வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

காதலர் தின கொண்டாட்டம் இளம் ஜோடிகள் குவிந்தனர்

சென்னை : காதலர் தினமான நேற்று சென்னை கடற்கரை, சுற்றுலா தலங்களில் இளம் ஜோடிகள் குவிந்தனர். சென்னையில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கியும், முத்த மழை பொழிந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் காதலர் தினம் (வேலன்டைன்ஸ் டே) நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சில அமைப்புகளின் எதிர்ப்புக்கு இடையே, வழக்கத்துக்கு மாறாக காதலர் தினம் இந்தாண்டு களை கட்டியது. கடற்கரை, சுற்றுலா தலங்களில் இளம் ஜோடிகள் பெருமளவில் குவிந்தனர்.தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டை, ரோஜா பூ, சாக்லெட், கீ செயின், தங்க மோதிரம், கை செயின் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். காதல் திருமணம் செய்த ஜோடிகள் தாங்கள் காதலிக் கும் போது சென்ற இடங்களுக்கு சென்று பழைய நினைவுகளை வெளிப்படுத்தினர். சில காதல் ஜோடிகள் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தனர். சில இடங்களில் காதல் ஜோடிகள் மோட்டார் பைக்கில் கட்டி அணைத்தபடி வலம் வந்தனர்.


சென்னையில் காதலர் தினம் காலை 6 மணி முதலே களை கட்ட தொடங்கியது. குறிப்பாக மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள், ஷாப்பிங் மால்களில் காதலர்கள் ஜோடிகளாக உலா வந்த வண்ணம் இருந்தனர். இதேபோல, மாமல்லபுரம் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களில் காதலர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

காதலர்களை நேரில் பார்க்க முடியாதவர்கள் தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்களுக்கு காதல் ரசனை வசனங்கள், கிளுகிளுப்பான காதல் வரிகளை செல்போன், எஸ்எம்எஸ் மற்றும் இ,மெயில் மூலமாக அனுப்பினர். காதலர் தினத்தில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க சுற்றுலா தலம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களை கிண்டல் செய்பவர்களை தடுக்க மாறு வேடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் சென்னையில் பல்வேறு ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகள், பார்ட்டிகளும் நடந்தன. இதே போல் டிவிக்கள், ரேடியோக்களில் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

எதிர்ப்பாளர்கள் கைது: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெரினா விவேகானந்தர் இல்லம் காமராஜர் சாலையில் நேற்று காலை இந்து மக்கள் கட்சியினர் 13 பேர் திரண்டனர். அவர்கள் திடீரென காதலர் தினவாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

பச்சையை காணோம்: காதலர் தினத்தின்போது காதலிக்க நாங்கள் தயார், நீங்கள் தயாரா என்பதை சுட்டிக்காட்டும் வகையில் காதலியோ, காதலனோ கிடைக்காமல் இருப்பவர்கள் பச்சை உடையணிந்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வர். நேற்றைய காதலர் தினத்தில் இந்த பச்சை உடையின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. ஜோடிகளுக்கு இடையில் தனிமை ஆட்களை பார்ப்பது அபூர்வமாக இருந்தது.

திணறியது பதிவு அலுவலகம்

ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம், பாரிமுனை ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. நேற்று காதலர் தினம் என்பதால், வழக்கத்தைவிட இந்த அலுவலகம் களைகட்டி இருந்தது. திருவிழா கூட்டம்போல் 25 காதல் ஜோடிகள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வந்தனர். இதனால், இங்கு விண்ணப்பம் வாங்குவதற்கும், ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கும், சாட்சி கையெழுத்து போடவும், நண்பர்களுடன் பலர் திரண்டதால் பதிவு அலுவலகமே விழாக்கோலம் பூண்டது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக