ஞாயிறு, 3 மார்ச், 2013

BJP கூட்டணியிலிருந்து காங்., அணிக்கு நிதிஷ் குமார் மாறுவாரா?

பாட்னா: மத்திய பட்ஜெட்டுக்கு, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார், பாராட்டு மழை பொழிந்திருப்பது, தேசிய அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, தாவுவதற்கு அச்சார மாகவே, நிதிஷ் குமார், பட்ஜெட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து உள்ளார்' என, தகவல்கள் வெளியாகியுள்ளன.


பெரிய கட்சி:

பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக, பெரிய கட்சி என்ற அந்தஸ்தை, ஐக்கிய ஜனதா தளம் பெற்றுள்ளது. பா.ஜ., ஆதரவுடன், பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம், ஆட்சி நடத்துகிறது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே, ஒரு சில விவகாரங்களில், பா.ஜ., மேலிடத்துக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ஒருமித்த கருத்து இல்லை. குறிப்பாக, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை அறிவிக்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்கள் உள்ளனர். சமீபத்தில், குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்று, "ஹாட்ரிக்' அடித்ததால், அவரது செல்வாக்கு, நாடு முழுவதும் அதிகரித்து உள்ளதாக, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. பா.ஜ.,வின் இந்த நடவடிக்கையை, ஐக்கிய ஜனதா தளம் ஏற்க வில்லை. அந்த கட்சியின் மூத்த தலைவர்களான, நிதிஷ் குமார், சரத் யாதவ் ஆகியோர், தொடர்ந்து, மோடிக்கு எதிராகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். "அடுத்த லோக்சபா தேர்தலில், மதச் சார்பற்ற தலைவர் ஒருவரையே, தே.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; இல்லையெனில், அந்த கூட்டணியில் நீடிப்பது குறித்து, மறுபரிசீலனை செய்வோம்' என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள், தொடர்ந்து கூறி வருகின்றனர். கூட்டணியில், முக்கியமான கட்சி என்பதால், ஐக்கிய ஜனதா தளத்தை புறக்கணிக்க முடியாமல், பா.ஜ., திணறி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டின் மூலம், இந்த விவகாரத்தில், பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த, பீகார் முதல்வர், நிதிஷ் குமார், ""இது, வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும், மிகச் சிறந்த பட்ஜெட். பீகார் மாநிலத்துக்கு அதிக நிதி கிடைப்பதற்கு, இந்த பட்ஜெட் உதவும். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, பரிசீலிக்கப்படும் என, நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியது, எங்களின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி,'' என்றார்.
சலசலப்பு:

தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சிகள், "இது, ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட். விலைவாசியை கட்டுப்படுத்த, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம், பட்ஜெட்டுக்கு பாராட்டு மழை பொழிந்திருப்பது, தே.ஜ., கூட்டணியில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தே.ஜ., கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த தேர்தலில், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைவதற்கு, நிதிஷ் குமார் முயற்சிக்கிறார். நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், தே.ஜ., கூட்டணியில் அவர் தொடர்வது, சிரமமான காரியமாக இருக்கும். அப்படியே, தொடர்ந்தால், சிறுபான்மை மக்களின் ஓட்டு, தங்களுக்கு கிடைக்காமல் போய் விடும் என, நிதிஷ் குமார் நம்புகிறார். எனவே, இப்போதே காங்கிரசை ஆதரிக்க துவங்கி விட்டால், தேர்தல் நேரத்தில், கணிசமான தொகுதிகளை பெற முடிவதோடு, பீகார் மாநிலத்துக்கு, பல்வேறு சிறப்பு நிதி உதவியையும் பெற முடியும் என்பது, நிதிஷ் குமாரின் அரசியல் கணக்காக உள்ளது. இதன் காரணமாகவே, மத்திய பட்ஜெட்டுக்கு, நிதிஷ் குமார் பாராட்டு மழை பொழிந்து உள்ளார். இவ்வாறு, தே.ஜ., கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக