வெள்ளி, 22 மார்ச், 2013

நடிகர் சஞ்சய் தத் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்

டெல்லி: 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்துள்ளனர்.முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர்கள் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறியபோது சஞ்சய் தத்தின் கண்கள் கலங்கின. தற்போது அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக