வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஹெலிகாப்டர் பேர ஊழல்: 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ

viruvirupu.
“ஹெலிகாப்டர் பேர ஊழலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” என்று கூறியுள்ள பா.ஜ.க., “இது இத்தாலி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழல் என்பதால்தான் ஒரு ஆண்டு முழுவதும் மவுனம் சாதித்தீர்களா?” என்றும் சோனியா காந்திக்கு கிண்டல் அடித்துள்ளது.
உயர்ந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இத்தாலி நாட்டை சேர்ந்த பின்மெக்கானிக்கா (Finmeccanica) நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் (Agusta Westland) நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,546 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்து கொண்டது.
இதில், 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்தது.

இந்திய ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைவர் கியூசெப்பி ஆர்சி, துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகிய இருவரையும் இத்தாலிய அரசு கைது செய்துள்ளது. ஒருவர் சிறையில் உள்ளார், மற்றையவர் வீட்டுக் காவலில் உள்ளார்.
இதையடுத்து, இந்த பேரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆன்டனி உத்தரவிட்டுள்ளார்.
இப்படியொரு ‘லட்டு’ போல விஷயம் கிடைக்கையில் பா.ஜ.க. சும்மா இருக்குமா?
பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். “இந்த வழக்கு விசாரணை, இத்தாலியில் நடந்து கொண்டிருந்தபோது, மத்திய அரசு ஒரு ஆண்டு முழுவதும் மவுனமாக இருந்தது ஏன்? இந்த பேரம், பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை அளித்தது, கண்டிக்கத்தக்கது. இது, இன்னொரு போபர்ஸ் ஊழலாக இருக்கும் என்று கருதுகிறோம்.
போபர்ஸ் ஊழல் வழக்கில் இத்தாலியை சேர்ந்த குவாத்ரோச்சி சம்பந்தப்பட்டு இருந்தார். அவரை பாதுகாக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. இந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனமும் இத்தாலிய நிறுவனம்தான். எனவேதான், மத்திய அரசு ஓராண்டாக விசாரணை ஏதும் நடத்தாமல் இருந்ததா?
இந்த ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எழுப்புவோம். இந்த பேரத்தை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். இன்னும் வழங்கப்படாமல் உள்ள 9 ஹெலிகாப்டர்களின் சப்ளையை, விசாரணை முடிவடையும்வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒவ்வொரு துறையிலும் கொள்ளை நடக்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் கண்டுபிடிக்கப்படுகிறது. இது ஏன் என்று பிரதமரும், சோனியா காந்தியும் விளக்க வேண்டும். இந்த ஊழல்கள் மூலம் எத்தகைய இந்தியாவை அவர்கள் படைக்க விரும்புகிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டிருக்கிறார் ரவிசங்கர் பிரசாத்.
ஆமால்ல.. ராணுவம் தொடர்பான பெரிய ஊழல்கள் எல்லாவற்றிலும் இத்தாலிய கனெக்ஷன் இருக்கிறது. ஏனுங்க அப்டி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக