திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

நித்தியானந்தன் - ஜெயேந்திரன்வினவு இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர். அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா நடந்து வருகிறது. பார்ப்பன இந்து மதத்தின் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று இந்த கும்பமேளா. தெற்கை விட வடக்கில் அதிகம் காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கையின் படி இலட்சக்கணக்கான மக்கள் ‘புனித’மும் சாக்கடையும் சங்கமிக்கும் கங்கையில் நீராடி வருகின்றனர். இதை ஒட்டி அலகாபாத் ரயில்நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். மதம் சார்ந்த கூடுதல்களில் இப்படி மக்கள் இறப்பது ஆண்டுதோறும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மக்களை இப்படி நெரிசலில் சாகவிடும் உத்திர பிரேதேச அரசு சாமியார்களுக்கு மட்டும் சகல ஏற்பாடுகளையும் விஸ்தாரமாக ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் மைனர் நித்தியானந்தாவும், கேடி ஜெயேந்திரனும் கங்கை கரையில் 10வது மற்றும் 12ஆவது செக்டர்களில் முகாம் அமைத்து கங்கை ஆற்றை அழுக்காக்கி வருகின்றனர். சாதாரண மக்கள் எல்லாம் கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று நம்புகின்றனர். ஆனால் பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியும், ஜெயேந்திரனும் அப்படி குளித்து ‘போகுமளவு’ பாவங்களை கொஞ்சமாக செய்தவர்கள் அல்ல. ஒருவேளை இவர்கள் குளித்ததால் கங்கையை நிரப்பும் பாவம் மற்ற அப்பாவிகளை தொற்றிக் கொள்வது உறுதி.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மாலை நான்கு மணிக்கு ஜெயேந்திரன் பக்தர்கள் புடை சூழ நித்தியானந்தாவின் முகாமிற்கு சென்றிருக்கிறார். வாசலில் நின்று வரவேற்ற நித்தி அவரை அழைத்துச் சென்று தங்க சிம்மாசனத்தில் அமரவைத்து தானும் மற்றொரு தங்க நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஜெயேந்திரனை வாழ்த்தி பேசிய நித்தி தனக்கும் சங்கர மடத்திற்கும் 10 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும், இடையில் சில விஷமிகள் அந்த உறவை சீர்குலைக்க முயன்றதாகவும், இனி ஆச்சாரியரின் ஆசீர்வாதத்தோடு இனிமையான உறவு தொடரும் என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய ஜெயேந்திரன் நித்தி மற்றும் நித்தியானந்தா தியான பீடத்தின் தொண்டினை வாழ்த்தி பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பை இருவரும் பரஸ்பரம் முதுகு சொறியும் வண்ணம் பேசிய பேச்சினை மட்டும் எடிட் செய்து நித்தி தரப்பு வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.
மதுரை ஆதீன விவகாரத்தில் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவை சேர்த்து பேசிய ஜெயேந்திரன் மீது நித்தி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பின்பு இரண்டு கேடிகளும் சமாதானமாகி வழக்கை வாபஸ் பெற்றனர். ஒருவேளை அந்த உடன்படிக்கையின்படிதான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறதோ என்னமோ?
அந்த வீடியோவில் இரண்டு கேடிகளும் யோக்கியன் போல முகத்தை வைத்துக் கொண்டு பேச முயன்றாலும் முடியவில்லை. நித்தி பேசும் போது ஒரு உள்குத்தை வெளியிட்டார். அதன்படி ஜெயேந்திரனிடம்தான் சில விஷமிகள் தன்னைப் பற்றி தகாதது சொல்லி தப்பான அபிப்ராயம் ஏற்படுத்தியிருக்கிறார்களாம். யாரந்த விஷமிகள்? சங்கரமட மேனேஜர் மகாதேவனா, சோ ராமசாமியா, ஆடிட்டர் குருமூர்த்தியா, இல்லை இந்து ராமா?
மதுரை ஆதீனப் பதவியை வாங்குவதற்காக ஓரிரு கோடி ரூபாய்களும் மேலும் சில ‘சப்களைகளும்’ செய்த நித்தி இங்கே ‘பரமாச்சாரியாவை’ குஷிப்படுத்த என்ன செய்தார் என்பது தெரியவில்லை. சங்கர ராமன் கொலை வழக்கு, மற்றும் அனுராதா ரமணனது வாக்கு மூலம் போன்றவை அம்பலமானாலும் ஐயரென்பதால் ஜெயேந்திரனை விட்டுக் கொடுக்காத பார்ப்பனர்கள் இப்போது என்ன சொல்வார்கள? சங்கர மடம் மற்றும் நித்தியானந்தா தியான பீடத்தின் இந்த இணைப்பினால் இந்து மதத்தின் பெருமை சாக்கடை கங்கைக்கு போட்டியாக நாடெங்கும் ஓடுவது உறுதி.
நித்தியானந்தாவை மட்டும் ஏதோ பேரம் படியவில்லை என்பதால் எதிர்க்கும் இந்து மக்கள் கட்சி போன்ற காமடி பாசிஸ்ட்டுகள் இப்போது ஜெயேந்திரனே ஆதரித்து விட்டபடியால் மேல் கீழ் வாய்களை மூடிக்கொள்வது உறுதி. எனில் சங்கபரிவாரங்களின் சங்கரமட அடிமைத்தனத்தை விளக்கத் தேவையில்லை. மைனரும், கிரிமினலும் இப்படி சந்திப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வெட்கம் கெட்டு பல பக்தர்கள் இவர்கள் பின்னால் இன்னமும் ஓடுவதுதான் மானக்கேடு.
அதிமுகவைக் கவனித்து தமிழ்நாட்டில் பிரச்சினை ஏதும் வராமல் பார்த்துக் கொண்ட நித்தி இப்போது ஜெயேந்திரனை கவனித்ததன் மூலம் கர்நாடகா, ஏன் இந்தியாவெங்கும் கூட பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவராகிறார். இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர். இதனால் இவர்கள் ‘இந்துக்கள்’ மத்தியில் எதையும் இழக்கவில்லை என்பது முக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக