செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடல் திருட்டு VCD கூடபெரும் தோல்வி

கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து?
-கே. மணிகண்டன், திருநெல்வேலி.
  படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.
கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக கிறிஸ்த்துவ பாதிரியார்களை தியாகிகளாகவும் கிறிஸ்த்துவ நிறுவனங்கள்; ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்பவையாகவும், ஒழுக்கக் கேடான நபர் பாதிரியாராக ஆக முடியாது, பாதிரியாக உள்ளவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற புனித பிம்பங்களோடுதான் ‘கடல்’ கிறிஸ்த்துவ நிறுவனங்களை கவுரப்படுத்தியிருந்தது.
இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் எப்போதும் கிறிஸ்த்துவ மதத்திற்கு எதிராக, கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கு எதிராக கருத்து சொல்ல மாட்டார்கள்.
மாறாக கிறிஸ்த்துவர்களைத்தான் இழிவாக சித்தரிப்பார்கள். சினிமாவில் கூட, கபரே நடனம் ஆடுகிற பெண்ணை, ஆண்களை மயக்குகிற ஒழுக்கக்கேடான பெண்ணை;  கொலை, கொள்ளை செய்கிற ஆண்களை கிறிஸ்த்துவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.
காரணம், கிறிஸ்த்துவ மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல; மிக அதிக அளவில்  கிறிஸ்த்துவர்களாக இருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் மீது இருக்கிற ஆதிக்க ஜாதி இந்துவின் காழ்ப்புணர்ச்சியே.
சின்ன மாமனார் இஸ்லாமிர்களுக்கு எதிராக விஸ்வரூபமாக நின்றார்; மருமகன் கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக சுனாமி அலையாக அட்டகாசம் செய்திருக்கிறார்.
மீனவர்களின் துயரம் குறித்து ஒரு வார்த்தை பேச முடியாத கடல், தலையில் சுமையோடு வேகமாக நடந்துபோகும் மீனவப் பெண்களின் பின்பக்கத்தை ரசணையோடு காட்டியிருக்கிறது, சுந்தர ராமசாமியின் கண்களால்;
23 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற கதையில், சுந்தர ராமசாமி, ‘மீனவ பெண்கள் தங்கள் பின்பக்கம் குலுங்க கூடையை…’ என்றோ அல்லது ‘குண்டிகள் குலுங்க’ என்றோ எழுதியிருப்பார், (நினைவிலிருந்து எழுதுகிறேன்) அந்த வரி இந்தப் படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பை நினைவில் கொண்டு புத்திசாலித்தனமாக ஒரு பெண்ணின் பார்வையில்.
உழைக்கச் சலிக்காத, உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட மீனவர்களை இழிவானவர்களாகவும், ஒழுக்கக் கேடானவர்களாகவும், பசியால் இருக்கும் ஒரு குழந்தைக்குக்கூட சோறு போடாமல் விரட்டியடிக்கிற மனிதாபிமானம் என்றால் என்னதென்றே அறியாத பொறுக்கிகளாகவும் சித்தரித்தது கடல்.
அதுவும் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போர்குணத்தோடு போராடி வருகிற இந்த சூழலில், மீனவர்களுக்கு எதிராக அவர்களை ஏமாற்றுக்காரர்கள், முன்கோபி, முரடர்கள், முட்டாள்களாக சித்தரித்து மற்ற தமிழர்களின் கண்ணோட்டத்தில் அவர்களை பற்றிய மோசமான மதிப்பீட்டை உருவாக்க முயற்சித்தது கடல்.
அணுஉலைக்கு எதிராக போராடுகிற தோழர் உதயக்குமார் ‘நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. இந்த மாதா மீது சத்தியம்’ என்று சொன்னபோது, குழந்தையைப்போல் உதயக்குமாரை கட்டி பிடித்து பதறி அழத; அன்பும் பாசமும் நிறைந்த அந்த மீனவப் பெண்களைத்தான் மனிதாபிமானம் அற்ற இழிவானவர்களாக சித்தரித்தது கடல்.
’16 வயதுகூட நிரம்பாத பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைக்கலாமா..?’ என்று முதலாளித்துவ நியாயத்தோடு மட்டும் கேள்வி கேட்ட அறிவாளிகளும்,  ‘படம் ரொம்ப அறுவை..’ என்று சுவாரஸ்யத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துச் சொன்ன தமிழ் உணர்வாளர்களும்
கத்தோலிக்க தமிழ் மீனவர்கள் பிரச்சினை வழியாக மட்டுமே ஒட்டுமொத்தமான தமிழர் பிரச்சினையையும் பார்க்க முயற்சித்து, பெரியாரை திராவிட இயக்கத்தை விமர்சிப்வர்களும்கூட; கடல் படத்தின் கத்தோலிக்க தமிழ் மீனவர் எதிர்ப்பை கண்டிக்கவில்லை.
நல்லவேளை சரியா வெட்ட தெரியாதவன் வெட்னதால தப்பிச்சேன்..’ என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதுபோல்,
கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக வந்த கடல், தனது மோசமான, சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மற்ற தமிழர்களிடம் மீனவர்களை பற்றிய இழிவான மதிப்பீட்டை உருவாக்குவதற்கு முன் தோல்லியடைந்தது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
அந்த வேலையை சிறப்பாக செய்த கடல் திரைக்கதை ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை.
இருந்தாலும், படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக