திங்கள், 4 பிப்ரவரி, 2013

கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்து முன்னேறிய அட்டாக் பாண்டி

மதுரை : மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் "பொட்டு' சுரேஷ் கொலையில், சரண் அடைந்த 7 பேர், "தலைநகரத்தையே முடிக்க நினைச்சா சும்மா விடுவோமோ; அதான் முடிச்சிட்டோம்' என போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இக்கொலையில், சந்தேகத்தின் பேரில், தி.மு.க.,வைச் சேர்ந்த, வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் "அட்டாக்' பாண்டி ஆதரவாளர்களான சபாரத்தினம், சந்தானம் உள்ளிட்டோரை, போலீசார் தேடினர். நேற்று முன்தினம், திண்டுக்கல் நத்தம் கோர்ட்டில், மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம், ராஜா என்ற ஆஷா முருகன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் சரண் அடைந்தனர். அவர்களிடம், கொலைக்கான பின்னணி குறித்து, போலீசாரால் விசாரிக்க முடியவில்லை. இருப்பினும், திண்டுக்கல்லில் இருந்து மதுரை சிறைக்கு அழைத்து வரும் வழியில், போலீசார் விசாரித்தபோது, "தலைநகரத்தையே முடிக்க நினைச்சா சும்மா விடுவோமோ; அதான் முடிச்சிட்டோம்' என்று அதிர்ச்சி அடைய வைத்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
"யார் அந்த தலைநகரம்' என கேட்டபோது, "அட்டாக்' பாண்டி தான்' என்றனர். சில ஆண்டுகளுக்கு முன், வெளிவந்த "தலைநகரம்' படத்தின் ஹீரோவை மனதில் வைத்துக்கொண்டு, பாண்டியை அவ்வாறு அழைக்கின்றனர். அவர்கள் சொல்வது உண்மைதானா அல்லது இவ்வழக்கில் பாண்டியை சிக்க வைக்க நாடகம் ஆடுகிறார்களா? என, விசாரிக்கிறோம். இருப்பினும், "தலைநகரத்தை' தலைநகரில் (சென்னை) தேடிக் கொண்டிருக்கிறோம், என்றனர்.

ஏன் சந்தேகம்?:


"பொட்டு' சுரேஷ் கொலையில், "அட்டாக்' பாண்டி மீது போலீசார் சந்தேகப்பட காரணம், கடந்த மாதம் அவர் அளித்த பிரத்யேக பேட்டி தான். அதில், ""20 ஆண்டுகளாக கட்சிக்கும், அழகிரிக்கும் உண்மையா உழைச்சோம். ஆனா, "பொட்டு' சுரேஷ், எங்களை அவரோடு சேர விடலை. ஸ்டாலினுடன் சேர்ந்து "டபுள் கேம்' ஆடுகிறார். அழகிரிக்கு கெட்ட பேரு ஏற்படுவதற்கு காரணம் சுரேஷ்தான்,'' என, தெரிவித்திருந்தார்.சுரேஷ் மீது கோபம்: கடைகளை ஒப்பந்தம் எடுக்கும் தனது தொழிலுக்கு சுரேஷ் இடையூறாக இருந்ததாக, பாண்டி கருதினார். ஆட்சி மாறிய பிறகும், இடையூறு செய்வதாக கருதியே, கொலை நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர், போலீசார்.


"அட்டாக்' ஒட்டிக் கொண்ட பின்னணி!
ராமநாதபுரம், கமுதி பகுதியைச் சேர்ந்த பாண்டி, 30 ஆண்டுகளுக்கு முன், பெற்றோருடன், மதுரை கீரைத்துறையில் குடியேறினார். மாநகராட்சி கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தார். பின், குத்தகையை கைப்பற்றுவதில், அவர் அடிதடியில் ஈடுபட, ரவுடியாக மாறினார். இவர் மீது, மதுரை அவனியாபுரம், கீரைத்துறை, விருதுநகர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஸ்டேஷன்களில், கொலை, மிரட்டல், மோசடி உட்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கபடி வீரரான பாண்டி, "அட்டாக்' எனக்கூறி, எதிராளியை மடக்குவதில் கில்லாடி. இதனால் அவரது பெயருடன் "அட்டாக்' ஒட்டிக் கொண்டது.


சரண் அடைய திட்டமா:
போலீசாரின் சந்தேகப் பார்வை, "அட்டாக்' பாண்டி மீது திரும்பி உள்ளதால், கோர்ட்டில் அவர் சரண் அடையலாம் என, போலீசார் கருதுகின்றனர். ஏற்கனவே சரண் அடைந்தவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், இம்முடிவை அவர் எடுக்கக்கூடும். அப்போது, "தனக்கும், சுரேஷ் கொலைக்கும் சம்பந்தமில்லை; போலீஸ் தேடுவதால் சரண் அடைந்தேன்' என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர், போலீசார்.


கூட்டாளி எங்கே:
பாண்டியின் கூட்டாளி ரூபன். மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த இவர் மூலமாகவே, சுரேஷ் கொலைக்கான "டீலிங்' நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரையும் தேடி வருகின்றனர். .dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக