புதன், 13 பிப்ரவரி, 2013

மலையாள டி.வி. பெண் நிருபரிடம் ஆபாச கேள்வி கேட்ட மத்திய அமைச்சர் வயலார் ரவி!

மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரிடம் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆபாசமாக பேசியது, கேரளாவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. “அமைச்சர் வயலார் ரவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்”  என கேரள பெண் பத்திரிகையாளர்கள், தீர்மானித்துள்ளனர்.
சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கு கேரளாவில் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிராக, கேரளாவில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆலப்புழாவுக்கு வந்தார் மத்திய அமைச்சர் வயலார் ரவி. அவரிடம், குரியன் விவகாரம் குறித்து ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி பெண் நிருபர் கேள்வி கேட்டார்.
முதலில் வயலார் ரவி, “இந்த விவகாரம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என்று மறுத்து விட்டார்.
ஆனால், அந்த பெண் நிருபர் மீண்டும், மீண்டும் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த வயலார் ரவி, ‘‘உனக்கு குரியன் மீது ஏன் இவ்வளவு கோபம்? என்ன அக்கறை? அவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவருடன் எதாவது முன் அனுபவம் உள்ளதா?’’ என கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
வயலார் ரவியின் இந்த ஆபாச பேச்சால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் பெண் பத்திரிகையாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய வயலார் ரவியை வன்மையாக கண்டிப்பதுடன் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக