புதன், 6 பிப்ரவரி, 2013

உடனடித் தேவை, தண்ணீர்! dinamani

பிப்ரவரி 5, 2007-இல் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானது. செவ்வாய்க்கிழமையுடன் (5.2.2013) ஆறு ஆண்டுகள் நிறைவுற்றன. இன்னமும் இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இருக்கிறது மத்திய அரசு.
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவோம் என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இன்னமும்கூட, "இரு தரப்பும் ஏற்கும் ஒரு தருணத்துக்காக அரசிதழில் வெளியிடாமல் இருப்பதாக' நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் கூறுகிறார். அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது.
அண்மையில் தமிழகத்தில், தஞ்சைப் பகுதியில் பேசிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்றார். இப்போது நீதிமன்றம் பிப்ரவரி 20-க்குள் வெளியிடப்பட வேண்டும் என்கிறது. பிப்ரவரி மாதத்துடன் "சம்பா' விவசாயம் முடிந்து போய்விடும். அதன் பிறகு தண்ணீர் பேச்சு பற்றிய காரசார விவாதங்கள் அடுத்த "குறுவை'ச் சாகுபடியின்போதுதான் மீண்டும் எழும்.
அரசிதழில் வெளியாவதைக் காட்டிலும் இன்றைய அவசியத் தேவை - 3 லட்சம் ஏக்கர் நெற்பயிரைக் காப்பதுதான். மொத்தம் 9 லட்சம் ஏக்கரில் பயிரிட்டனர். 3 லட்சம் ஏக்கரில் பயிர், நீர் இல்லாமல் கருகிவிட்டது. 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி முடிந்துவிட்டது. இப்போது அறுவடைக்கு காத்து நிற்கும் 3 லட்சம் ஏக்கருக்கு உடனடியாகத் தண்ணீர் தேவை.

காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடகம் மறுக்கிறது என்று நீதிமன்றம் போனால், "முதலில் மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுங்கள், பிறகு இதற்கு ஈடான நீரைத் தமிழகத்துக்குக் கர்நாடகம் வழங்கும்' என்று நீதிபதிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு மேட்டூர் அணையில் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்குமா? அணையில் போதுமான தண்ணீர் இருந்தால் "சம்பா' பயிர்களை வாடும்படியாக விட்டுவைக்குமா? மேட்டூர் அணையில் இப்போதுள்ள நீர் உயரம் வெறும் 34 அடி மட்டுமே. அதாவது ஏறக்குறைய 9 டி.எம்.சி. தண்ணீர்தான் அணையில் இருப்பு.
இதேவேளையில், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பு 20 டி.எம்.சி. அதாவது, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரிநீர்ப் பங்கீட்டில் 58% (ஆண்டுக்கு 419 டிஎம்சி) உரிமை உடைய தமிழ்நாட்டின் அணை நீர் இருப்பு 9 டி.எம்.சி.; 37% (ஆண்டுக்கு 270 டிஎம்சி) உரிமை உடைய கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு 20 டி.எம்.சி.. இதைப் பார்த்தாலே பாமரன்கூட, யாரை யார் ஏமாற்றி நீரைச் சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிவான். ஆனால், நீதிமன்றம் கர்நாடகம் சொல்லும் வாதத்தை சரிபார்க்க, அதாவது தமிழ்நாட்டில் 40% அறுவடை முடிந்துவிட்டது, மீதியுள்ள பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பதால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தேவையில்லை என்று கர்நாடகம் கூறுவதை ஆய்வு செய்ய, ஒரு குழுவைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிடுகின்றது.
அதாவது திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிடுகிறது. "செவ்வாய்க்கிழமை குழு ஆய்வு செய்யும், புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யும்' என்று. "ஹெலிகாப்டரில் சென்றாகிலும் ஆய்வு நடத்துங்கள்' என்று நீதிமன்றம் கூறுகிறது. தமிழகத்தின் சம்பா சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவு குறித்து ஆராய மத்திய நீர் ஆணையத்தின் மூவர் குழு உடனடியாகக் காரில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டது. இவர்கள் ஒருநாளில் எத்தகைய ஆய்வை நடத்திவிட முடியும்?
தமிழக அரசும் நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, அதே நாள் இரவிலேயே வினாடிக்கு 9,000 கனஅடி நீரைத் திறந்துவிடத் தொடங்கிவிட்டது. வினாடிக்கு 9,000 கன அடி என்பது ஏறக்குறைய ஒரு நாளைக்கு 0.8 டி.எம்.சி. என கணக்கிடலாம். இரண்டரை நாளில் மேட்டூர் அணையிலிருந்து, நீதிமன்றம் கூறியுள்ள 2 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிடும். அணையில் அடிமட்ட வண்டலுடன் கூடிய இந்த நீர், காவிரியில் ஆங்காங்கே உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கே போதாது. ஆனால் நீதிமன்றம் இந்தக் குடிநீர் அளவைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
கர்நாடகம் இதற்கு ஈடான தண்ணீரைத் திறந்துவிடும் என்று மட்டுமே நீதிமன்றம் கூறியுள்ளது. உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கூறவில்லை. நல்ல நாளிலேயே கர்நாடகம் ரொம்ப நியாயமாக நடந்துகொள்ளும்! நீதிமன்றம் சரியாக வரையறை செய்யாத நிலையில், கர்நாடகம் இந்த நீரைத் திறக்கப் போவதில்லை. அதாவது 20 டி.எம்.சி. இருப்பில் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்குக் கருணை காட்டப்போவதில்லை. கர்நாடக சட்டப்பேரவை, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் மேட்டூர் அணையிலிருக்கும் மொத்த நீரையும் வெளியேற்றிவிட்டு, பயிருக்கு மட்டுமல்ல, தவிக்கும் வாய்க்கும் தண்ணீர் இல்லாமல் திண்டாடப் போகிறது.
"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பார்கள். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதைவிட முக்கியமும் அவசரமுமான ஒன்று உடனடியாகக் கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விடுவது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக