வியாழன், 14 பிப்ரவரி, 2013

தமிழகம் வந்தது காவிரிநீர் : 5 நாட்கள் தாமதம் 1000 டி.எம்.சி.

பெங்களூரு : சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக அரசு திறந்து விட்டுள்ள காவிரி நீர் இன்று காலை தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. சம்பா பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த 5 தினங்களுக்‌கு முன்னர் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது. அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 1000 க.அ.,தண்ணீர் ஐந்து நாட்களுக்கு பின்னர் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. பிலிகுண்டுலுவில் இருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள மேட்டூர் அணைக்கு இன்று இரவு அல்லது நாளை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படு்கிறது.

தமிழக அரசு கோரிக்கை :
காவிரி டெல்டா பகுதிகளில் கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் கர்நாடகம் 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடகா, தங்களது அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால், தமிழகம் கோரும் தண்ணீரை திறந்து விட இயலாது என மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய நீர்வளக் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான தண்ணீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய வேளாண்மைத்துறை துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார்ஷா தலைமையிலான குழுவினர் காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்களை ஆய்வு செய்த அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர். இதையடுத்து தங்கள் ஆய்வை முடித்துக்கொண்ட அவர்கள், அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், தமிழகத்தில் 14 இடங்களில் தாங்கள் ஆய்வு நடத்தியதாகவும், போதிய நீர் இல்லாததால் குறைவான மகசூலையே விவசாயிகள் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு நாள் மட்டும் பார்வையிட்டு, அறுவடை செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பு, கருகிய பயிர்களின் நிலப்பரப்பு, தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் நிலப்பரப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாது என்றாலும், தாங்கள் பார்த்த வரையில், 50 சதவீத சாகுபடிப் பரப்பில் விவசாயிகள் தங்கள் சாகுபடியை முடித்து விட்டதாகவும், 40 சதவீத பரப்பில் அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவிதம் பயிர்களுக்கே தண்ணீர் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பயிர்களுக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் போதுமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய குழுவினரின் அறிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாண்டியா விவசாயிகள் போராட்டம் :

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி கே.ஆர்.எஸ்., எனப்படும் கிருஷ்ண ராஜசாகர் அணையிலிருந்து, தமிழகத்திற்கு, 3,860 கன அடி தண்ணீரை, கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மாண்டியா மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, "தமிழகத்துக்கு தண்ணீர் விடும் சூழ்நிலை இல்லை' என, தெரிவித்தது. இந்நிலையில் "ஒரு சொட்டு தண்ணீர் கூட விடக்கூடாது. கே.ஆர்.எஸ்., அணையை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது' என, மாண்டியா மாவட்ட, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா வலியுறுத்தினார். கர்நாடக சட்டசபையிலும், காங்கிரஸ், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய சட்டசபை, மேலவை தலைவர்கள் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிடவும் தீர்மானிக்கப்பட்டது. இதனால், மைசூரு கே.ஆர். எஸ்., அணையை சுற்றிலும், 3 கி.மீ., சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தண்ணீர் திறக்க ஒப்புதல் :


மாண்டியாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , ஹூப்ளியில் பேட்டியளித்த முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், "கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையிலும், குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை இருப்பினும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து, தமிழகத்துக்கு தினமும், 3,860 கன அடி நீர் வீதம், எட்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்,'' என்றார். இதையடுத்து, கே.ஆர். எஸ்., அணையின் மொத்தமுள்ள, 16 மதகுகளில், இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதலில், 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, பின், படிப்படியாக அளவு அதிகரிக்கப்பட்டது. தகவல் அறிந்த, மாண்டியா மாவட்ட விவசாயிகள், பெங்களூரு - மைசூரு ரோட்டின் குறுக்கே டயர்களை கொளுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதற்கிடையில், "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மைசூருலிருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, பாத யாத்திரையை, பாதியில் நிறுத்தி விட்டு, கே.ஆர்.எஸ்., அணையை நோக்கி பயணமானார்.

அனைத்துக்கட்சி முடிவு :

காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அனைத்துக் கட்சி குழு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க முடிவு செய்துள்ளது. கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இக்குழு பிரதமரை சந்திக்க உள்ளதாக ஷெட்டர் கர்நாடக சட்டபையில் தெரிவித்துள்ளார். காவிரியில் நீர் இருப்பு நிலவரத்தை பிரதமரிடம் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக