திங்கள், 4 மார்ச், 2013

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு

பா.ஜ. அணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது. எதிர்பாராத இந்த ஆதரவால் பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மக்களவை தேர்தலை சந்திக்க காங்கிரசும் பா.ஜ.வும் இப்போதே தயாராகி வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்கப் போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதற்கு போட்டியாக பா.ஜ. சார்பிலும் வலுவான வேட்பாளரை முன்னிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், பிரதமர் பதவிக்கு அத்வானி, சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதால் பிரதமர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கவில்லை. சரியான நேரம் வரும்போது பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என்று பா.ஜ. தலைவர்கள் சமாளிக்கின்றனர். இந்நிலையில், பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்தது. அரசியல், பொருளாதார சூழ்நிலை, கட்சியின் வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குழப்பத்தை தவிர்ப்பதற்காக பிரதமர் வேட்பாளர் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால், செயற்குழுவில் கலந்து கொள்ள வந்த நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கும் மோடி தொடர்ந்து பெற்று வரும் வெற்றி பற்றியும் அவரது நிர்வாக திறன் பற்றியும் புகழ்ந்து தள்ளினார். செயற்குழு உறுப்பினர்களும் இதை ஆரவாரம் செய்து வரவேற்றனர். செயற்குழுவின் நிறைவு நாளான நேற்று கட்சியின் மற்ற மூத்த தலைவர்களை காட்டிலும் மோடியின் பேச்சு முக்கியத்துவம் பெற்றது. ஆவேசமான அவரது பேச்சை கட்சியினர் கரகோஷம் செய்து ஆமோதித்தனர். கூட்டம் நிறைவடைந்த பின்னர் வெளியே வந்த கட்சி நிர்வாகிகள் பலர் மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தனர். கட்சிக்குள் ஆதரவு பெருகுவதால் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா போன்ற கூட்டணி கட்சி களையும் மோடியை ஏற்க செய்ய பா.ஜ. முயற்சிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக