புதன், 6 பிப்ரவரி, 2013

இந்தியா தோல்வி வெற்றியை ருசித்த இலங்கை! மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

Sri Lankan Women Cricketers stun the cricket world

 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இதன்மூலம் அடுத்த சுற்றான "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகளும் "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்தியா தோல்வி: மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 42.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஜெயன்கனி 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த மெண்டிஸýம், ரசன்கிகாவும் 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஸ்ரீவர்த்தனா களம்புகுந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியதால் இலங்கையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ரசன்கிகா 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்ரீவர்த்தனா 59 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் கெüசல்யா கடைசிக் கட்டத்தில் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் சேர்க்க இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

283 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக ரீமா மல்ஹோத்ரா 38 ரன்களும், திருஷ் காமினி 22, ஜுலான் கோஸ்வாமி 22, கேப்டன் மிதாலி ராஜ் 20 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 144 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. இலங்கைத் தரப்பில் ஸ்ரீவர்த்தனா, செனிவிர்தனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 84 ரன்கள் குவித்த ரசன்கிகா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் 2-வது வெற்றியை ருசித்த இலங்கை 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பையில் மிகப்பலவீனமான அணியாகக் கருதப்பட்ட இலங்கை அணி, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது. லீக் சுற்றின் முடிவில் "ஏ' பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் போட்டியை நடத்தும் நாடான இந்தியா போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கிலாந்து வெற்றி: மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 36.4 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் கைஷோனா நைட் 33, ஷனேல் டேலி 30 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறவே 101 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள். அந்த அணியில் 6 பேர் டக் அவுட் ஆகினர். இங்கிலாந்து தரப்பில் ஷ்ரப்சோல் 4 விக்கெட்டுகளையும், பிரின்டில் 3 விக்கெட்டுகளையும், கேத்தரினா பிரன்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் வியாட், பிரின்டில் ஆகியோர் இன்னிங்ûஸத் தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. பிரின்டில் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த டெய்லர் ரன் ஏதுமின்றியும், வியாட் 14, கிரீன்வே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஹெதர் நைட் 18, ஜென்னி குன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டாட்டின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஷ்ரப்சோல் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் வெளியேற்றம்: மற்றொரு லீக் ஆட்டத்தில் 126 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான். கட்டக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் திரிஷா ஷெட்டி 4, கேப்டன் டூ பிரீஸ் 0, போட்கீட்டர் 20, பிரிட்ஸ் 0, பெனாட் 11 ரன்களில் ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தென் ஆப்பிரிக்கா. எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த மரிஸôனே காப்-வான் நீகெர்க் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இதன்பிறகு கடைசி வரை விக்கெட்டை இழக்கவில்லை. இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. மரிஸôனே காப் 102, வான் நீகெர்க் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சுருண்டது பாகிஸ்தான்: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சிட்ரா அமீன் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் விரைவாக வெளியேற அந்த அணி 29.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு சுருண்டது.
"பி' பிரிவு குரூப் சுற்றில் முதல் வெற்றியைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதேநேரத்தில் பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஆஸ்திரேலியா எளிதான வெற்றி: நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
கட்டக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 38.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

சூப்பர்-6

குரூப் நிலையில் "ஏ' பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், "பி' பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
"சூப்பர் சிக்ஸ்' சுற்று மொத்தம் 9 ஆட்டங்களைக் கொண்டது. "ஏ' பிரிவில் இருந்து "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறிய அணிகள், "பி' பிரிவில் இருந்து "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒவ்வொரு அணியுடனும் தலா ஒரு முறை மோதும். இந்த சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும். மற்ற 4 அணிகளும் 3 மற்றும் 5-வது இடங்களுக்கான பிளே ஆஃப் சுற்றில் மோதும். ஏ பிரிவில் கடைசி இடம்பிடித்த இந்திய அணியும், பி பிரிவில் கடைசி இடம்பிடித்த பாகிஸ்தான் அணியும், வரும் 7-ம் தேதி கட்டக்கில் நடைபெறவுள்ள 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதவுள்ளன.

துரத்திய துரதிருஷ்டம்

இதுவரை இலங்கையுடன் 17 ஆட்டங்களில் மோதியிருந்த இந்தியா, 16 ஆட்டங்களில் வென்றிருந்தது. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. முந்தைய ஆட்டங்களில் ஒருமுறைகூட தோற்காத இந்திய அணி, துரதிருஷ்டவசமாக உலகக் கோப்பையில் இலங்கையிடம் தோற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக