சனி, 9 மார்ச், 2013

கள் என்பது போதைப் பொருள் அல்ல! 1 கோடி ரூபாய் பரிசு "வாத - விவாதம்

கோவை: கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கோவையில் நேற்று நடக்கவிருந்த, 1 கோடி ரூபாய் பரிசுக்கான, "வாத - விவாதம்' ரத்து செய்யப்பட்டது. கள் ஆதரவு இயக்கத்தினர் காத்திருந்தும், குமரி அனந்தன் அதில் பங்கேற்கவில்லை."கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, "தமிழ்நாடு கள் இயக்கம்' பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. "கள் என்பது போதைப் பொருள் அல்ல; உணவு தான்' என, கள் இயக்கத்தினர் கூறி வருகின்றனர். ஆனால், "இந்த கோரிக்கையில் நியாயம் இல்லை; கள் என்பது ஒரு போதைப் பொருள் தான்' என, காங்., மூத்த தலைவரான குமரி அனந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக, நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வந்தது. இவ்விஷயத்தில் பொது மேடையில், விவாதம் நடத்த, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, குமரி அனந்தனுக்கு அழைப்பு விடுத்தார். கோவை செஞ்சிலுவை சங்க கட்டடத்தில், இந்நிகழ்ச்சியை நடத்த, கள் இயக்கம், நேற்று ஏற்பாடு செய்திருந்தது. "கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமே இல்லை என, குமரி அனந்தன் நிரூபித்துவிட்டால், கள்ளுக்கு ஆதரவான போராட்டம் வாபஸ் பெறப்படும்; 1 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விவாதத்தில் குமரி அனந்தன் பங்கேற்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. விவாதத்துக்கு காத்திருந்த, கள் இயக்கத்தினர், ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டு விவாதம் நடத்துவது குறித்து, குமரி அனந்தனுக்கு, முறைப்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. "விவாதத்திற்கு முறையான ஏற்பாடுகள் செய்து அழைத்தால் வருவதாக, பிப்., 25ல், அவர் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டார். அதன்படி, செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "சட்டம் - ஒழுங்கு' மற்றும் பாதுகாப்பு கருதி, "பொதுப் பார்வையாளர்கள் அதில் இடம் பெறமாட்டார்கள்; பத்திரிகையாளர்கள் பார்வையாளர்களாக வந்து செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வர்; நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறையான கடிதங்கள் மூலமாக தெரிவித்திருந்தும், குமரி அனந்தன் விவாதத்துக்கு வரவில்லை. கடிதத்திற்கு பதிலும் வரவில்லை. இதனால் விவாதம் நடத்த முடியவில்லை. வேறு தேதியில், குமரி அனந்தன் கோவைக்கு வந்து விவாதிக்க விரும்பினால், அதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு, நல்லசாமி தெரிவித்தார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக