வியாழன், 31 ஜனவரி, 2013

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

டில்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனின்றி இறந்து விட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய போலீசின் தவறு என்ற கோணத்திலும், இக்குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்திலுமே இப்பிரச்சினை இன்று விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பான சட்டத்திருத்தங்களை சிபாரிசு செய்ய முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
குஜராத்திலும் மும்பையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் வல்லுறவுக் குற்றங்களை நிகழ்த்தி அவற்றை நியாயப்படுத்தியுள்ள பாஜகவும், வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கும் சமாஜ்வாதி கட்சி அமைச்சர் ஆசம்கானும், ‘பணத்துக்காக பொய் சொல்கிறார்கள்‘ என்று பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களை இழிவு படுத்திய ஜெயலலிதாவும் ‘வல்லுறவுக் குற்றத்துக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும்‘ என்று பேசுகின்றனர். இரவுப் பேருந்துகளை அதிகரிப்பது, இரவுப் பேருந்துகளில் ஊர்க்காவல் படையினரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன. ‘வல்லுறவுக் குற்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்‘ என்று வேறொரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழலின் காவலர்களே ஊழல் ஒழிப்பு பேசுவது போல, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து விட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கான தண்டனையை அதிகரிப்பது போல, பெண்களுக்கெதிரான குற்றங்களை தூண்டுபவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்களும்தான் இன்று தண்டனை அதிகரிப்பு பற்றி பேசுகிறார்கள். மேன்மையான பாரதப் பண்பாடு என்ற பெயரிலான ஆணாதிக்க நிலவுடைமைக் கலாச்சாரம், வல்லுறவுகளை கணவன்மார்களின் உரிமையாக்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களைத் தம் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஆதிக்க சாதியினரின் அதிகாரமாக்கியிருக்கிறது.

கடந்த செப்டம்பரில் அரியானாவில் ஒரு தலித் பெண்ணை சாதிவெறியர்கள் 8 பேர் வல்லுறவுக்கு ஆளாக்கி, வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினர். அந்த வல்லுறவுக் காட்சியை வீடியோ எடுத்து கைபேசி மூலம் சுற்றுக்கும் விட்டனர். இதைக் காண நேர்ந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தலித் பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றங்கள் தண்டிக்கப்படுவதேயில்லை. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவில் இராணுவமும், துணை இராணுவப் படைகளும் நிகழ்த்தும் வல்லுறவுக் குற்றங்கள் சட்டரீதியாகவே பாதுகாக்கப்பட்டு, ‘அமைதியை‘ நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக அரசால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன.
வல்லுறவுக் குற்றத்தின் தலைநகரம் என்று கூறுமளவுக்கு டில்லி இதில் முதலிடம் வகிக்கிறது. தேசிய குற்றப்பதிவுத் துறை அளிக்கும் புள்ளிவிவரத்தின் படி 2011 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான வல்லுறவுக் குற்றங்களில் 17.6% டில்லியில் நடந்திருக்கின்றன. பதிவான குற்றங்களில் 2.46% மட்டுமே தற்போது நிகழ்ந்துள்ளதைப் போல முகம் தெரியாத குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்டவை. 97% வல்லுறவுக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உறவினர்கள் என்கிறது இப்புள்ளிவிவரம். அது மட்டுமல்ல, வல்லுறவுக்கு ஆளானவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் பெண் குழந்தைகள். உண்மையில் நடைபெறும் வல்லுறவுக் குற்றங்களில் ஐம்பதில் ஒன்று மட்டும்தான் புகாராகத் தரப்படுவதாகவும் இப்புள்ளி விவரம் கூறுகிறது.
முன்னேற்றம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள், ஏற்கனவே சாதி ஆதிக்கமும் ஆணாதிக்கமும் நிறைந்த இந்தியப் பண்பாட்டை கள் குடித்த குரங்காக்கியிருக்கின்றன. ஊடகங்கள், தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படும் பாலியல் வக்கிரங்கள், பெண்களைப் பயன்படுத்தி வீசியெறியத்தக்க நுகர்பொருளாக கருதும் போக்கினை வளர்த்து வருகின்றன. நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் இக்கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூவும் குற்றவாளிகள்தான் தண்டனையை தீவிரப்படுத்துவதன் மூலம் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கப்போவதாக நம்பச் சொல்கிறார்கள்.
இத்தகைய பார்வையின்றி டெல்லி சம்பவத்தை வெறும் கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்க வைக்கும் வேலையினை ஊடகங்கள் செய்கின்றன. குற்றமிழைக்கும் கயவர்களை மட்டுமல்ல, அவர்களை தூண்டி விட்டு ஆதாயமடையும் சக்திகளையும் தண்டிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக