வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

Ex தளபதியின் சகோதரர்களிடம் லஞ்சப்பணம் அளித்தேன்: இடைத்தரகர் ஒப்புதல் வாக்குமூலம்

புதுடில்லி: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் யூரோ லஞ்சப்பணத்தை அளித்ததாக, இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர் ரால்ப் ஹஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்திய வி.வி.ஐ.பி.,க்களுக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தைப் பெற லஞ்சம் அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தலைவர் ஒர்சி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக, ரால்ப் ஹஸ்கி என்பவரிடம் இத்தாலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், மொத்தம் ரூ. 360 கோடி அளவிற்கு லஞ்சம் வழங்கப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்திய விமானப்படை தளபதியாக இருந்த தியாகி, ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கு சாதகமாக மாற்ற பெரும் உதவி புரிந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவரை தான் ஒரு முறை மட்டுமே சந்தித்தாக தியாகி கூறியிருந்த நிலையில், 6 முதல் 7 தடவை தான் தியாகியை சந்தித்ததாக ரால்ப் தெரிவித்துள்ளார். மேலும், பணிவின் அடையாளமாக, தியாகியின் காலில் விழுந்து தான் ஆசீர்வாதம் பெற்றதையும் ரால்ப் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, ஹெலிகாப்டர் வாங்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் ஒன்றான 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்ற விதியை, 15 ஆயிரம் அடியாக மாற்றியுள்ளார் தியாகி. மேலும், ஹெலிகாப்டர் இன்ஜின் சோதனையிலும் அகஸ்டா வெஸ்ட்லாண்டிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் தியாகி. இதற்காக சுமார் 1 லட்சம் யூரோக்களை, அவரது சகோதரர்களிடம் ரால்ப் வழங்கியுள்ளார். எனினும் அப்போது தியாகி உடன் இருக்கவில்லை என்பதையும் விசாரணையில் ரால்ப் தெரிவித்துள்ளார்.

இதற்குப்பின் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கே ஒப்பந்தத்தை அளித்துள்ளது. அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி..dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக