வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

மலிவு விலை உணவகத்தில் 5,000 பேருக்கு இட்லி சப்ளை

சென்னையில் திறக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், கூடுதலாக 4000 பேருக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 19ம் தேதி 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகத்தில் ஒரு இட்லி (100 கிராம்) ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் (350 கிராம்) 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 1,000 பேருக்கு வழங்கும் வகையில் உணவு தயாரிக்கப்பட்டது. உணவகம் தொடங்கிய அன்று சிறிது நேரத்தில் எல்லா உணவும் தீர்ந்து விட்டன. முதல் நாளில் மட்டும் ரூ.40 ஆயிரம் வரை வசூலானது.
மக்களின் ஆதரவால் 2வது நாளான நேற்று உணவகம் திறக்கப்பட்ட 1 மணி நேரத்தில் சென்னை தி.நகரில் உள்ள உணவகம், சாந்தோமில் உள்ள உணவகத்தில் இட்லி விற்று தீர்ந்தது. அதனால், உடனடியாக ரெடிமேடாக கடைகளில் இட்லி மாவு வாங்கி இட்லி தயாரித்து விற்பனை செய்ய மேயர் சைதை துரைசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இன்று முதல் கூடுதலாக 4 ஆயிரம் பேருக்கு இட்லி மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் ஒவ்வொரு உணவகத்திலும் 5000 பேருக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு கூடங்களை மாநகராட்சி சுகாதார நலத் துறை அலுவலர் (பொறுப்பு) டாக்டர் தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதல்வர் பிறந்த நாளான வரும் 24ம் தேதி ஒரு வார்டுக்கு 1 உணவகம் என்ற வகையில் கூடுதலாக 185 உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக