செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வாய்ப்புகள், மேலும் வாய்ப்புகள்

women-entrepreneurs-branding-mistakes1
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 27
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் உதவிகள் குறித்து இனி பார்ப்போம். உணவு விடுதி, நடமாடும் உணவு விடுதி, சுழல் முறையில் செயல்படும் நூலகம், ஆகியவற்றைத் தொடங்கி நடத்த விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.
மேலும், தொழிற்கல்வி சார்ந்த பணி, சுயதொழில் வகையில் தேர்ந்த நிபுணத்துவம் கொண்ட சிறந்த மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் கடன்  அளிக்கிறது. அதே போல், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உதவி கிடைக்கிறது.
குறுந்தொழில் மற்றும் கிராம குடிசைத் தொழில், கைத்தறி ஆடை தயாரிப்பு நெசவுத் தொழில், உணவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

கிராமங்களில் விவசாயம் மற்றும் சார்புத்தொழில்கள், பயிர் வளர்ப்பு, மீன், தேனி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, தோட்டக்கலை, பூந்தோட்டங்கள் பராமரிப்பு மற்றும் விவசாய சார்புடைய தொழில்கள் செய்யும் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.
அரசாங்கத் தரப்பில் வழங்கப்படும் மானியம் பெறவல்ல தொழில்களுக்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கான முழு விவரங்களைக் கீழ்கண்ட இணையதளத்தின் வாயிலாக அறியலாம். (www.centralbankofindia.co.in)
0
ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் – ஓரியண்டல் மகிலாவிகாஸ் யோஜனா என்ற அமைப்பின் கீழ் பெண் தொழில்முனைவோருக்கு, ரூ. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை 2 சதவிகித வட்டி குறைப்புடன் கடன் அளிக்கிறது. 10 லட்சத்துக்கு மேலும் கடனுதவி பெறலாம். தொழிலகங்கள் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, 51% பங்குகள் இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட கடனுதவி பெறலாம். இணையதளம் : http//obcindia.co.in.
ஐசிஐசிஐ வங்கியின் விமன்ஸ் அக்கவுண்ட் என்ற திட்டத்தின்கீழ் பெண்கள் பயன் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மேலதிக விவரங்களுக்கு : http://www.icicibank.com
0
உதவிகள் ஒரு பக்கம் இருக்க, நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம், தொழில் தொடங்குவதற்கு உண்மையிலேயே நமக்கு விருப்பமும் உத்தேவகமும் இருக்கிறதா என்பதுதான்.
பொதுவாக பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிலும் இந்தியப் பெண்கள் தங்கள் திறமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களது குடும்பத்தினர் முன் வாயடைத்து அமைதி காப்பார்கள். அவர்களுடைய திறமை வெளியில் தெரியாது. குடும்பச் சூழலில் பெண்களின் பங்களிப்பு மிக அதிக அளவில் தேவைப்படுவதாலும், சமூகத்தின் எதிர்பார்ப்பும் அதை ஒட்டியே இருப்பதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருக்கவேண்டிய நிலையே உள்ளது.
இந்தப் பின்னணியில், சுயதொழிலில் ஈடுபட முன்வரும் பெண்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். வாழ்க்கையில் அவ்வப்போது எழும் பிரச்னைகளுக்கு ஏற்ப, துணிச்சலுடன் தோல்வியின் பயமின்றி வெற்றியை நோக்கி நடைபோடுபவரா நீங்கள்? தனிப்பட்ட முறையில் சில பல நிகழ்வுகளுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்பவரா? செய்யும் காரியத்துக்கு ஏற்ப அதற்குரிய அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உடையவரா? பொதுவாக எந்தவொரு சூழலிலும் இயல்பாக எழும் தடைகளை மீறி, நினைத்த காரியத்தை முழு முயற்சியோடு முடிப்பவரா? நிர்வாகத் திறமைப் பளிச்சிடும்படி செயல் திட்டம் வகுப்பவரா? உங்களை நம்பி ஒரு செயலில் இறங்குவீர்களா? அதற்கான துணிச்சலும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருக்கிறதா?
மேற்கூறிய எல்லாவற்றுகும் உங்கள் உண்மையான பதில் ‘ஆம்’ என்றால் மட்டுமே நீங்கள் சுயதொழிலுக்கு ஏற்றவர்.
இனிவரும் காலங்களில் என்னென்ன தொழில் செய்தால் முன்னேற்றம் காண முடியும்?
இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை சுயதொழில் என்றால் சமையல் பொடி, ஊறுகாய், அப்பளம், தையல் என்றுதான் நினைப்பார்கள். இன்றளவும் இந்தத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு வந்தபோதும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் இவற்றையும் கடந்து பெருமளவில் விரிவடைந்துள்ளன.
  • கணினிச் சார்ந்த சேவை பிரிவுகள்
  • கணினி வணிகம். இதில் ஏற்றுமதிக்கு அரிய வாய்ப்புகள் உள்ளன.
  • மல்டிமீடியா உள்ளிட்ட வரைகலை துறைகள்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருள்கள் உற்பத்தி.
  • ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்.
  • சுற்றுலாத் துறை.
  • பிளாஸ்டிக் மூலப்பொருள்களைக் கொண்டு தொழில் தொடங்குதல்.
  • குடிநீர் வழங்குதல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவுதல்.
  • உணவு, காய்கறி போன்றவற்றைப் பதப்படுத்தும் தொழில்.
  • பூ அலங்காரம், வீட்டு அலங்காரம்.
  • மூலிகைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பொருள்களை விற்பனை செய்தல்.
  • கல்வி பயிற்சி மையங்களை நிறுவுதல்.
  • இயற்கை உரம் உற்பத்தி செய்தல்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நம்மைச் சுற்றியுள்ள பிரச்னைகளும்கூட நமக்கான தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய திறன் படைத்தவை.   ஒரு பெண் சுமாராகப் படித்தவராக இருந்தாலும், மனித தொடர்பு கலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் நல்லதொரு வாய்ப்பை அவரால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு, வீட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் சேவை மையம் தொடங்கலாம். இதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.
இதை ஒரு தொழிலாக செய்வது எப்படி? உதாரணமாக லட்சுமி என்ற பெண்மணி இதை தொடங்க நினைக்கிறார் என்றால் அவர் முதலில் அக்கம்பக்கத்து வீடுகளிலலும் சுற்றியுள்ள வீடுகளிலும் நல்ல நட்பை நாகரிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, ஒவ்வொரு வளமுடைய நகர் பகுதிக்கு அருகிலும் அல்லது அதைச் சுற்றியும் வளமையில்லாத குடிசைப் பகுதிகளோ குடிசைமாற்று வாரியமோ இருப்பது இயல்பான ஒன்று.
சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம்.
லட்சுமி செய்ய வேண்டியது, அதைப் போன்ற குடிசைப் பகுதிகளிலும், குடிசைமாற்று வாரியங்களிலும் சரியான நபர்களை அடையாளம் காண்பது. பிறகு அவர்களைப் பணிக்கு அழைப்பது.  நுணுக்கமாக மனிதர்களை எடைபோட பழகிக் கொள்ளுதல் இதற்கு அவசியம். அருகிலுள்ள காவல் நிலைய உயர் அதிகாரிகளை தொடர்பில் கொண்டு, தன்னுடைய சேவை மையத்தின் நோக்கத்தையும், தான் வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பின்புலத்தையும் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.
அதே போல் சமூகத்தில் பின் தங்கியுள்ள வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி படைத்தவர்களிடமும் பேச வேண்டும். அவர்களை மனித நேயத்தோடு நடத்துமாறு வற்புறுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு முதலில் ஒரு சில நாட்கள், மனிதவள பயிற்சி அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளைக் கண்டறியவேண்டும். அதேப்போல் அவர்களைப் பணிக்கு அமர்த்தும் வீட்டுத் தலைவர்களையும் தலைவிகளையும் சந்தித்து, இவர்களின் பணி குறித்து ஏதேனும் அதிருப்தி உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
இதைப்போன்று நிர்வாக திறமையோடு செயல்பாட்டால் நிச்சயமாக இவரது சேவை மையம் ஒரு நல்ல நிறுவனமாக மாறும் வாய்ப்பு உண்டு. லட்சுமி இத்தொழில் மூலம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது, சுற்றியுள்ள சமூகத்தின் தேவைக்கும் வழி வகுப்பவராக மாறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக