திங்கள், 11 பிப்ரவரி, 2013

மராத்தா சாதி வெறியர்களால் 3 தலித் இளைஞர்கள் படுகொலை !

கொல்லப்பட்ட தலித்துகள்ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.
    ந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி மகராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள திரிமூர்த்தி பவன் ப்ரதிஷ்தான் பள்ளி மற்றும் கல்லூரியில் வேலை செய்யும் மூன்று தலித் இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
    22 வயதான மேத்தார் (வால்மீகி) சாதியைச் சேர்ந்த சச்சின் காரு என்ற இளைஞர் ஆதிக்க சாதி விவசாயி ஒருவரின் மகளை காதலித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதி கும்பல் ஒன்று இந்த படுகொலையை செய்திருக்கிறது.
    அந்த பகுதிக்கு இரண்டு நாட்கள் சென்று விசாரித்த, மகாராஷ்டிராவின் மாநில தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி தூல் “ஒரு துப்புரவுப் பணியாளர் தங்களது மகளை காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க சாதியினர் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்திருக்கின்றனர்” என்கிறார்.

    கொலை செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் திரிமூர்த்தி கல்லூரியில் துப்புரவு பணி செய்து வந்தவர்கள். சச்சின் அவரது அம்மாவுடனும், சந்தீப் அவரது பெற்றோர்கள், மனைவி குழந்தையுடனும் கல்லூரியின் ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தனர். பெற்றோர்கள் இல்லாத ராகுல் கல்லூரி மாணவர் விடுதியில் ஒரு சிறு அறையில் வசித்து வந்திருக்கிறார்.
    இதே கல்லூரியில் படிக்கும் போபட் தரன்டாலே என்பவரின் மகளும் சச்சினும் ஒருவரை ஒருவர் காதலித்திருகின்றனர். தரண்டாலே குடும்பத்தினர் சச்சினை மிரட்டியதாகவும், அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதை கடுமையாக எதிர்த்ததாகவும் சச்சினின் அம்மா சொல்கிறார்.
    கொலையாளிகள் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜனவரி 1ம் தேதி நாள் குறித்திருக்கிறார்கள். அசோக் நாவகிரே என்பவரும் சந்தீப் கூரே என்பவரும் மூன்று இளைஞர்களையும் செப்டிக் டேங்க் தூய்மை செய்வதற்காக சோனாய் கிராமத்தில் இருக்கும் தரண்டாலேவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
    மதியம் 3.45 வரை அவர்களது தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அசோக் நாவிக்ரே அன்று மாலை ‘சந்தீப் செப்டிக் டாங்கில் விழுந்து இறந்து விட்டதாக’  போலீசுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். ‘மற்ற இரண்டு பேரும் சந்தீப்பை கொன்று விட்டு ஓடிப் போய் விட்டதாக’ ஜோடிக்க முயற்சித்திருக்கின்றனர் கொலை செய்த சாதிவெறி பிடித்த ஓநாய்கள்.
    6 அடி உயரமான வலுவான சந்தீப்பின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீஸ் தீவிர தேடுதலுக்குப் பிறகு அருகில் இருந்த வறண்ட கிணறு ஒன்றில் ராகுல், சச்சின் இரண்டு பேரின் உடல்களையும் கண்டெடுத்தது. ஆனால், தலை, கால்கள், கைகள் வெட்டப்பட்டிருந்ததால் சச்சினை முதலில் அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல் உறுப்புகள் இன்னொரு ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.
    ஒரு பெண்ணை காதலித்த ‘குற்றத்துக்காக’ சச்சினை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கின்றனர் அந்த மனித மிருகங்கள்.
    கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆதிக்க சாதியினரின் மிரட்டல்களுக்கு பயந்து அகமது நகரை விட்டு வெளியேறியிருக்கின்றனர். சந்தீப்பின் குடும்பம் மாலேகானில் உள்ள அவரது அத்தையின் வீட்டுக்கு போய் விட்டிருக்கிறது. சச்சினின் அம்மா அருகில் உள்ள பீட் மாவட்டத்தில் இருக்கும் எரந்தோலில் இருக்கும் மகளின் வீட்டுக்கு போயிருக்கிறார்.
    போலீஸ் இதுவரை 5 பேரை கைது செய்திருக்கிறது. போபட், பிரகாஷ், ரமேஷ் மூன்று பேரும் தரண்டாலே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். சந்தீப் குட்டே அவர்களது உறவினர், அசோக் அவர்களது நண்பர். பிரகாஷூம், ரமேஷூம் இந்த கொலைகளில் தாங்கள் உடந்தையாக இருந்ததை போலீசிடம் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
    மராத்தா சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கும் அகமது நகர் மாவட்டத்தில் தொடர்ந்து பல சாதிய வன்கொடுமைகள் நடக்கின்றன. “கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்கிறார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் அருண் ஜாதவ்.
    ஜனவரி 22ம் தேதி ஆதிக்க சாதி வெறியர்கள் 27 வயதான வைபவ் காட்கேயையும் அவரது மனைவியையும் தாக்கி 300 அடி உயர மலையிலிருந்து தூக்கி எறிந்து படுகாயப்படுத்தினர். 5 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆதிக்க சாதி வெறியர்கள் அவரது மாமாவை கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி வைபவ்.
    காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்கள் கும்பல் சதாரா மாவட்டத்தில் தலித்துகளை தாக்கியது. சென்ற வாரம் ஒரு இந்துத்துவா கும்பல் தங்களது உணர்வுகளை புண்படுத்தியதாகச் சொல்லி தூலே மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பேராசிரியரை அடித்து மாடிப்படியில் தூக்கி எறிந்து காயப்படுத்தியது.
    அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் இத்தகைய சாதி வெறியர்களுடன் தொடர்பு வைத்திருப்பதோடு, அவர்களை பாதுகாக்கவும் செய்கிறார்கள். போலீசும் அதிகாரிகளும் இந்த சாதிய வன்கொடுமைகளை இருட்டடிப்பு செய்வதோடு குற்றவாளிகளை தண்டிக்காமல் சுதந்திரமாக உலாவ விடுகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக