புதன், 23 ஜனவரி, 2013

கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தை

கமல்ஹாசன்
நாளை மறுநாள் திரையிடப்படும் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று இசுலாமிய அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில் சற்று பின்னே சென்று பார்க்கலாம்.
முதலில் கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தையை பார்ப்போம். கமல் சினிமாவில் சம்பாதித்ததை முழுக்க இந்தப்படத்தில் செலவழித்திருக்கிறார், அந்த அளவு சினிமாவை நேசிக்கிறார், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு போகத் துடிக்கிறார் என்று கேழ்வரகில் நெய் வடிவதாக சத்தியம் செய்கிறார்கள். விசுவரூபம் தயாரிப்புச் செலவு 90 கோடி என்றால் கமல் இவ்வளவு வருடங்களாக இம்புட்டுதான் சம்பாதித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. விட்டால் டீக்காசு கூட இல்லாமல் கமல் கஷ்டப்படுகிறார் என்று அழுதாலும் அழுவார்கள்.
தொலையட்டும். சினிமா என்பது கலையோ இல்லை உன்னத விழுமியங்களை வளர்க்கும் சமூக நடைமுறையோ இல்லவே இல்லை. அது அப்பட்டமான வியாபாரம். மாபெரும் மூலதனத்தை கோரி நிற்கும் முதலாளித்துவத் தொழில். சரியாகச் சொல்லப்போனால் கிச்சு கிச்சு மூட்டி உணர்ச்சிகளை சுரண்டி கோடிகளில் வயிறு வளர்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்து. ஒருவர் சினிமாவில் இருக்கிறார் அல்லது சினிமாவுக்கு செல்ல ஆசைப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் கலைத்தாகம் கொண்ட யோகி என்பதல்ல. சினிமா தரும் அளப்பரிய பணம், புகழ், போதை, சொத்து, அதிகாரம், பிரபலம் இவைதான் ஒரு நபர் சினிமாவில் இருப்பதற்கு அடிப்படையான காரணம்.

பலரும் இத்தகைய ஆழ்மன வேட்கையை நைசாக அமுக்கிவிட்டு தான் சினிமாவில் போய் உலகத்தை திருத்த பாடுபடுவேன் என்று தேய்ந்த ரிக்கார்டு போல விடுவார்கள். கமலே கூட 70களில் அப்படி பேசியவர்தான். மறைந்து போன அனந்துவுடன் பெல்பாட்டம் போட்ட கமல் மயிலாப்பூர் வீதிகளில் உலக சினிமா குறித்து விவாதித்ததெல்லாம் இன்று ஊசிப்போன பழங்கஞ்சி. தற்போது தானே வெட்கப்படுப்படி தேர்ந்த கலை வியாபாரி ஆகியதை கமல் ஒத்துக் கொள்கிறார் -  கந்தசாமிகள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
இப்படத்தை டி.டி.எச்சில் ஒளிப்பரப்புவதால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என பிரச்சினை வந்த போது கமல் அதிகம் பேசியது என்ன? “இந்த படம் என் சொத்து, நான் விரும்பிய வகையில் வியாபாரம் செய்வேன்” என்றெல்லாம் பேசினாரே ஒழிய இது கலை, தவம், ஆன்மீகம் என்றா பாடினார்? சரி இதையெல்லாம் மீறி கமல் “நாயகனில்” அற்புதமாக நடித்தார், “அவ்வை சண்முகியில்” அட்டகாசமாக மேக்கப் போட்டார், “பஞ்ச தந்திரத்தில்” வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் என்று ரசிக்கிறீர்களா? ரசித்து விட்டு போங்கள். ஆனால் அதற்குமேல் உலகை உய்விக்க வந்த கலைஞானி என்று உருகுவதுதான் சகிக்க முடியாத ஒன்று.
ஒரு நாட்டுப்புறக் கலைஞனைப் போல இலவசமாகவோ இல்லை மலிவான கட்டணத்திலோ சினிமா கலைஞர்கள் தமது திறமைகளை காட்டுவதில்லை. கமலை ரசிப்பதற்க்காக மல்டி பிளக்சில் நீங்கள் செலுத்தும் 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் அவரது பாக்கெட்டிற்கு போகிறது. உங்களை சிரிக்க வைக்க அவர் கட்டணம் வாங்கிக் கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இதனால் இதை வியாபாரம் என்று அழைக்கலாமே ஒழிய கலைச் சேவை என்றால் அது அந்த கலைவாணிக்கே அடுக்காது.
அடுத்து கமல் தமிழ் சினிமாவுக்காக பல தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று கொல்லுகிறார்கள். “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்று சன் டிவியின் ஆம்பளைக் குரல் கூவும் போது தோன்றும் நகைச்சுவைதான் கமலின் முதல் சாகசங்கள் குறித்தும் வருகிறது. தலைக்கு மேல் ஒலிக்கும் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டு வந்தார், டிஜிட்டல் கேமராவை இட்டுக்கிணு வந்தார், கிழவன் மேக்கப்பை ஹாலிவுட்டிலிருந்து பெயர்த்து வந்தார், ஆவிட்டைக் (AVID) கொண்டு வந்தார், ஆத்தாவைக் கொண்டு வந்தார் என்பதில் துவங்கி தற்போது டிடிஎச்சில் முதன்முறையாக ஒளிபரப்பப் போகிறார் என்று துள்ளிக் குதிக்கிறார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள்!
இதெல்லாம் தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையாம்! கமல் போட்ட ரோட்டில்தான் தமிழ் சினிமாவே தடம் புரளாமல் வால்வோ பஸ் போல சொகுசாக பயணிக்கிறதாம். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வருகையை எதைக் கொண்டு அளவிடுவது? கமலைப் போன்ற ஞானிகள் படப்படிப்பின் போது பங்களா வசதி கொண்ட கேரவான்களில் மூச்சா விடும் போது, கழிப்பறைக்கு கூட பல நூறு மீட்டர் தூரம் நடந்து செல்லும் கோடான கோடி மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக கேரவானில் மூத்திரம் பெய்தவர் என்பதற்காக, அந்த கழிப்பறைக் கோப்பைக்கு பூஜை செய்வது கேலிக்கூத்தல்லவா?
பெரும்பான்மை மக்களின் துன்பமான வாழ்வை இதுவரை எந்த நவீனத் தொழில் நுட்பமும் குறைத்ததாக வரலாறு இல்லை. அப்படிக் குறைத்தால் நாம் எந்த தொழில் நுட்பத்திற்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். பீகாரிலிருந்து குடும்பத்தைத் துறந்து இங்கு மெட்ரோ வேலையில் உயிரை இழக்கும் தொழிலாளியின் வாழ்வை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் செல்பேசி என்ன செய்து விடும்? ரோபோட்டிக் எந்திரங்கள் இருப்பதனாலேயே மாருதி தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் அடங்கி விடவில்லையே?
இல்லை தமிழ் சினிமாவில் இவ்வளவு தொழில்நுட்பங்களை கமல் கொண்டு வந்ததால் நாயக்கன் கொட்டாய் தலித் மக்கள் தாக்கப்படாமல் இல்லையே? குறைந்த பட்சம் காதல் இளவரசனது படங்களை பார்த்துக்கூட காதலை தண்டிக்க கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தோன்றவில்லையே? ஆக வாழ்வையும், பண்பாட்டையும் இம்மியளவு கூட கமல் கடத்தி வரும் தொழில் நுட்பங்கள் பண்படுத்தி விடாத போது அதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? இல்லை கமல் படங்கள்தான் அந்த நவீன தொழில்நுட்பத்தால் தமிழ் மக்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டியிருக்கிறதா? பாச மலரில் அழுத தமிழர்களின் கண்கள் மகாநதியில் இன்னும் கொஞ்சம் வீங்கித்தானே போனது?
வாழ்வு குறித்த கூர்மையான தத்துவ நோக்கில்லாமலும், சமூக அக்கறை இல்லாமலும் எவ்வளவுதான் டெக்னாலஜி வந்தாலும் தமிழ் சினிமாவின் அற்பத்தனமான சென்டிமெண்ட் மாறிவிடாது. மேலும் டிடிஎச்சில் ஒளிபரப்ப முயன்றதற்கு காரணம் 150 கோடி வசூலை திரையரங்குகளில் மட்டும் சுருட்ட முடியாது என்ற இலாப நோக்குதான். ஆனால் இன்றைக்கு கமலும், கமல் ரசிகர்களும் இந்த டிடிஎச் நடைமுறைக்கு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறார்கள்.
சற்று வசதி உள்ள நடுத்தர வர்க்கம்தான் டிடிஎச் வைத்திருக்கிறதே அன்றி தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் கேபிள் மூலம்தான் டிவி பார்க்கிறார்கள். தமிழகத்தில் 35 இலட்சம் டிடிஎச் இணைப்புகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இவர்கள் மாதத்தவணையாக கேபிள் டிவி கட்டணத்தை விட சில மடங்கு அதிகம் கட்டித்தான் பார்க்க வேண்டும். இப்படி வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கு வசதி குறைந்த பட்ஜெட் படங்களை கொண்டு போய் வியாபாரம் செய்யலாமாம். விசுவரூபத்திற்கு டிடிஎச் கட்டணமாக தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தார்கள். இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதுப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்க்க முடியும்? விசுவரூபத்திற்கே அப்படி கலெக்சன் கன ஜோராக வரவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்க குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டும் எப்படி வெற்றி பெறும்?
சினிமா என்பது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழில். அது கலை என்பதாக ஏற்கப்பட்டாலும் நிச்சயம் தொழில்தான். சினிமா சந்தையை ஒரு சில முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெயர் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் சிறிய பட்ஜெட் படங்கள் வாழவோ சாகவோ முடியும். அதைத்தாண்டி வேறு அற்புதங்கள் நிகழ்ந்து விடாது.
என் தொழில், என் சொத்து, என் விருப்பம் என்று ஆரம்பத்தில் அடம்படித்த கமலை அதே டயலாக்கை வைத்தே திரையரங்க உரிமையாளர்கள் அடக்கி விட்டார்கள். ஆனால் நமது கமல் பையன்களோ திரையரங்க உரிமையாளர்களை டெக்னாலஜிக்கு எதிரான வில்லன்களாக சித்தரிக்கிறார்கள். என்ன இருந்தாலும் நம்பியாரைப் பார்த்து வில்லன்களை முடிவு செய்பவர்களாயிற்றே! நம்மைப் பொறுத்த வரை முழு தமிழக சினிமாத்துறையும் தமிழக மக்களுக்கு வில்லன்கள்தான். இதில் கமல் தியாகி, அபிராமி ராமநாதன் பாவி என்ற பாகுபாடெல்லம் நம்மிடம் இல்லை. இந்த புரிதலில் இருந்து பார்த்தால் திரையரங்க உரிமையாளர்கள் கமலை அடக்கியது அவர்களே சொல்லிக் கொள்ளும் பிசினெஸ் விழுமியங்களுக்கு உட்பட்டதுதான்.
கமல் தனது படத்தை தனது விருப்பம் போல டிடிஎச்சில் வெளியிடும் போது திரையரங்க உரிமையாளர்கள் தமது விருப்பம் போல கமல் படங்களை இனி வெளியிடுவதில்லை என்று பேசுவதில் என்ன தவறு? அவர்கள் சொத்தில் தனது படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கமல் தார்மீகரீதியாக  கூட கோர முடியாது. ஆனால் டிடிஎச்சில் தான் நினைத்த மாபெரும் கல்லா கலெக்சன் இல்லை என்றதும் கமல் வேறு வழியின்றி முதலில் திரையரங்கில்தான் வெளியாகும், ஒரு வாரம் கழித்து டிடிஎச்சில் வெளியாகும் என்று இறங்கி வந்தார். முதலில் அவர் முண்டியதற்கும் வியாபாரம் காரணமாக இருந்தது போலவே அவர் முடங்கியதற்கும் அதுவே காரணம்.
இடையில் நமது இணைய ரசிகர்கள் பலர் கமலின் புது டெக்னாலஜியில் தமது பெயரும் வரலாற்றில் இடம்பிடித்தே ஆகவேண்டும் என்று ஆயிரம் ரூபாயை பல்வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மொய் எழுதி அதை வேறு பெருமையான டிரைலராக வெளியிட்டு அழகு பார்த்தார்கள். கடைசியில் கமலின் புது டெக்னாலஜியில் ஏமாந்தவர்கள் என்ற பட்டமே வரலாற்றில் காத்திருக்கிறது. அதுவும் கட்டிய பணம் கட்டியதுதான் என்று பல நிறுவனங்கள் கம்மென்று முடித்துக் கொண்டன. எந்த ஆசை காட்டி ஆயிரம் ரூபாயை சுருட்டினார்களோ அந்த ஆசை இல்லை என்றான பிறகும் பணம் திரும்ப வராதாம். இதை எதிர்த்து சண்டை போடக்கூட துப்பில்லாத நுகர்வோராகத்தான் நமது இணைய ரசிகர்கள் வீரம் பேசுகின்றனர். ஆக நவீன டெக்னாலஜி பல பயன்படுத்தும் இந்த டெக் சிங்கங்களை இப்படி அடிமாட்டு ரேட்டுக்கு ஏமாற்றலாம் என்றால் அந்த தொழில்நுட்பங்களால் என்ன பயன்?கமல் ஹாசன் கார்ட்டூன்
துப்பாக்கி படத்திற்கு இசுலாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டியதை வைத்துக்கூட கமல் முன் எச்சரிக்கையாக டிடிஎச்சில் காட்ட நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் வியாபாரி அல்லவா? விசுவரூபம் டிரைலரில் அமெரிக்கா, அமெரிக்க கொடி, அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஹெலிகாப்டர்கள், எஃப் பி ஐ எல்லாம் வருகிறது. கூடவே வில்லன்களாக இசுலாமிய அடையாளங்களும் ஏராளமாக வருகிறது. ஹாலிவுட், ஆஸ்கார் என்று போக வேண்டுமென்றால் இசுலாமிய வில்லன்கள்தான் என்ட்ரி பாயிண்ட் என்று கமல் நினைத்திருக்கலாம்.
உன்னைப் போல ஒருவனில் பாசித்தை முன்மொழிந்த கமலஹாசன் உலகளாவிய கதைக்களன் என்ற பெயரில் சல்லிசாக இருக்கும் இசுலாமியத் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் வியாபாரி என்பதால் எது தற்காலிக வாழ்க்கையில் வில்லத்தனமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறதோ அதை எடுத்தால்தான் பரபரப்பாக இருக்கும் என்பது கமலுக்கு தெரியும். இதற்கு மேல் படத்தைப் பார்க்காமல் எப்படி விமரிசனம் செய்யலாம் என்று சிலர் கேட்கலாம். இல்லை, இங்கே நாம் விமரிசனம் செய்வது கமலின் வியாபார நோக்கத்தை மட்டுமே.
தனது படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை, இசுலாமியர்கள் படத்தை பார்த்தால் பிரியாணி செய்து தந்து ஆதரிப்பார்கள் என்று கமல் பேசிய கையோடு பல்வேறு இசுலாமிய தலைவர்களைகூட்டி படத்தை காட்டியிருக்கிறார். பார்த்தவர்கள் பலர் இப்போது கொலை வெறியோடு இந்த படத்தை எதிர்க்கிறார்கள்.
தற்போது இசுலாமிய அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை கோரி போராடி வருகிறார்கள். இசுலாமிய மதவாதிகள் படத்தைப் பார்த்து அதில் குறியீடாக வரும் இசுலாமிய அடையாளங்களை வைத்து மட்டும் இப்படி முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் கதையின் அரசியலிலிருந்து அதை எடுத்து முன்வைப்பதை நாம்தான் செய்ய முடியும். அதனால் படம் வந்த பிறகு தொடருவோம்.
ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் அடுத்த கட்டமாக விசுவரூபத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபேயாவை உச்சி மோரும் இவர்கள் அதே அமெரிக்காவின் ஆசியோடு வரும் விசுவரூபத்தை எதிர்ப்பதை இறைவன்(PBUH) தான் விசாரிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக விசுவரூபம் படத்தின் சாட்டிலைட் உரிமை, பாடல் வெளியீட்டு விழா உரிமை இதெல்லாம் ஜெயா டிவியிடம் இருப்பதாக வைத்துக் கொண்டால், கமல் கோட்டை சென்று காத்திருந்து அம்மாவை பார்ப்பார். ஒரு வேளை அந்த உரிமைகள் இல்லை என்றாலும் அம்மா மனது வைத்தால் கமலை ஆதரிக்கலாம். என்ன இருந்தாலும் பாபர் மசூதி இடிப்பிற்காக்க தொண்டர்களை அனுப்பியவர் கமலின் துக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பிறகு என்ன, அம்மா போலிசை பார்ப்பார். அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். பிறகு இசுலாமிய மக்களின் சுயமரியாதைக்காக மதச்சார்பற்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள்தான் கமலை கண்டித்து போராட வேண்டும்.
அதற்கு தேவை இருக்கிறதா என்பதை படம் பார்த்த பிறகு தெரிவிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக