டர்-நெட் கனெக்ஷன் மந்த நிலை, இன்றும் நீடித்து வருகிறது.


நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!

Geneva, Switzerland: நேற்று உங்கள் இன்டர்-நெட் இணைப்பு ஸ்லோவாக இருந்ததா? உங்கள் இணைப்பில் ஏதோ கோளாறு என்று தலையை உடைத்துக் கொண்டீர்களா? விவகாரம், வேறு.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால், நேற்று உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்கியதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது.
இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பாம் (உங்களுக்கு புண்ணியமாக போகும், ‘ஸ்பேம்’ என்று படித்துவிடாதீர்கள்.. விபரீத அர்த்தம் வந்துவிடும்!) ஊடுருவலே இந்த மந்த நிலைக்குக் காரணம். இதனால் நேற்று கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே துண்டிக்கப்பட்டு, மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை, இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது.

ஸ்பாம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனிவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான Spamhaus என்ற அமைப்புதான் இந்த ஸ்பாம் ஊடுருவலைக் கண்டுபிடித்து, எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘Cyberbunker’ என்ற நிறுவனம்தான் இந்த ஸ்பாமை பரப்பியுள்ளது.
‘Cyberbunker’ ஒரு வெப்-ஹோஸ்ட்டிங் நிறுவனம். மேலேயுள்ள போட்டோவில் பாழடைந்த பில்டிங் ஒன்றில் தெரிவதுதான், இதன் தலைமைச் செயலகம். ஒரு தமாஷ் என்னவென்றால், இந்த பில்டிங், முன்பு நெதர்லாந்தில் நேட்டோ பங்கராக செயல்பட்டு வந்தது.
தற்போது இந்த நிறுவனம் தற்போது கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.
இந்த ஸ்பாம் தாக்குதல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட பாதிப்பு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று Spamhaus தெரிவித்துள்ளது. இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பாம் தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.
இந்த தாக்குதலால் நேற்று முழுவதும் இணையதள இணைப்பு வேகம் மகா மந்தமாகி இருந்தது. வீடியோக்களை அனுப்புவது, பார்ப்பது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைக்கு இன்று நிலைமை பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக