வெள்ளி, 15 மார்ச், 2013

பின்லேடன் கொலை ஆபரேஷனில் உதவிய டாக்டர் அஃப்ரீடியின் நர்ஸூகள் 17 பேரும் எங்கே?

 viruviruppu.com பின்லேடனை கொல்வதற்காக சி.ஐ.ஏ. போட்ட திட்டத்துக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 17 பாகிஸ்தான் நர்ஸூகளை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி பாகிஸ்தான் அரசுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 மே மாதம், பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க சீல் அதிரடிப் படையினரால் பின்லேடன் கொல்லப்பட்டார்.
அவரது மறைவிடத்தை உறுதி செய்வதற்காக சி.ஐ.ஏ. போட்ட திட்டம்தான், பின்லேடன் ரகசியமாக தங்கி இருந்த வீட்டில் உள்ளவர்களின் ரத்த சாம்பிள்களை பெற்று, டி.என்.ஏ. சோதனை செய்வதன் மூலம், அவர்கள் பின்லேடன் குடும்பத்தினர் என்று உறுதி செய்து கொள்வது. (பின்லேடனின் டி.என்.ஏ. சாம்பிள் ஏற்கனவே சி.ஐ.ஏ.யிடம் இருந்தது.)
இதற்காக சி.ஐ.ஏ., தொடர்பு கொண்ட நபர்தான், டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி. இவர், சி.ஐ.ஏ.க்கு ஒத்துழைக்க சம்மதித்தார்.
டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி, பாகிஸ்தான் அரசு சுகாதாரத் துறையில் சீனியர் பதவியில் இருந்தவர். சி.ஐ.ஏ.வுக்காக அவர், தனக்குக் கீழ் பணிபுரியும் சில நர்ஸ்களை உபயோகித்து தகவல் திரட்டிக் கொடுப்பதுதான் திட்டம். ஆனால், இந்த திட்டம் எதுவும், அந்த நர்ஸூகளுக்கு தெரியாது.
சி.ஐ.ஏ., பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டைக் கண்காணித்து வந்ததில், அங்கு பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பது தெரியவந்திருந்தது.
இவர்களில், பின்லேடனின் மனைவிகளும், குழந்தைகளும் அடக்கம்.
அந்த வீட்டைத் தாக்குவதற்குமுன், அங்கிருப்பவர்களில் யார் யார், உண்மையிலேயே பின்லேடனின் குடும்பத்தினர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சி.ஐ.ஏ. விரும்பியது. அதற்காகவே இந்த பாகிஸ்தானிய டாக்டரை ரகசியமாக அணுகியது சி.ஐ.ஏ. (பாகிஸ்தானிய அரசுக்குத் தெரியாமல்தான்!)
உதவ முடிவுசெய்த டாக்டரிடம், ஒரு திட்டத்தைப் போட்டுக் கொடுத்தது சி.ஐ.ஏ.
சி.ஐ.ஏ.யின் திட்டப்படி, சுகாதார ஊழியர்களான நர்ஸூகள் அந்த ஏரியாவுக்கு, இந்த டாக்டரால் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வீடுவீடாகச் சென்ற அவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து ஊசி போட்டனர். அந்த வகையில் பின்லேடனின் வீட்டுக்குள்ளும் அவர்களால் நுழைய முடிந்திருந்தது.
இந்த நர்ஸூகளிடம், ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய ஊசி மூலம் தடுப்பூசி போடவேண்டும். ஊசி போட்டபின் அவற்றை வீசி எறியாமல் பத்திரப்படுத்தி கொண்டுவர வேண்டும். இதற்கு காரணம், இந்த ஏரியாவில் ஒருவித தொற்றுநோய் பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டது.
பின்லேடனின் வீட்டுக்குள்ளும் நுழைய முடிந்திருந்த அவர்களால், பின்லேடனின் வீட்டிலிருந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியவில்லை. அங்கிருந்த பின்லேடனின் மனைவிகளில் ஒருவர், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது என தடுத்து விட்டார்.
இந்த திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும், வேறு முறைகளில் அந்த வீட்டில் இருப்பவர் பின்லேடன்தான் என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்து கொண்டு, அதன் பின்னரே, அந்த வீட்டின்மீது அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது.
பின்லேடன் கொல்லப்பட்டார்.
பின்லேடன் கொல்லப்பட்டபின், இந்த கதை வெளியே தெரிய வந்துவிட்டது. டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி பாகிஸ்தான் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கீழ் பணிபுரிந்த 17 நர்ஸூகளுக்கும் வேலை பறி போயிற்று.
இவ்வளவு நாளும் நடந்த விசாரணையின்பின், இந்த நர்ஸூகளுக்கு சி.ஐ.ஏ. திட்டத்துடன் எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்து, அவர்களை பணியில் இணைத்துக் கொள்ளும்படி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இந்த நர்ஸூகளில் ஒருவரை பேட்டிகண்டது அமெரிக்க ஏ.பி.சி. டி.வி. சேனல். அதில் அவர், “டாக்டர் ஷாஹில் அஃப்ரீடி ஒரு ஹீரோ அல்ல.. அவர் ஒரு துரோகி. அவரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். 27 ஆண்டுகளாக சுகாதார துறையில் பணிபுரிந்த எனது அர்ப்பணிப்பு வீணாகிப் போய், தற்போது பணி இழந்து நிற்கிறேன்” என்றார்.
இதற்கிடையே, பணி இழந்த சில நர்ஸூகள் குடும்பத்தோடு, ‘எப்படியோ’ பாகிஸ்தான் எல்லையை கடந்து, ‘எப்படியோ’ அமெரிக்க விசா பெற்று அமெரிக்காவில் சென்று வசிக்கிறார்கள். அமெரிக்கா செல்ல விரும்பாத சிலருக்கு, பணியில் கிடைத்திருக்க வேண்டிய ஊதியம் பல மடங்காக ‘எப்படியோ’ கிடைத்தது.
டாக்டர் ஷாஹில் அஃப்ரீடிக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. ஆனால், சி.ஐ.ஏ.வுக்கு உதவியவர் என்ற குற்றச்சாட்டில் அல்ல, தீவிரவாத இயக்கத்துக்கு பண உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே தண்டனை வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட தீவிரவாத இயக்கம், அவர் தமக்கு பண உதவி எதையும் செய்ததே இல்லை. அவர் யாரென்றே தெரியாது என அறிக்கை விடுத்தது. அதை யாரும் கண்டுகொள்ள இல்லை
பின்லேடன் கொல்லப்பட்டபோது சி.ஐ.ஏ.-வின் தலைவராக இருந்த லியோன் பனேடா, அதன்பின் அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்தார் (கடந்த மாதம் ஓய்வு பெற்றுவிட்டார்). பின்லேடன் வேட்டையின்போது, பாகிஸ்தான் டாக்டர் அஃப்ரிடி செய்த உதவியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நன்றி தெரிவித்த முதலாவது அமெரிக்க உயரதிகாரி இவர்தான்.
கடந்த ஆண்டு ஜனவரியில் கருத்துத் தெரிவித்த பனேடா, “அவர் (டாக்டர் அஃப்ரிடி) சர்வதேச தீவிரவாதி ஒருவரை கண்டுபிடிக்க செய்த உதவிக்கு வெகுமதி வழங்க வேண்டுமே தவிர, பாகிஸ்தான் செய்திருப்பதுபோல தண்டனை வழங்க கூடாது. அவர் எப்போது எம்மை (அமெரிக்கா) அணுக முடிகிறதோ, அப்போது அவருக்கு உரிய வெகுமதியை வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்று கூறியிருந்தார்.
அதன் அர்த்தம், டாக்டர் அஃப்ரிடி பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால், அவரை உடனடியாக தமது நாட்டுக்கு அழைத்துக் கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது.
“அவர் ஒரு ஹீரோ அல்ல” என்று கடந்த ஆண்டு பாகிஸ்தான் நர்ஸால் கூறப்பட்ட டாக்டர் அஃப்ரிடி, கடந்த மாதம் (பிப்ரவரி) அமெரிக்க காங்கிரஸால், ‘அமெரிக்க ஹீரோ’ என அறிவிக்கப்பட்டும், தற்போது பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.
தற்போது பணியில் சேர்த்துக்கொள்ளப்பட உத்தரவிடப்பட்ட 17 நர்சுகளில் பலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்ற கதை வெளியாவது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்களை தேடுகிறது, பாகிஸ்தான் உளவுத்துறை. ‘நிஜ’ நர்சுகள் கிடைக்காவிட்டால், சப்ஸ்டிடியூட்களுக்கு பணி வழங்கப்படும். (அல்லது, நீதிமன்ற தீர்ப்பை அரசு எதிர்த்து அப்பீல் செய்யும்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக