வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் http://www.jeyamohan.in/?p=34193 ,மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=34262 என்பவற்றை வாசித்தேன்.
ரிஷானா விடயத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்த மனுஷ்யபுத்திரனுக்கும் ஏனைய பத்திரிகைகளுக்கும் எதிரான ஜெய்னுலாப்தீன் போன்றவர்களின் ஆத்திரம் புரிந்துகொள்ளக் கூடியதே.கடற்கரையில் மணல்வீடு கட்டும் சிறுவர்களுக்கு அது ஒரே அலையால் இல்லாதொழிக்கப்படும் போது ஏற்படும் மனநிலைக்கு நிகரானதுதான் இது.சகல பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக சவூதிச்சட்டங்களை பிரச்சாரம் செய்துவந்தவர்கள்.அவை கேள்விக்குள்ளாகும் போது நிலைதடுமாறிவிடுகின்றனர்.
நவீன சமூகத்தின் மக்கள் திரள் பண்டைய சமூகங்களின் மக்கள் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு பிரமாண்டமானதாகும்.அத்துடன் தற்போதைய சமூகத்தின் உறவுநிலைகள்,சூழல்கள் என்பன பழங்குடி சமூகங்களினுடையதைவிட மிகவும் சிக்கலானவையாகும்.அவற்றிற்கு இது கறுப்பு,அது வெள்ளை என்ற எளிய சட்டங்கள் பொருத்தமானவை அல்ல.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற நுணுக்கமான,பன்முகத்தன்மையான சட்டங்களே பயனுடையவையாகும்.நீதி விசாரணையில் ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள மனிதத்தவறுகளால் தண்டிக்கப்படக்கூடிய ஒரு நிரபராதி பின்பொருகாலத்தில் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றமற்றவர் என்று தெரியவந்தால் அவரை எப்போதுமே மீட்கமுடியாத நிலைக்குக் கடுமையான சட்டங்கள் உள்ளாக்கிவிடும்.எடுத்துக்காட்டாகப் பொய்யான சாட்சிகளினால் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தவறானபுரிதலினால் ஒருவர் திருடன் என்று தீர்மானிக்கப்பட்டு அவரின் கை வெட்டப்பட்டால் உண்மை தெரியவரும் போது அவரை அத்தண்டனையில் இருந்து ஒருபோதுமே மீட்கமுடியாது.அத்துடன் கடுமையான சட்டங்கள் குற்றங்களைக் குறைப்பதற்குப்பதில் அதிகரித்துவிடவும் கூடும்.எடுத்துக்காட்டாகப் பாலியல் வல்லுறவிற்கு மரணதண்டனை என்று சிலர் வாதிடுகின்றனர்.உணர்ச்சிவசப்பட்டால் இவ்வாறான சட்டம் சரிபோன்று தோன்றும்.ஆனால் இது பெண்களுக்கு ஆபத்தை அதிகரித்துவிடும்.பெண் பலவீனமான சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள்.கொலைக்குற்றத்திற்கும் மரணதண்டனை,பாலியல் வல்லுறவிற்கும் மரணதண்டனை எனும்போது பாதிக்கப்பட்ட பெண் காட்டி கொடுத்துவிடுவதைத் தவிர்க்க குற்றவாளி அவளை கொலைசெய்துவிடுவதற்கு அதிகசாத்தியம் ஏற்பட்டுவிடும்.ஏனென்றால் பிடிபட்டாலும் இரண்டுக்கும் ஒரே தண்டனைதான் கிடைக்கும்.
மனுஷ்யபுத்திரன்,கமல்ஹாசன்,ஸ்ருதிஹாசன் பற்றிய ஜெய்னுலாப்தீனின் மட்டரகமான எழுத்தும் பேச்சும் ஒருவகையில் நன்மையானவையே.அவரின் வாய்ச்சாதுரியத்தின் ரசிகர்களுக்கு உண்மையில் யார் அவரென்று அவை இனங்காட்டிவிட்டன.
ரிஷானாவைப் பற்றி எழுதிய மனுஷ்யபுத்திரனையும் ஏனைய பத்திரிகையாளர்களையும் ஜெய்னுலாப்தீன் விவாதத்திற்கு அழைத்துள்ளது நகைப்புக்கு இடமானது.எழுத்தாளர்களின் ஊடகம் எழுத்து.அவர்கள் அதன் மூலம் தங்களின் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.அவற்றை மறுக்கமுனைபவர்கள் எழுதி மறுக்கலாம் அல்லது தங்களுக்கு உகந்த ஊடகத்தினைப் பயன்படுத்தலாம்.அதைவிடுத்து எழுத்தாளர்கள் வரப்போவதில்லை என அறிந்தும் ‘விவாதத்திற்கு வா’..’பட்டிமன்றத்திற்கு வா’ என்று சவால்விடுவது உண்மையில் தமது கட்சிகாரர்களைக் குஷிப்படுத்தும் ஒரு மலினமான உத்தியேதவிர வேறில்லை.
இவரின் ‘உணர்வு’ மற்றும் ‘ஏகத்துவம்’ பத்திரிகைகள் மற்றைய மதங்களைப்பற்றி குறிப்பாக இந்து,கிறிஸ்தவ மதங்கள் தொடர்பான கடுமையாக விமர்சனங்களைத் தொடர்ந்து செய்துவருகின்றன.இவ்வாறு ஒரு மக்களாட்சி நாட்டில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய கருத்துச் சுதந்திரத்தை இயலுமானவரை பயன்படுத்தும் ஜெய்னுலாப்தீனும் அவரைப் போன்றவர்களுக்கும் தங்களைப்பற்றிய சாதாரணமான விமர்சனங்களையே தாங்கமுடிவதில்லை என்பது அவர்கள் மதத்தைப் பயன்படுத்தி எதனை மக்களுக்கு அளிப்பார்கள் என்பதற்கான தெளிவான அடையாளமாகும்.
தமிழில் ஜெய்னுலாப்தீன் என்றால் ஆங்கிலத்திலும் உருதிலும் ஸாகிர் நாயக்.இந்த காணொளியில் அவர் தன்னைத் தெளிவாக இனம் காட்டுகிறார்.
http://www.youtube.com/watch?v=rHpd2T7mi5c
இவற்றை எல்லாம் விட அதிர்ச்சி தருவது இது.திரைப்படம் என்ற ஊடகத்தை பயன்படுத்தும் ஒருவர் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை நசுக்க ஜெய்னுலாப்தீன் போன்றவர்களைப் பயன்படுத்துகிறார் என்பதனை இந்தக் காணொளி வெளிப்படுத்துகின்றது..jeyamohan.in
http://www.youtube.com/watch?v=fNa5qI-KLjQ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக